




பொதுவே பெண்கள் பொசசிவ்னெஸ் குணம் உள்ளவர்களாக இருப்பதால் மகனும் கணவனும் என இரண்டு நிலைகளில் இருக்கும் ஒருவன் மீது கொண்ட பொசசிவ்னெஸ் இப்போருக்குக் காரணம். வீட்டில் யாருக்கு பொசசிவ்னெஸ் அதிகம் என்ற ஈகோவும் காரணம்.
மருமகளை மாமியார் வேலைக்காரியாக நினைப்பதைப்போல் மருமகனை மாமனாரோ மாமியாரோ வேலையாளாக நினைப்பதில்லை. மேலும் பெரும்பாலோரான மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் இருப்பர். மாமனாரும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதில்லை என்பதோடு எந்தத் தந்தையும் தம் மகளின் வாழ்க்கை (த் துணை)யோடு விளையாடத் துணியமாட்டார் என்பதும் மாமனார் மருமகன் சண்டை இல்லாமைக்குக் காரணமாகலாம்.





அவர் என்ன பெரிய புரட்சி செய்து விட்டார்.?
நடைமுறையில் உள்ள சட்டத்தைச் செயல்படும் சட்டமாக ஆக்குவதற்கு உரிய வழியை உருவாக்கச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தியுள்ளார். முன்னர் ஒரு விடையில் நான் சொன்னதுபோல் குத்து விளக்காக உள்ளார்.


வலிமையான எம் ஜி ஆரும் இந்திரா காந்தியும் நெருக்கடி நிலைக் கொடுமையும் சேர்ந்திருந்தபோது கூட தி மு க அஞ்சவில்லை; அசரவில்லை. இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் தகுதியைக் கூட இழந்து கேவலமான தோல்வியைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் தொண்டர் பலம் கொண்டது தி மு க…
ஊழல் பெருச்சாளிகளையும் உட்கட்சிக் கலகக்காரர்களையும் களையெடுத்துவிட்டு, ஸ்டாலின் தலைமையில் துவக்க காலத் துடிப்புடன் மக்கள் பணி ஆற்றினால் மீண்டும் தி மு க ஆட்சிக்கு வரும்.






ஆனால் மக்கள் இதை உணர்வதாகத் தெரியவில்லை. நான்காம் தூணாகிய பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி லக்னோ நகரின் பல இடங்களில், 1000 கோடி ரூபாய் அரசுச் செலவில் யானைச் சிலைகள் நிறுவியுள்ளார்; கூடவே கன்ஷிராமுக்கும் தமக்கும் அம்பேத்கருக்கும்…..
5.9 கோடி பேர்,வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஊதாரிச் செலவு நடந்ததை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை அகற்றப் போவதாக முலாயம்சிங் யாதவ் சூளுரைத்துள்ளார். மக்கள் பணத்தை வீணாக்குவதில் உ பி யுடன் தமிழ்நாடு சரிசமமாகப் போட்டியிடுகிறது.



கடல்சார் அறிவியல் அறிஞர்களும் பொறியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முயலும்போது, பாஜக மற்றும் அஇஅதிமுக தலைவர்களால் ராமர்பாலம் பெயர் கூறி முட்டுக்கட்டை இடப்பட்டது.
முதலில் அறிவுப்பூர்வமான வாதங்களுடன் நீதிமன்றத்தில் மனுச் செய்த மத்திய அரசு அந்தர்பல்டி அடித்தபின் உங்கள் வினாவுக்கு வலுவில்லை. முதுகெலும்புள்ள வேறு மக்கள் அரசு வந்தால் நம் பிள்ளைகள் / பேரர்கள் காலத்தில் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேறலாம். .




உலக உற்பத்தியில் 70 சதவீதம் எண்டோஸல்ஃபான இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப் படுகிறது. மலிவான எண்டோஸல்ஃபானுக்குத் தடை விதித்து அதை விடப் பன்மடங்கு விலை அதிகமுள்ள புதிய மருந்தை இந்தியாவில் விற்க மேலை நாட்டுக் கம்பெனிகள் செய்யும் சதி எனவும் இந்தியா கருதுகிறது.



அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற தலைவர்களே தனிக்கட்சி நடத்த முடியாமல் கடையை மூடி விட்டுப் பெரிய கட்சியுடன் ஐக்கியமான வரலாறு உண்டு. தி மு க விலிருந்து விலகித் “தமிழ் தேசீயக் கட்சி” நடத்திய சம்பத், தி மு க விலிருந்து விலகி "மக்கள் தி மு க" என்ற ஒரு கட்சியை நடத்திய நாவலர் நெடுஞ்செழியன், அ இ அ தி மு க விலிருந்து பிரிந்து "நமது கழகம்" என்ற கட்சி நடத்திய எஸ் டி சோமசுந்தரம், காங்கிரஸிலிருந்து பிரிந்து “கா கா தே கா” நடத்திய குமரி அனந்தன் போன்றோரை இதற்குச் சான்றாய்க் கூறலாம். ஒரு நோஞ்சான் ஹீரோ பத்துத் தடியர்களைப் பந்தாடும் சினிமாக் காட்சி போல் அரசியல் எளிதானது இல்லை.
தமிழ்நாடு எல்லா நடிகர்களின் பின்னும் செல்லாது. நடிகர்களுள் எம் ஜி ஆர் அரசியல்வாதியாக, சட்டமன்ற உறுப்பினராக, ஆளும் கட்சியின் பொருளாளராக வளர்ந்து அசைக்க முடியா மக்கள் செல்வாக்குப் பெற்ற பின்னரே தனிக்கட்சி துவக்கினார். மிகப்பெரும் நடிகரான சிவாஜி கணேசன், பாக்யராஜ் போன்றோர் கட்சி நடத்தித் தோல்வி கண்டனர். டி ராஜேந்தர் கட்சி என ஒன்றை வைத்திருக்கிறார். விஜயகாந்த், அரசியல்வாதியாக முயன்று இரு கழகங்களையும் விமர்சித்து எதிர்த்துத் தனியாக நின்றதால் மக்கள் ஆதரவு பெற்றார்; இப்போது பெரும் வெற்றி பெற்றுள்ளார். சரத்குமார் கட்சி அ இ அ தி மு க கூட்டணி தயவில், சாதி வாக்காளர்கள் நிறைந்த தொகுதியில் வென்றுள்ளது. இதையெல்லாம் பார்த்தே ரஜினி, பல காலம் தம் ரசிகர்கள் வற்புறுத்தி வேண்டியும் தனிக் கட்சி தொடங்கவில்லை.
இது தான் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை. கட்சி நடத்துவது என்பது பெரும் செலவு பிடிக்கும் சமாச்சாரம். இதில் நடிகைகள் கட்சி துவங்குவதாவது? குறைவான காலமே திரையில் மின்னும் வாய்ப்புள்ள அவர்கள், குறுகிய காலத்தில் முடிந்த அளவு சம்பாதித்துப் பாதுகாப்பாக ஒதுங்கவே விரும்புவர். புத்திசாலிகளான அவர்கள் தனிக் கட்சி துவக்கும் வாய்ப்பில்லை. மக்களும் ஆதரிக்கப் போவதில்லை. வடக்கே ஹேமமாலினி, ஜெயாபாதுரி, ஜெயப்ரதா போன்றோரும் தெற்கே, ரோஜா, குஷ்பூ போன்றோரும் என விரல் விட்டு எண்ணும் அளவு நடிகைகளே அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் தனிக்கட்சி நடத்தும் ஆற்றலற்றவர்கள். பின் எங்கே இருந்து முதல்வர் கனவு? கனவுக் கன்னிகள் வீண் கனவு காண்பதில்லை.
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.Source : http://www.inneram.com/2011052916907/vanagamudi-answers-29-05-2011
No comments:
Post a Comment