Wednesday, March 29, 2017

மனுஷ்யபுத்திரன் வீடு கிடைக்காததற்கு ....

M.m. Abdulla
மனுஷ்யபுத்திரன் வீடு கிடைக்காததற்கு வருந்தி எழுதிய கட்டுரையை பலரும் மிகைப்படுத்தி எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். அவரை விடுங்கள். என் கதைக்கு வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அயல் நாட்டில் இருந்து வரும் தனது மகனுக்கு வீடு தேவைப்படுவதாய் சொல்லி காலி செய்ய முடியுமா என்று இந்த மாதம் ஆரம்பத்தில் கேட்டார்.
அக்ரிமென்ட்படி நவம்பர் வரை காலம் இருக்கிறது. இருப்பினும் பொருளுக்கு உரியவர் அதைக் கேட்கும் போது குடுக்க வேண்டும் என்று முகமது இஸ்மாயில் என்னை சொல்லிச் சொல்லி வளர்த்ததால் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் காலி செய்து தருவதாக வாக்கு குடுத்தேன். முகமது இஸ்மாயில் யார் என்று யோசிப்பவர்கள் என் இனிஷியலைப் பார்க்கவும்
துவங்கியது வீடு தேடும் படலம். நண்பரிடம் சொன்னேன். "எனது ஃபிளாட்டிலேயே ஒரு வீடு இருக்கிறது.. நான் சொன்னால் ஓனர் கேட்பார்..டோன்ட் ஒர்ரி" என்றார். அடுத்த நாள் வந்து " என்னண்ணே முஸ்லீம்னா குடுக்க மாட்டேன்னு" அந்த ஆள் சொல்றாரு என்று அதிர்ச்சியாக என்னிடமே கேட்டார். புன்னகைத்து திரும்பினேன். அந்த நண்பர் சிறீராஜா சொக்கர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர்.
இதன் பிறகு லாயிட்ஸ் ரோட்டில் ஒரு வீடு பார்க்கச் சென்றேன். கூடவே நண்பர் கார்த்திக். பேரைக் கேட்ட உரிமையாளர் முஸ்லீம்ஸ்க்கு தர்றதில்லைங்க என்றார்! கார்த்திக் மட்டும்தான் கடுப்பானார். நான் இல்லை.
ஒரு விசயம் கவனிச்சு இருக்கீங்களா? என்னிடம் பழகும் அத்தனை பேரையும் அண்ணன் அக்கா என்றும் வயதில் சிறியோரையும் வாங்க போங்க என்றும் அழைப்பேன்.வெகு சிலரைதான் வா போ என்பேன். அப்படி ஒருத்தி திவ்யா. அண்ணனுக்காக வீடு பார்க்க கிளம்பி புரோக்கர்களிடம் அண்ணனுக்காக இன்னமும் பேசிக்கொண்டு இருக்கிறாள். நோ யூஸ். சத்தியமாய் என் பெயர் ராசி மட்டும்தான் காரணமாய் இருக்கிறது.
எப்படியும் சொன்ன வாக்கின்படி வரும் 15 பதினைந்தாம் தேதிக்குள் வீட்டை ஒப்படைத்து விடுவேன். அதற்குள் வீடு கிடைக்காவிட்டால் தெருவில் நின்றாவது குடுத்து விடுவேன். எனக்கு வீடு வழங்காத உரிமையாளர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. காரணம் என்னைத் தாங்குவது சிறீராஜாக்களும், கார்த்திகளும், என் அன்பு திவ்யாகளும்.

M.m. Abdulla
கீழே உள்ளதை சொடுக்கி (கிளிக் செய்து) அவசியம்  படியுங்கள்
எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?

No comments: