Wednesday, January 13, 2021

இசைப் புயலின் வாழ்வில் வீசிய சோகப் புயல்-

 Kanchi Abdul Rauf Baqavi

இசைப் புயலின் வாழ்வில் வீசிய சோகப் புயல்-

அன்புத் தயார் கரீமா பேகம் அவர்களுக்கு தனது மேலான மன்னிப்பை வழங்கி சொர்க்கப் பேற்றை எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக!

அன்பு முகநூல் நண்பர்களே !

சகோதர சகோதரிகளே!

தங்களுடன் அன்பன் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி

புதன் கிழமை 30-12-2020

 நேற்றே எழுதி முடித்தும்  இணைய வசதி  கிடைக்காததால் இன்று பதிவிடுகிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்!

இனி சற்றே நீளமான, ஆனால் சில மென் உணர்வுகளுடன்   கூடிய மானசீகமான புரிதல்களை உணத்தும் இந்த  இரங்கல்  செய்தியை வாசிக்கத் தொடங்குங்கள் :

இசைக் கடலில் மையம் கொண்டு, தான் கடக்கும் கரைகள் தோறும் சூறாவளியாய் சுழன்றடித்து மக்களின் இதயங்களை எல்லாம் சாய்த்துக் கொள்ளை கொண்டு செல்பவராகக் கருதப்படும் இசைப் புயல் ஆர் ரஹ்மான் வாழ்வில் தற்போது ஒரு சோகப்புயல் வீசியுள்ளது.

ஆம்! சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது அன்புத் தாயார் கரீமா பேகம் அவர்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டார்கள்!

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி  ராஜிஊன் !

நாம் இறைவனுக்காகவே வாழ்கிறோம்! அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கின்றோம்!

இந்தத் துயரமிக்க தருணத்தில் என் நினைவுகள் இருபத்து மூன்றாண்டுகள் முன்னோக்கி நகர இந்தப் பதிவை கனத்த இதயத்துடன் என் ஆழ்ந்த இரங்கலாகப் பதிவு செய்கிறேன்.

கவனமாகப் படித்து உங்கள் உணர்வுகளைப் பின்னூட்டமாகப் பதிய வேண்டுகிறேன்.

அது 1996 அல்லது 1997 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

சென்னையில் ரஹ்மத் டிரஸ்ட்டில் அதன் முதல் வெளியீடான, புகழ் பெற்ற நபிமொழித் திரட்டு, ஸஹீஹுல் புகாரியின் தமிழாக்கத்தில் முனைப்புடன் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது.

ரஹ்மத் அறக்கட்டளையைத் தோற்றுவித்து நபிமொழிகளைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்திட வேண்டும் என்னும் பேரார்வத்தில் தமது வசதி வாய்ப்புகளை அப்பணியில் அர்ப்பணித்து செயல்பட்டுக் கொண்டிருந்த, இன்றும் அதற்காகத் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கி வருகின்ற அண்ணன் சிங்கப்பூர் முஸ்தபா அவர்களின் சகோதரரும் , அப்போது ரஹ்மத் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவருமான  தமீம் பாய் அவர்கள் திடீரென்று ஒருமுறை என்னிடம் வந்துவாங்க ரவூப் பாகவி, கொஞ்சம் வெளியே போய் ஒரு முக்கியப் பிரமுகரைப் பார்த்து விட்டு வரலாம்என்று அன்போடு அழைக்க அவர்களோடு அவர்களின் மகிழுந்தில் புறப்பட்டேன்.

ஒரு முக்கியப் பிரமுகர்என்று மட்டும் சொல்லி விட்டு அவர் யார், எதற்காக அவரைப் பார்க்கச் செல்கிறோம் என்று தெளிவாகச் சொல்லாமல் விட்டதால் நான் சற்றே குழப்பத்துடன் தமீம் பாய் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன்.

எங்கள் கார் வடபழனியின் ஒரு தெருவில் சென்று ஒரு சிறு பங்களாவின் முன்னால் நின்றது. அதில் இருந்து இறங்கியதும் அந்த வீட்டின் முன்புறம்பஞ்ச தன்யாஎன்ற பெயர் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு பதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு எங்கோ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகிறதே என்று என் மனதில்  ஏதோ பொறி தட்ட சரியாக எதுவும் நினைவுக்கு வராததால் எனக்கு இன்னும் சற்று குழப்பம் அதிகரித்தது.

அங்கிருந்த வாயிற் காவலரின் அனுமதி பெற்று வீட்டின் ஒரு பக்கமாக இருந்த மற்றொரு வாசலைத் திறந்து கொண்டு நாங்கள் உள்ளே சென்ற போது மேல்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான நவீன ராட்சத இசைப் பதிவு எந்திரங்களும் அவற்றைச் சுற்றிலும் கனம் மிக்க பெரும் பெரும் ஒயர்களும் இருக்க, கால் வைக்கத் தரையில் இடமில்லாத அளவிற்கு அவை தரையில் கொடி போலப் படர்ந்து கிடக்க, நாங்கள் இருவரும் அவற்றைத் தாண்டிச் செல்ல முடியாமல்  தயங்கி நின்றோம்.

 அப்போது அவற்றின் மீது நடந்தே  கூட நீங்கள் செல்லலாம் என்று எங்களுக்கு சொல்லப்பட அவ்வாறே நாங்களும் அவற்றின் மீது நடந்தபடி  அவற்றை தாண்டிச் சென்றோம்.

அங்கு சிறிது தூரத்திலேயே தொழுகை நடத்துவதற்காக ஒதுக்கப் பட்டிருந்த கதவில்லாத ஓர் அறையைக் கண்டு அதற்குள் நுழைந்தோம்.

அங்கிருந்த ஓர் அலமாரியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த திருக்குர்ஆன் பிரதியுடன் முக்கிய நபிமொழி நூல்கள் அனைத்தும் வரிசையாக நேர்த்தியுடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, “ஓர் இசைப் பதிவுக் கூடத்தில் எப்படி இதெல்லாம்?” என்று நான் வியந்தேன்.

பிறகு ஓரிடத்தில் நாற்காலிகள் போடப்பட்டு நாங்கள் தக்க மரியாதையுடன்  அமர்த்தப்பட்டோம்.

சற்று நேரத்தில் அந்த முக்கியப் பிரமுகர்- துடிப்பான ஓர் இளைஞர்- நெற்றியில் வந்து விழுந்து கொண்டிருந்த தன் அடர்ந்த தலைமுடியை ஸ்டைலாக வலக் கையால் தள்ளிவிட்டபடி தனக்கான நாற்காலியில் வந்தமர்ந்தார்!

அவரைக் கண்டதும் மின் அதிர்வுக்குள்ளானதைப் போல்  ஓர் அதிர்ச்சி எனக்குள். அதுவரை செய்தித் தாள்களிலும் சில சமயங்களில் தொலைக்காட்சியிலும் நான் கண்டும் கேள்விப்பட்டும் வந்த, தமிழ்த் திரையுலகிலும் பாலிவுட்டிலும் ஒரே நேரத்தில் தனது இசையால் ஆனந்த அதிர்வுகளை ஏற்படுத்திப் பெரும்புகழ் ஈட்டி வந்த இசையமைப்பாளர் ஆர் ரஹ்மான் அவர்கள் தான் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அந்த முக்கியப் பிரமுகர் என்பதே அந்த எனது அதிர்ச்சிக்கான காரணம்.

அப்போது தான்பஞ்ச தன்யாஎன்பது இசைமேதை . ஆர், ரஹ்மானின் இசைப் பதிவுக் கூடத்தின் பெயர் என்று செய்தித் தாள் ஒன்றில் எப்போதோ படித்தது என் நினைவுக்கு வந்தது.

என்றாலும் அதையும் தாண்டி அந்த திடீர் அதிர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவை அவரைக் கண்டதும் என்னுள் ஓடத்தொடங்கிய இந்த வினோத உணர்வுகள் தாம் :

நான் சார்ந்திருக்கும் சமயத் துறைக்கும் அவர் சார்ந்துள்ள கனவுத் தொழிற்சாலையான திரைத்துறைக்கும் தொடர்பே இல்லையே!

அப்படியிருக்க,  இசைத்துறையில் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்தபடி பொது சமூகத்தில் மிகுந்த பிரபலத்துடன் திகழும் ஓர் இசை ஆளுமையுடன் இப்படியொரு திடீர் சந்திப்பு என்பது எதிர்பாராத ஒன்றல்லவா?

அவரது துறையோ வெகுமக்களின் இதயங்களை மத பேதமின்றி ஈர்த்து தனது இசைத் திறமையால் அவர்களை உவகை கொள்ளச் செய்து மெய் மறக்கச் செய்யக் கூடிய ஜனரஞ்சகமான துறை!

நமது துறையோ ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களை மட்டுமே ஈர்க்கக் கூடிய சப்தமில்லாத துறை!

நமது துறை உலக வாழ்வின் நிலையாமையை மக்களுக்கு நினைவூட்டி, உலக இன்பங்களில் ஆழ்ந்து இறைவனை மறந்து வாழ்வதின் தீய விளைவுகளை எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி கசப்பு மருந்தைப் புகட்டும் துறை!

உலகின் ஆசாபாசங்களில் மூழ்கி விடாமல் படைத்த இறைவனுடன் தொடர்பை வலுப்படுத்தவும் அதன் வழியாக சக மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் உரிமைகளைப் பேணி வாழும்படியும் மக்களுக்கு போதிக்கும் வறட்சியான துறை!

பலரும் அதிகம் செவி கொடுக்க விரும்பாத, உலக இன்பங்களின் சுவைகள் ஏதுமற்ற ஒரு  துறை!,

உலக இன்பங்களில் ஆழ்ந்திருக்கும் வெகு

மக்களிடம் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அதிகம் ஏற்படுத்த முடியாத ஒரு துறை.

இறையுணர்வு மிக்கவர்களால் மட்டுமே ஜீரணிக்க முடிந்த, அதீத ஆசைகளையும் உல்லாச உணர்வுகளையும் கட்டுப்படுத்தி அவர்களைக் காயப்போடும் ஆன்மீகத் துறை!

அவரது துறையோ இசை மழை தேனாகப் பொழிய, ஊடக வெளிச்சம் பாய, மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றுப் பாராட்ட, ஆர்ப்பாட்டங்கள் பல அரங்கேறும் உற்சாக மயமான துள்ளல் ததும்பும் துறை!

நமது துறையோ ஆராவாரங்களோ ஆர்ப்பாட்டங்களோ இல்லாத, அமைதியும் சாந்தமும் ததும்புகின்ற, ஊடக வெளிச்சங்கள் அற்ற, அப்படி அவை வலிய வந்தாலும் ஏற்க இடம் தராத, ஓர் எளிமையான இறைத் தொண்டுக்கான ஒரு துறை!

மக்களை மகிழ்விக்கும் நோக்கம் ஏதுமின்றி இறைதிருப்தி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் துறை!

நமக்கும் இவருக்கும் இடையே சந்திப்புக்கான என்ன காரணம் அல்லது முகாந்திரம்  இருக்க முடியும்? எதனால் இந்த எதிர்பாராத சந்திப்பை இறைவன் ஏற்படுத்தி இருக்கக் கூடும்?

இந்த சிந்தனையோட்டத்துடன் . ஆர். ரஹ்மான் அவர்களை ஏறிட்டு நோக்கிய நான் அவரது கள்ளம் கபடமற்ற குழந்தை  போன்ற  பால் வடியும் முகத்தைக் கண்டவுடன் சற்றே வியந்து போனேன்.

பிறகு அவரே ஒரு மத போதகருக்குத் தர வேண்டிய தக்க மரியாதையை வழங்கியபடி பேச ஆரம்பித்தவுடன் அவரது பேச்சைக் கூர்ந்து கவனிக்கலானேன்.

(வெகு விரைவில் இப் பதிவின் அடுத்த பகுதி

 நாளை காலை பதிவிடப்படும் இன்ஷா அல்லாஹ் )


No comments: