Wednesday, May 8, 2019

விரும்பும் உடையை தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை


புர்கா விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும்

மதவாத அமைப்புகள், பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறேன்

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் பாத்திமா முஸப்பர் அறிக்கை

இந்தியாவில் தான் விரும்பும் உடையை தேர்ந் தெடுத்து அணிவது அவரவரின் அடிப்படை உரிமை என்றும், புர்கா விவகாரத்தை அரசியல் ஆக்க நினைக்கும் மதவாத சக்திகள் மற்றும் பா.ஜ.க.வினருக்கு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினருமான பாத்திமா முஸப்பர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


விரும்பும் ஆடையை அணிவது இந்தியாவில் அடிப்படை உரிமை. புர்காவை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேவையற்ற விவாதங்களை நடத்தும் சில ஊடகங்களை வன்மையாக கண்டிக் கின்றேன்.

மதவாதத்தை கொள்கை யாக கொண்ட சில அரசியல் கட்சிகள் சர்ச்சைக்குரிய புர்கா தடை குறித்து வீண் பிரச்சினைகளை எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து இந்தியாவில் எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் அல்லது அரசு அமைப்புகளும் விவாதம் எதையும் நடத்தவில்லை. இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்கள் எதிலும் புர்கா அணிந்தவர்கள் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆதாயம் தேடி இந்த புர்கா விவகாரத்தை பா.ஜ.க. மற்றும் சில மதவாத அமைப்புகள் தவறாக பயன்படுத்துகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் செயல்படுகின்றனர். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சப்பாட்டில் குறிப்பாக சிவசேனா போன்ற கட்சிகள் ஈடுபடுகின்றன. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை.

முஸ்லிம்கள் யாரும் புர்காவை தவறாக பயன்படுத்துவதில்லை உலகில் மற்றவர்கள்தான் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் புத்த மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்தான் புர்கா அணிந்து அந்த செயலில் ஈடுபட்டார்.

பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று வரும் இந்த முக்கியமான நேரத்தில் நமது நாடு எந்த பாதையை நோக்கி செல்கிறது என்பது குறித்து நமக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவதை விட்டுவிட்டு இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய கொடுமை?

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு போன்றவை குறித்து பேசுவதற்கு பதில் முஸ்லிம் பெண்களின் ஆடையான புர்கா குறித்து பேசுவது எவ்வளவு அபத்தமானது என்பதை ஒரு பெண் என்ற முறையில் தெரிவிக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு புர்கா விவகாரம் பற்றி தலைவர்கள், சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் மதவாத உறுப்பினர்கள் பேசுவது எவ்வளவு முட்டாள் தனமானது.

எந்த முஸ்லிம் நாட்டிலும் புர்காவிற்கு தடை விதிக்கப் படவில்லை. இதுதொடர்பான ஆதாரமற்ற வதந்திகளை சில ஊடகங்கள் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற தேவையற்ற விவாதங்களை நான் வன்மையாக கண்டிக் கின்றேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

#MediaWing_IUML_TN

No comments: