Sunday, June 25, 2017

🎉நான் கண்ட பெருநாட்கள்...!!!

Samsul Hameed Saleem Mohamed 
என் வாழ்நாளில் சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சந்தித்த ஒவ்வொரு பெருநாளையும் நான் என்றுமே மறக்கமுடியாது! அதுவும் பால்ய காலத்தில் கொண்டாடி குதூகலித்த அந்த பெருநாட்களை எண்ணும் போதே மனதிலிருந்து ஆசை அருவி அப்படியே அளவின்றி வழிந்தோடி ஆற்பரித்து காத்து நிற்கும்!
நோன்பு தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே பெருநாளைக்கு தேவையான புதுத்துணிமணிகளை தேர்வு செய்ய அம்மாவின் கைபிடித்து மாயவரம் சென்ற நாட்கள் மறக்க முடியாதவை!

புதுத்துணிகளை தேர்வு செய்து வாங்கிவிட்டால் ஏதோ கிடைத்தற்கரிய ஒரு பொருள் கிடைத்துவிட்ட சந்தோசம் அப்போது! அதை சக நண்பர்களிடம் சொல்லி ஆனந்தப்பட்ட அந்த அழகான தருணம் இருக்கிறதே அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! புதுத்துணிகளோடு அப்போது புது தொப்பியும் வருடந்தோறும் வாங்கிக்கொடுப்பார்கள் பெற்றோர்கள்! நாகூர், காரைக்கால் பகுதியை சேர்ந்த நம் நானா மார்கள் விதிவிதமான வண்ணங்களில் தொப்பியை கொண்டு வந்து விற்பார்கள்! அந்த தொப்பியும் கூட அப்போதைய பெருநாட்களுக்கு ஒரு அடையாளம்!
எல்லாவற்றையும் வாங்கி வைத்துவிட்டு என்று வரும் பெருநாள் என்று காத்திருந்த அனுபவம் இருக்கிறதே அதை இப்போதைய வீடியோகேம் தலைமுறை ஒருகாலும் உணராது! எதிர்பார்த்திருந்த பெருநாள் வந்ததும் அந்த புத்தாடைகளை உடுத்தி பள்ளிவாசலுக்கு சென்று தொழுது வந்தபின் காலை உணவை சாப்பிட்டும் சாப்பிடாமலும் வீட்டில் உள்ளவர்களும் உறவினர்களும் அண்டை அயலாரும் கொடுத்த பெருநாள் காசை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக எங்கள் அரங்ககுடி-வடகரைக்கு என்றே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்படும் பெருநாள் கொல்லைக்கு ஓடிய நாட்களை இனி மனக்கண் முன் ஓட்டினாலே உண்டு!
ராட்டினம், குடைராட்டினம், குமரவேல் சர்பத் ஸ்டாலின் ஐஸ் சர்பத் மற்றும் விளையாட்டு சாமான்கள் என்று இருக்கும் காசையெல்லாம் செலவழித்து மகிழ்ந்த நாட்கள் மறக்கமுடியாதவை! மூன்று நாளைக்கு போடப்படும் அந்த பெருநாள் கொல்லை கடைத்தெருவிலேயே செல்லும் எங்கள் பெருநாள் கொண்டாட்டங்கள்! அத்துடன் ஊர் சார்பாக நடக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை கண்டு திளைப்பதும் உண்டு நண்பர்களுடன்!
அன்றைய பெருநாட்கள் அப்படித்தான்! சந்தோசம் என்பதை ஒரு இம்மி அளவுகூட பிசகவிடாமல் அனுபவித்த நாட்கள் அவை! அந்த நாட்களை நோக்கி இனி செல்வதற்கு வாய்ப்பில்லை! சென்றதை இனி சுவையுடனும் தாளாத ஆதங்கத்துடனும் இப்படி எழுதி அசை போட்டால் உண்டு!
காரணம் வளைகுடா வாசத்தை தேர்ந்தெடுத்த என் போன்றோருக்கு எஞ்சி நிற்பது இவைகள் மட்டுமே! காலையில் தொழச்சென்று கண்ணில் கண்டவர்களுக்கு ஈத் முபாரக் சொல்லி மதியம் ஆனதும் பிரியாணியை சாப்பிட்டு அதை உண்ட மயக்கத்தில் கொஞ்சம் உறங்கினால் அதுவே எங்களுக்கான இன்றைய பெருநாள்!
தாய் தந்தையர் சில நூறுகளை செலவழித்து வாங்கிக்கொடுத்த புதுக்கைலியும், சட்டையும் மற்றும் தொப்பியும் அப்போது தேடிக்கொடுத்த சந்தோசமும் கூட இன்று ஆயிரங்களை நான் செலவு செய்து வாங்கி அணியும் சட்டையும் பேன்ட்டும் கொடுக்க மறுக்கிறது.
பெருநாள் வருடந்தோறும் இருமுறை வருகிறது ஆனால் நான் அன்று அனுபவித்த பெருநாள் இதுவரை வரவே இல்லை!
அது ஒரு கனாக்காலம் என்பதைவிட இனி என்றும் காணவே முடியாத காலம்!!!! 💞
படம்: முகநூல் நட்பின் வழியே!

Samsul Hameed Saleem Mohamed 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails