Friday, May 13, 2011

கேட்பவர்க்கு வாரி வழங்கும் கிருபையாளன் இறைவன்

அல்ஃபாத்திஹா - தோற்றுவாய்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)


1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.


1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.


1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).


1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.


1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.


1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. 
------------------------------------------------------------------------------

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (40:62)
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:64)
 
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான் ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன். (6: 102, 102)
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள் அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (43:87)


மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? (29: 61)
இன்னும், அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில் "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள் (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள் "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:86,87)

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23: 88,89)

No comments: