Sunday, May 19, 2019

#உமர்_ரலி_வாழ்க்கை_வரலாறு அபு ஹாஷிமா


அத்தியாயம் - 7
#நீதியின்_காவலர்

நபிகள் ( ஸல் ) அவர்களால்
கொண்டு வரப்பட்ட ஏகத்துவ இறைநெறி குன்றின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட ஒளியாக பிரகாசித்தது !

மக்காவிலிருந்து வெளியேறிய
மஹ்மூது நபிகளை
மதினா
மார்போடு அணைத்து
வரவேற்றது
இஸ்லாத்தை மார்க்கமாக
ஏற்றது !



கண்மணி ரஸூலுல்லாஹ்வால்
கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அரசு அபுபக்கர் (ரலி ) அவர்கள் காலத்திலும் உமர் ( ரலி )அவர்கள் காலத்திலும் பேரரசாக விரிவடைந்தது.

உலகின் மாபெரும் வல்லரசுகளாக
இருந்த பாரசீகப் பேரரசும் ரோமானியப் பேரரசும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

பெரும் புகழ் பெற்ற சக்கரவர்த்திகள்
என்று தங்களைப் பற்றி மார்தட்டிக்கொண்ட ஆட்சியாளர்கள் காணாமல் போய் விட்டார்கள்.

உலகின் மாபெரும் சாம்ராஜ்யமாக எழுந்து நின்றது இஸ்லாமிய சாம்ராஜ்யம்.

லட்சக்கணக்கான வீரர்களை கொண்ட
எதிரிப்படைகளை
ஒரு சில ஆயிரம் பேர்களே கொண்ட
முஸ்லிம் படைகள் எதிர் கொண்டு வெற்றி வாகை சூடிய சாதனைகளை உலகின் எந்த வல்லரசும் இன்றுவரை முறியடித்துக் காட்டவில்லை.

அகிலத்தையே
ஆட்டிப் படைத்தவர்கள்
ஆடுமேய்த்த அரபிகளிடம்
தோற்றுப் போனது
வரலாற்று அதிசயம் !

கலீபா உமர் அவர்களின் ஆட்சியில்
இஸ்லாமியப் பேரரசின் பரப்பளவு
இருபத்து இரண்டரை லட்சம்
சதுர மைல்கள்.
இத்தனை பெரிய நிலப்பரப்பை வெற்றி கொள்வதற்காக முஸ்லிம்கள் எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு சில வருடங்கள் மட்டுமே.

உலகின் மிக முக்கிய பகுதிகளையெல்லாம் வெற்றிகொண்ட மாமன்னர் உமர் அங்கெல்லாம் தனது பிரதிநிதிகளாக ஆளுநர்களை நியமித்தார். வேகமான தகவல் தொடர்பு வசதிகள் எதுவுமில்லாத அந்த நாட்களிலும் மதினாவில் இருந்து கொண்டு
மாபெரும் பேரரசை மாசுபடாமல் நடத்திக்காட்டியவர் உமர்.

உமரின் ஆட்சி காலத்தில்தான் அரசு கஜானா ஏற்படுத்தப்பட்டது.
நிலவரி வசூலிக்கப்பட்டது.
முஸ்லிம்களிடம் ஜக்காத் வரியும்
முஸ்லிமல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரியும் வசூல் செய்யப்பட்டது.
ஜக்காத் வரியை விட
ஜிஸ்யா வரி குறைவு என்பது
உமரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு.

ஜிஸ்யா வரி கட்ட முடியாத ஏழைகளுக்கு அரசு நிதியிலிருந்து உதவி வழங்கப்பட்டது என்பது அவரது ஆட்சியின் தனி சிறப்பு.
இன்று உலகெங்கும் ஏழைகளுக்கு
அரசு வழங்கும் உதவிகளின்
முன்னோடி வழிகாட்டி உமர் அவர்களே.

உமரின் அரசு கஜானா நிரம்பி வழிந்தது.
உடனுக்குடன் அது காலியாகவும் ஆனது.
ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவதற்காகவே அரசு கஜானா
இயங்கிக் கொண்டிருந்தது.
அது நிரம்பி இருப்பதைவிட காலியாக இருப்பதையே உமர் அதிகம் விரும்பினார்.

உமரின் நீதி புகழ் பெற்றது.
நீதமானது.
ஏழை - பணக்காரன்
முஸ்லிம் - முஸ்லிமல்லாதவன்
என்ற பாகுபாடு எதுவுமில்லாமல்
மக்கள் அனைவருக்கும் சமநீதி வழங்கிய ஆட்சியாளர் உமர் அவர்கள்.

மதுவருந்துவது மாபெரும் குற்றம்.
அதற்குத் தண்டனை
எண்பது கசையடிகள்.
இது இஸ்லாமிய ஆட்சியின் சட்டம்.
யூதர்கள் ஒருநாள் சூழ்ச்சி செய்து
உமர் அவர்களின் அருமை மகன்
#அபுசஹ்மாவை மதுவருந்த வைத்து விட்டார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ மதுவருந்தினால் அது குற்றம் என்பது
மக்கள் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

அபு சஹ்மா மது வருந்திய விவகாரம்
கலீபாவின் அரசவைக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றவாளி தன் மகன் என்று தெரிந்தும் அபு சஹ்மாவுக்கு எண்பது கசையடிகள்
தண்டனை வழங்கி உத்தரவிட்டார் கலீபா உமர் ( ரலி ).
அதையும் கூட மற்றவர்கள் நிறைவேற்றினால்
அபு சஹ்மா கலீபாவின் மகன் என்பதற்காக சரியாக அடிக்காமல் விட்டு விடுவார்களோ என எண்ணி
தனது கையாலேயே தண்டனையை நிறைவேற்றினார்.

அபு சஹ்மா இறந்து போனார்.
இறைவன் முன்னால் தன் மகன்
குற்றவாளியாக எழுப்பப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த
தந்தை உமர் ....
மகனுக்காக வருந்தினார்.
மகனின் மறுமைப் பேறுக்காக
இறையை அழுது தொழுது இறைஞ்சினார்.

உமரின் உதவியாளர்
ஒரு கிறிஸ்தவர் !
அவரிடம் இஸ்லாத்தை ஏற்கச் சொன்னார் உமர்.
அவரோ ..
கிறிஸ்தவராக இருக்கவே பிரியப்பட்டார்.
" மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை "
என்று கூறி அவரை அவர் வழியிலேயே விட்டு விட்ட
#மத_நல்லிணக்க_மாமனிதர்_உமர்.

உமரின் ஆட்சி காலத்தில் அடிமை முறை ஒழித்து கட்டப்பட்டது.
முஸ்லிமல்லாதவர்கள் தங்கள்
மத விருப்பப்படி வாழ அவர் அனுமதித்தார்.
முஸ்லிம்கள் தங்கள் மத நெறிப்படி வாழ வலியுறுத்தினார்.

உமரின் நீதியும் மத சகிப்புத் தன்மையும் உலகுக்கே நீதி போதனைகளாய் இருந்து கொண்டிருக்கின்றன.

அதனால்தான் ....
உலகிலுள்ள உத்தமர்களெல்லாம் தங்கள் நாடுகளிலும் உமரின் ஆட்சியை போன்றதொரு ஆட்சி நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் !

இன்ஷா அல்லாஹ்
தொடரும்

Abu Haashima

No comments: