Wednesday, June 21, 2017

ஒரு நோன்பாளியின் மரணம் ...

Abu Haashima

உதுமான் ( ரலி ) அவர்கள் கலீபாவாக இருக்கும்போது நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டன.
கலகக்காரர்கள் கலீபாவின் வீட்டை சுற்றி முற்றுகை இட்டிருந்தார்கள்.
அது ஹஜ்ஜுடைய காலம்.
ஹஜ்ஜுடைய காலத்தில் யாரும் கலவரம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்களை ஹஜ்ஜுக்கு செல்ல அனுப்பி வைத்தார்
கலீபா உதுமான் ( ரலி ) அவர்கள்.
கலீபாவுக்கு ஆதரவான சஹாபிகள் மதீனாவில் இல்லாத நிலையை பயன் படுத்திக் கொண்ட கலவரக்காரர்கள் கலீபாவின் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்தார்கள்.
கலீபா உதுமான் அவர்களுக்கு வயது 82 . அறிவு முதிர்ச்சி பெற்ற பெருமகனார் அமைதியாக உட்கார்ந்து குரான் ஓதிக் கொண்டிருந்தார்.
" வயது முதிர்ச்சியால் மூளை மழுங்கிப்போனக் கிழவரே ... " என்று கூறிக் கொண்டே உதுமான் அவர்களின் நீண்ட தாடியை பற்றிப் பிடித்து இழுத்தார் ஒருவர்.
அவர் வேறு யாருமல்ல...
அபூபக்கர் சித்தீக் ( ரலி ) அவர்களின் அன்பு மகன் முஹம்மதிப்னு அபூபக்கர்தான்.

கலீபா உதுமான் அவர்கள் சிரித்துக் கொண்டே ...
" என் சகோதரரின் மகனே ... இந்தத் தாடியைத்தான் அழகாக இருக்கிறது என்று உங்கள் தந்தை கூறியிருக்கிறார். " என்றார்.
உதுமான் அவர்களின் சொல்லில் வெட்கப்பட்டுப்போன முஹம்மது இப்னு அபூபக்கர் தாடியை விட்டு விட்டு ஓடி விட்டார்.
காபகீ என்பவன் வாளை எடுத்து கலீபா அவர்களை வெட்டினான்.
" அல்லாஹ் ..." என்று சொல்லியபடி குரானை நெஞ்சோடு அணைத்து கீழே சாய்ந்தார் கலீபா.
இன்னொருவன் ஓடி வந்து உதுமான் அவர்களின் முதிர்ந்த உடம்பில் ஒன்பது முறை ஈட்டியால் குத்தினான். பெரியவரின் உடம்பிலிருந்து குருதி வழிந்தது.
சவ்தா பின் ஹம்ரான் என்ற சண்டாளன் உதுமான் அவர்களின் தலையை வெட்ட வாள் வீசினான்.
அதை தடுக்க முற்பட்ட கலீபாவின் மனைவி நாயிலாவின் நான்கு விரல்கள் துண்டாகி விழுந்தன.
கினானா என்பவன் தனது வாளால் கலீபாவை ஓங்கி அடித்தான்.
அண்ணலாரின் ஆருயிர்த் தோழராய் அவர்களின் கலீபாவாய் குரானைத் தொகுத்த பெருந்தகையாய் கொடை வள்ளலாய் திகழ்ந்த உதுமான் ( ரலி ) அவர்கள் உயிரற்று வீழ்ந்தார்கள்.
உயிரிழந்த கலீபாவின் உடலை
கொலைவெறிக் கொண்ட கயவர்கள் சுற்றி நின்று வாட்களால் வெட்டி சிதைத்தார்கள்.
உடலை மூன்று நாட்கள் அடக்கவிடாமல் தடுத்தார்கள்.
இரவு நேரத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போதும் கற்களால் தாக்கினார்கள்.
உதுமான் அவர்கள் வாழ்வின் இறுதி நேரத்தில் நோன்பாளியாக இருந்தார்கள்.
பல நாட்களாக உணவோ தண்ணீரோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
கண்ணயர்ந்த ஒரு பொழுதில் நபிகளார் கனவில் தோன்றினார்கள்.
" உதுமானே எங்களோடு நோன்பு திறக்க வருகிறீர்களா ?" என்று நபிகளார் கேட்டபோது " வருகிறேன் " என்று சந்தோஷமாகச் சொன்னார் உதுமான்.
எதிரிகள் தாக்கியபோதும் பெருமானாரைக் காணப்போகும் ஆவலில் கலீபா அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கவேயில்லை.
மிகப்பெரிய இஸ்லாமியப் பேரரசின் ஆட்சியாளராக
இரக்கமுள்ளவராக
கருணையும் கண்ணியமும் மிக்கவராக
வாழ்ந்த உதுமான் ( ரலி ) அவர்கள்
எதிரிகளுக்கும் இரக்கம் காட்டியே இறந்துபோன ஒரே தலைவர்.
அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டவர்கள் வெறும் பதினேழுபேர் மட்டுமே.
" அவர்களைப் பற்றி உங்களுக்கு பயம் வேண்டாம் .
அல்லாஹ் போதுமானவன். அவன் ( அவர்களின் சூழ்ச்சியான சொற்களை ) செவியுறுவோனும் ( அவர்களின் வஞ்சகங்களை ) நன்கறிவோனுமாக இருக்கிறான் "
கலீபா உதுமான் ( ரலி ) அவர்கள் வாளால் வெட்டுப்படும்போது அவர்கள் ஓதிக் கொண்டிருந்த இறைமறை வசனம் இதுதான்.
ஆம் ... உதுமான் அவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails