Wednesday, May 8, 2019

அன்புச் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.

நாகூர் ரூமி
ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது பசியை உணர்வதற்காக மட்டும் அல்ல. உணவில்லாமல் நாம் உண்ணாமலும் குடிக்காமலும் இருக்கவில்லை. உணவை வைத்துக்கொண்டே நோன்பிருக்கிறோம். இறைவனுக்காக என்ற நிய்யத்துடன். எனவே சுய கட்டுப்பாட்டை இது நமக்குக் கொடுக்கிறது.

கொஞ்சமாக உண்டு, கொஞ்சமாகப் பேசி, கொஞ்சமாக உறங்கி, கொஞ்சமாக சமூகத்தில் பழகினால் நாம் இறைநெருக்கத்தை அடையலாம் என்பது இறைநேசர்களின் உபதேசமாகும். அந்த வகையில் இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்த வல்லது இந்த நோன்பு.

வாட்ஸப்பில் ஒரு வீடியோ கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனக்கு வந்தது. பாலஸ்தீனமென்று நினைக்கிறேன். ஒரு குழந்தையை யாரோ பேட்டி எடுக்கிறார். பெயர் கேட்கிறார். சொல்கிறது. காலையில் சாப்பிட்டாயா என்கிறார். அது பதில் சொல்லவில்லை. பகல் சாப்பிட்டாயா என்கிறார். அது பதில் சொல்லவில்லை. பின் திடீரென்று அழ ஆரம்பித்து விடுகிறது. ஏழெட்டு வயது இருக்கும். பெண் குழந்தை. காலையிலும் பகலிலும் சாப்பிட அதற்கு உணவு கிடைக்கவில்லை.

அந்தக் காணொளி என்னைப் பிழிந்தெடுத்தது. ஒவ்வொரு முறை தொழுகைக்குப் பின்னர் “யா அல்லாஹ், எந்தக் குழந்தையும் உணவில்லாமல் பட்டினி கிடக்க விட்டு விடாதே” என்று பிரார்த்தனை செய்தேன். இன்னும் செய்கிறேன். என்னால் இப்போது முடிந்தது அதுதான்.

நோன்பு தொடங்க இருக்கும் நேரத்தில் எனக்கு அந்தக் குழந்தையின் முகம்தான் நினைவில் ஆடுகிறது. எந்தக் குழந்தையும் பட்டினி கிடக்காமல் இருக்க நாம் அனைவரும் இந்த ரமலானில் நோன்பிருந்து பிரார்த்தனை செய்வோமாக.

No comments: