Tuesday, May 21, 2019

பத்ருப்போர் .... அபு ஹாஷிமா

#பத்ருப்போர் ....
அபு ஹாஷிமா

பெரும்பான்மையை வெற்றி கண்ட
சிறுபான்மையின் வீர வரலாறு !

இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வு பத்ருப்போர் !

பத்ர் என்ற இடத்தில் ரமலான் பிறை 17 ல் நடந்தது பத்ருப்போர். நபிகள் ( ஸல் ) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்த பிறகு அண்ணல் நபிகளையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள் குறைஷிகள். ஒரு சந்தர்ப்பத்தில் ஹள்ரமி என்ற குறைஷி வணிகர் சில மதீன முஸ்லிம்களோடு ஏற்பட்ட தகராறில் இறந்து போனார். அதற்குப் பழிவாங்குவதற்காக குறைஷிகள் கொந்தளித்தார்கள். 1000 பேர் கொண்ட படையை கூர்தீட்டிய குறைஷித் தலைவன் அபுஜஹல் அதற்குத் தானே தலைமை தாங்கி மதீனாவை நோக்கி அழைத்து வந்தான். குறைஷியர் படையெடுத்து வருவதை அறிந்த நபிகள் ( ஸல் ) அவர்கள் மதீனாவில் வைத்து போர் நடப்பதை விரும்பவில்லை. அதனால் அவர்களும் ஒரு சிறு படை திரட்டி மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். அதில் வெறும் முன்னூற்றுப் பதின்மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றனர். இரு படைகளும் மக்காவின் பக்கத்திலுள்ள " பத்ர் " என்னும் இடத்தில் சந்தித்துக் கொண்டன.



*
பத்ருக் களத்தில்
உறவுகளும் உதிரங்களும்
எதிரும் புதிருமாய்
வாளேந்தி நின்றன !
*
இஸ்லாத்தின் ஆரம்ப எதிரிகள்
ஒரே தோட்டத்தில் பூத்த உறவு மலர்கள் !

*
குறைஷிப் படையில் ...
அண்ணலை அரவணைத்து வளர்த்த
அபூதாலிபின் பிள்ளை தாலிப்
அலியாரின் இளவல் அகீல்
நபிகளாரின் சிறிய தந்தை அப்பாஸ்
அபூபக்கரின் அன்புமகன் அப்துர் ரஹ்மான்
உமரின் மாமனார் அல் ஆஸ்
அண்ணலின் மருமகன் அபுல் ஆஸ்
இன்னும் எத்தனை எத்தனையோ
உறவுகள்
தங்கள் ரத்தத்தின் ரத்தங்களையே
ருசி பார்க்க
வாளெடுத்து வந்திருந்தார்கள் !
*
சிறு படையாய் வந்த முஸ்லிம்களில்
வாழ்க்கைப் பயணத்தை முடிக்கும்
பாதையிலிருந்த
முதியோர்கள் பலர்
வறுமையில் வாடிய
இளைஞர்கள் சிலர் !
*
மலைக்கு எதிரே
வெறும் மணல் மேடாய்
வெறும் முன்னூற்றுப் பதின்மூன்று பேர் !
*
இரவு
பத்ரை போர்த்தியது !
*
குறைஷியர் கூடாரங்களில்
நாளைய வெற்றியை
இன்றே கொண்டாட ஆரம்பித்துக்
குடித்தார்கள் !
கும்மாளமிட்டார்கள் !
குவிந்து கிடந்த இருட்டுக்குள்
கண்களை மூடாமல்
இரவெல்லாம் குதூகலித்தார்கள் !
மகிழ்ச்சிக் கண்ணீரில் நனைந்தார்கள் !
*
நபிகள் பெருமானோ ...
முஸ்லிம்கள் மேல்
உறக்கத்தின் போர்வையைப்
போர்த்தி விட்டார்கள்
தான் மட்டும்
இறைப் பாதத்தில்
வீழ்ந்து கிடந்தார்கள்
*
வல்லோனின்
உதவி கேட்டு
விழி நீரால்
கடிதம் வரைந்தார்கள் !
*
குறைஷிகளும்
கோமான் நபியும்
மிதந்தது என்னவோ
கண்ணீரில்தான் !
ஆனால்...
குறைஷிகள்
கனிகளைப் பிழிந்த
மதுவின் நீரை
வயிற்றுக்கு வார்த்தார்கள் !
நபிகளோ
விழிகள் உகுத்த கண்ணீரை
இறைவனுக்கு வார்த்தார்கள் !
*
அல்லல்பட்டு ஆற்றாது அழுத
அண்ணலாரின் கண்ணீருக்கே
ஆண்டவன் ஆட்பட்டான் !
*
ஆர்ப்பரித்த கடலான
அண்ணலின் நெஞ்சுக்கு
அமைதியும் தந்தான் !
*
திங்கள் உதிப்பதைப்போல
வெற்றி வருவதும் நிச்சயம்
என்பதை
அண்ணல் அறிந்து கொண்டார் !
*
நடைபெற இருக்கும் போருக்கு
உடல் குளித்து
வெளிச்ச ஆடை உடுத்தி
நடுவராய்ப் பொறுப்பேற்க
கதிரவன்
புறப்பட்டு வந்தான் !
*
எழுநூறு ஒட்டகங்கள்
நூறு போர்ப் புரவிகள்
கவசங்கள் அறுநூறு
மின்னும் வாட்கள்
பல நூறோடு
குறைஷிகள் ஆயிரம் பேர்
அணிவகுத்து நின்றனர் !
*
வெற்றிப் பரணிப் பாடி வந்த
வட்டப் பறையடிக்கும் பெண்களின்
கொஞ்சும் கண்களில்
குறைஷி வீரர்கள்
சிங்கக் குட்டிகளாய்த் தெரிந்தார்கள் !
*
முஸ்லிம்களோ ...
ஐந்து குதிரைகள்
எழுபது ஒட்டகங்கள்
ஆறு கவசங்கள்
எட்டு வாட்களோடு மட்டுமே
களத்திற்கு வந்திருந்தனர் !
*
எதிரிப் பெரும்படையைக் கண்ட
நபிகளின் இதயம்
மீண்டும் ஒருமுறை அதிர்வுக்கு ஆளானது !
தாங்கள் குடியிருந்த குடிலுக்குள்
நுழைந்தார்கள்
இறைவன் சந்நிதியில்
நெற்றி நிலம் பதித்து
நிலவரம் சொன்னார்கள் !
*
" இப்படை அழிந்தால்
இஸ்லாம்
ஆலமரமாகாது
அடியற்ற மரமாய் அழிவுறும் !
இறைவா ...
உன்னைத் தொழுது வாழ
மண்ணில் யாரிருப்பார்
என் தலைவா ?"
என அழுதார்கள் !
*
சிரம் பணிந்து கிடந்த
பெருமானாரை
சிறு தூக்கம் ஒன்று
ஆட்கொண்டது !
*
அந்தத் தூக்கத்தில்
இறைவன் தன் தூதரின்
துக்கத்தை அகற்றினான்
வெற்றி வரும் செய்தியை
அறிவித்தான்
போர்க்களம்
சந்திக்கவிருக்கின்ற
விந்தைமிகு காட்சிகளை
விவரித்தான் !
*
ஐம்பத்தைந்து வயது அண்ணல்
இருபது வயது இளைஞராய்
எழுந்து வந்தார் !
கண்களில் வீரம் குளிக்க
வேங்கைபோல் நடந்து வந்தார் !
*
தீட்டப்படுகின்ற வாட்கள்
சிதற விடுகின்ற
தீச்சுடராய்
தீரரின் வார்த்தைகள்
தெறித்து விழுந்தன !
*
" விரைவில்
இவர்களின் கூட்டம்
சிதறடிக்கப்படும் "
இறைவன் அறிவித்த
வேத வரிகளை
நபிகள்
வீரியத்தோடு வெளியிட்டார் !
*
" புறமுதுகு காட்டாதவரும்
வீர மரணம் அடைபவரும்
உயர்ந்த சொர்க்கத்தின்
உன்னதப் பரிசுகளைப்
பெற்றுக் கொள்வர் "
இறைவன் மேல் ஆணையிட்டு
அண்ணல் நபி வாக்களித்தார் !
*
முஸ்லிம்கள்
வீர முழக்கமிட்டனர் !
*
குறைஷிகளின்
குத்தீட்டிக்கும்
கொடுவாளுக்கும்
குருதி காட்ட
நெஞ்ச மேடுகளை
நிமிர்த்திக் கொண்டு
நிமிர்ந்து வந்தனர் !
*
விண்ணிலிருந்து இறங்கி வந்த
புதுச் சூரியனாய்
பெருமானார் வலம் வந்தார் !
*
" மண்ணில் சாவோம்
சொர்க்கத்தில் எழுவோம்
அதற்கு முன்னால்
ஆயிரம் போரையும் சாய்ப்போம் !"
*
உடைந்த வாளோடும்
உறுதியானத் தோளோடும்
சிலிர்த்தெழுந்தது
சிறுத்தையர் கூட்டம் !
" அல்லாஹு அக்பர் "
கிளர்ந்தெழுந்தது
இறை முழக்கம் !
*
ஹல்றமியின் தம்பி ஆமிர்
அண்ணனின் கொலைக்குப்
பழி வாங்க
ஆவேசமாய் வந்தான் !
*
உமரின் அடிமை மிஹ்ஜா
ஆமிரை எதிர் கொண்டார்
முதலை வாய் விழுந்த முயலாய்
மிஹ்ஜா
கிழிந்து போனார் !
*
கூடி வந்த முதல் வெற்றிக்கு
மதுவுண்ட நரிகளாய்
குறைஷியர் கூட்டம்
குதூகலித்தது !
*
குறைஷிகளின் உபதலைவர்
உத்பா
தம்பி ஹைபாவோடும்
பெற்ற பிள்ளை வலீதோடும்
வாள் சுழற்றி வந்தார் !
*
சாவப்போவது தெரியாமல்
சவால் ஒன்றும் விடுத்தார் !
*
குறைஷி குலத்தவன் தன்னோடு
குறைஷியே மோத வேண்டும் என்றார் !
*
உபைதா
ஹம்சா
அலீ
என்ற மூன்று
குறைஷி முஸ்லிம் சிங்கங்களை
அண்ணல் களமிறக்கினார் !
*
வீரத்தோடு
வீரமே பொருதியது !
குறைஷி வீரர்கள்
ஹைபாவும்
வலீதும்
வேங்கை வாய் பட்ட
வெள்ளாடுகளாய்
மடிந்தார்கள் !
*
தம்பியும்
தனயனும்
மடிந்துபோன
வேதனைத்தீயோடு
உத்பா
தீப்பந்தமாய்
சுழன்று வந்தார் !
உபைதாவின் எழிலுருவை
பல உருவாய்க் கூறு போட்டார் !
*
குற்றுயிராய் குலைந்து கிடந்த
உபைதாவை
அலீ
எடுத்து வந்து
அண்ணலின் மடிமீது
சாய வைத்தார் !
*
உபைதா ...
" வீர சொர்க்கம் நான் பெற்றேனா ?"
எனக் கேட்டார் !
" ஆமாம் " என்ற
அண்ணலாரின் பதிலுக்கு
அல்லாஹ்வைப் புகழ்ந்தபடி
உபைதாவின்
ஆவி பிரிந்தது !
*
ஹம்சா -
வீரம் பெற்றெடுத்த
வெற்றி மகன் !
*
பத்ருப் பள்ளத்தாக்கில்
வீரம்
களம் புகுந்தது !
ஹம்சாவின் வாள் வீச்சில்
அனலும் கனலும்
பொறி பறக்க
தலைகளாய் வீழ்ந்தன !
*
உபைதாவை வீழ்த்திய
உத்பாவின் தலை
ஹம்சாவின் வாளுக்குத்
தரை இறங்கி வந்தது !
*
மகனோடு போரிட்டார்
அபூபக்கர் !
மாமனார் நெஞ்சுக்கு
உமர்
குறி வைத்தார் !
*
முஸ்லிம் காளையர்
துடிப்போடு
களம் புகுந்தனர் !
குறைஷித் தலைகளை
கொய்து வந்தனர் !
*
ரத்தமும் ரத்தமும்
குலமும் குலமும்
ஒன்றையொன்று
அழிக்கும்
ஆவேசத் தாக்குதலில்
தந்தை மகனென்றும்
உறவு நட்பென்றும்
உணர்வுக்குள் நுழையாமல்
உயிரை மட்டும்
உருவி எடுக்க
மும்முரமாய் முயன்றார்கள் !
*
குறைஷிகளின்
கோபக்காரத் தலைவன்
அபூஜஹலை
முஅவ்விது
முஆது
என்ற
அன்சாரிச் சிறுவர்கள்
தேடிப்பிடித்துக் கொன்றார்கள் !
*
அபூஜஹல் மகன்
இக்ரிமா
முஆதை
வாள்கொண்டு வெட்டினான் !
*
வெட்டுப்பட்ட கரம்
கீழே விழாமல்
அறுபட்ட ஆட்டின்
தலைபோல்
தொங்கிக் கொண்டிருந்தது !
*
முஆத்
இடது கையை
வலது காலால்
மிதித்துக் கொண்டார்
வலது கையில் வாளெடுத்து
இடது கையை
அறுத்துக் கொண்டார் !
எஞ்சி இருந்த ஒரு கரத்தால்
எதிரிகள் பலபேரை
சாவூருக்கு
அனுப்பி வைத்தார் !
*
முஸ்லிம்களை
தேடி வந்து
சூழ்ந்து நின்றது வெற்றி !

*
" இறைவன்
நம்மோடு இருக்கின்றான் !
வானவரும்
நம் அணியில் நின்று
போரிடுகின்றார்கள் "
அண்ணலார் சிந்த விட்ட
வாயுரைக்கு
தங்கள்
வீரமிக்க வாளுரையால்
குறைஷியர் உடலில்
சாவுரை எழுதினார்கள் முஸ்லிம்கள் !
*
வாடிப்போன மாலையாய்
குறைஷியர் கூட்டம்
ஒருநாள் மாலைக்குள்
உதிர்ந்து போனது !
*
குறைஷிகளின்
பெரும் தலைகள்
தரையில் புரண்டன !
*
வெட்டுண்ட தலைகளில்
இறப்பிலும் அழியாத
ஆணவத்தின்
உயர்ந்தத் தலையாய்
அபூஜஹல் தலை நிமிர்ந்து நின்றது !
*
எதிரிகள் எழுபது பேர்
சுவாசத்தைத் துறந்தார்கள் !
மற்றோர் எழுபது பேர்
முஸ்லிம்களிடம்
கைதிகளாகி
சுதந்திரத்தை இழந்தார்கள் !
*
திறந்து வைக்கப்பட்ட
சொர்க்கத்திற்கு
முஸ்லிம்கள்
பதினாறுபேர்
வழியனுப்பி வைக்கப்பட்டார்கள் !
*
இறைவன்
தான் வாக்களித்த வெற்றியை
முஸ்லிம்களுக்கு
வழங்கி விட்டான் !
*
பத்ரு -
போரப்பியாசக் களமல்ல...
அது ஒரு விளை நிலம் !
விளையும் கதிர்களை
அழிக்க வந்த பதர்களை
இறைவனே
களையெடுத்த
விவசாயக் களம் !
*
இங்குதான்
இஸ்லாத்தின்
முதல் வெற்றி விளைந்தது !
*
படை பலத்தாலும்
குலப் புகழாலும்
தட்டிப் பறிக்க முடியாத
வெற்றியை
நபிகள்
கண்ணீரால்
இறைவனிடமிருந்து
பெற்றுக் கொண்ட
முதல் களம்
பத்ருப் போர்க்களம் !

*

பெரும்பான்மை பலம் காட்டி
சிறுபான்மை முஸ்லிம்களை
அடக்கவோ
அழிக்கவோ
முடியாதென்பதை
உலகுக்கே
உணர்த்திக் காட்டிய
முஸ்லிம்களின்
வெற்றிக் களம் !

*
இஸ்லாமிய வரலாற்றில்
வைரத்தின் ஜொலிப்பாய்
தன் பெயரைப்
பதிவு செய்து கொண்ட
வீரத்தின்
விளை நிலமாய்
என்றென்றும் பத்ரு ....

*** படம் :

பத்ருப் போர்க் களம்

அபு ஹாஷிமா

No comments: