Tuesday, January 5, 2021

21. அத்- தவ்வாப்– மிகவும் மன்னிப்பவன் (21/ 80)



 ---ஏம்பல் தஜம்முல் முகம்மது

அல்லாஹ்தான் மன்னிப்பவன்

நாமோ மிகவும் மன்னிப்பிற்குரியோர்;

அல்லாஹ் முழுமையானவன்,

நாமோ கூத்தாடும் குறைகுடங்கள்.

அறிந்த பாவங்களில் மட்டுமல்ல

அறியாத பாவ வலைகளிலும் சிக்குவது

மானுடத்தின் விதிப்பயனே.

மாறாத விதியல்ல இது;

மனமுருகிக் கண்கலங்கி

மறுபடியும் செய்யேன்என்று

நற்செயல்களிலேநம் நாட்டம் சென்றால்

மாறுகின்ற விதியென்றே

கூறுவது மார்க்கம்.               

கேட்கின்ற மன்னிப்பை

ஏற்கின்ற இறைவா,உன்

ஏற்பில் அல்லவா, இருக்கிறதெம்

ஏற்றமும் மாற்றமும் முன்னேற்றமும்

பரிசுத்த நபி கூட

பாவ மன்னிப்பை

ஒருநாளும் தவறாமல்

உன்னிடத்தில் கோரியதில்

இருக்கிறது ,

எத்தனையோ சூட்சுமங்கள்

கொஞ்சம் சுதந்திரமே

கொடுக்கப்பட்டிருந்தாலும்

தனக்குத் தானே

தீங்கிழைத்துக் கொள்வதில் எதுவும்

மிஞ்ச முடியாது,மனிதனை.

அத்-தவ்வாபின் கதவை

இதயத் துடிப்பால் தட்டி,

இருவிழிநீரால் கழுவி

இம்மை மறுமை வெற்றி கண்டவர்

நம்முடைய தந்தை ஆதம்

ஷைத்தான் பாவம் செய்யத் தூண்டுகிறான்.

அல்லாஹ் மன்னிப்பு பெறக் கற்பிக்கிறான்;

கற்றவற்றைக் கடைப்பிடித்தால்

வெற்றி தர

இரவு,பகல் எந்நேரமும் விரும்புகிறான்

இறைவன்.

பாவங்களை மன்னித்து

தானங்களை ஏற்று

அடியார்களை அங்கீகரிப்பவன்

அல்லாஹ்தான் என்பதை

அறியாதிருப்பதினும்

அறியாமை வேறுண்டோ?

அல்லாஹ்வின் அன்பும் அருளும்

இல்லாதிருந்தால் - அவன்

மன்னிப்பவனாகவும்

ஞானமுடையவனாகவும்

இல்லாதிருந்தால் -

எல்லாமே சிதறிவிடும்

என்றுணர வேண்டாமோ?

பல்கூசப் புளிக்கின்ற மாங்காயும்

பழமானால் இனிப்பது போல்-

திருந்தினால், வருந்தினால், இனித்

திரும்பவும் பாவம் செய்யேன்என்று

திடங்கொண்டு நின்றால்

அந்த அடியார்க்கு

மன்னிப்பு என்னும் மகுடமுண்டு,

இம்மையிலும் மறுமையிலும்

----------------------------------------------------------------------

திண்ணமாக அல்லாஹ்   பாவமன்னிப்புக் கோருதலை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான்(04:16) “

***********************************************************************

பாலைவனத்தில்   காணாமல் போன ஒட்டகத்தை மீண்டும் கண்டவன் அடையும் மகிழ்ச்சியைவிட, பாவமன்னிப்பு கோரும்   தன் அடியாரைக் குறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சியடைகிறான் (புகாரி,முஸ்லிம்)”

===========================================


---ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments: