Monday, January 18, 2021

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை

 Abrar Ahmed(Anbuman Abrar)

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை .மனிதர்களில் பாம்பு, தேள், கழுகு ,கழுதை ,குரங்கு ,குள்ளநரி, ஓநாய், செந்நாய் ,சிங்கம் ,புலி முதலை ..எல்லா வகையும்   தான் உண்டு .

இவர்கள் மத்தியில் தான் வாழ வேண்டியிருக்கிறது .கொஞ்சம் அசந்தாலும் நம் கதையை முடித்து விடுவார்கள் .

கவிஞர் யுகபாரதியுடன் தஞ்சை முதல் வத்தலக்குண்டு வரையிலான மகிழுந்து பயணத்தில் எவ்வளவோ பேசினோம் .ஆனால் என் மனதில் தைத்த கவிஞரின் இந்த யோசனையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

பிரச்சினைக்குரிய நபர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டால் அவர்களோடு வாதமோ சண்டையோ வெறுப்போ காட்டாமல் பக்குவமாக நழுவி விடுங்கள் என்றார் கவிஞர் .

விலகிவிட சொல்கிறீர்களா என்றேன் ."இல்லை நழுவி விட சொல்கிறேன் .நாம் விலகுகிறோம் என்ற உணர்வுகூட அவர்களுக்கு வராமல் நழுவி  விடுங்கள்" என்றார் .

அவர்களுக்கு பாடம் புகட்டுவது பழிவாங்குவது தேவையில்லாதது வாழ்க்கை அவர்களுக்கு அதை செய்து விடும் என்றார் .

பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு ;முகத்தில் உமிழ்ந்துவிடு ;என்ற பாரதியாரின் வாக்கை நாம் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை .

அது வேறு இது வேறு .

தம்பி ஜாஃபரின் "உயிராடல் " கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு நானும் நண்பர் ஹாஜா கனியும்  அழைத்ததன் பேரில் மிகுந்த பணி நெருக்கடிக்கு இடையே நேரம் ஒதுக்கிய கவிஞருக்கு பேரன்பும் நன்றிகளும் .

 இளம் கவிஞனை அரவணைத்த பெருங்கவிஞர் யுகபாரதி.

தன்னுடைய முதல் தொகுப்பான           " மனப்பத்தாயம் "எப்படி தன்னுடைய வாழ்வையே மாற்றியதோ ,அப்படியே தம்பிக்கும் அமையட்டும் என்ற கவிஞரின் வாழ்த்திற்கு தம்பி கடமைப்பட்டுள்ளார்   .      

பேசிக்கொண்டே நீண்ட பயணம் செய்யலாம் என்ற நெடுநாளைய ஆசை இந்த பொங்கல் விடுமுறையில் நிறைவேறியது .

கவிஞர் யுகபாரதி இடமிருந்து பெற்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஏராளம் இருக்கிறது .

சொல்வேன் எழுதுவேன் .


 Abrar Ahmed(Anbuman Abrar)




No comments: