Monday, March 6, 2017

நாம் வசதி என்று பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனமும் நம்மை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றது.

Shahjahan R


மகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி குழந்தை பிறந்தது. பிஎல்கே மருத்துவமனையில் செல்போனில் படம் பிடித்தேன். குழந்தையின் படத்தில் கையை மட்டும் பேஸ்புக்கில் பதிவிட்டேன்.
பேஸ்புக்கில் படம் போட்ட அடுத்த நிமிடத்தில் இப்படிக் கேட்டது - Add BLK Super Speciality Hospital as the location?
கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படம் எடுத்த நேரத்தில் ஜிபிஎஸ் ஆனில் இருந்ததால், அதிலிருந்துதான் கண்டுபிடித்திருக்கும் என்று புரிவதற்கு சற்று நேரமானது.
நாம் வசதி என்று பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனமும் நம்மை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றது.
இதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருக்கையில், கே.எஸ். சுரேஷ் குமார் இன்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
*
கூகிள் எனும் சனியன்
கணினி அல்லது ஒரு ஆண்ட்ராயிட் மொபைல் வாங்கினால் அதில் தயாரிப்பாளர்களின் பிரத்யேக செயலிகளில் கணக்கு துவக்கும் படி வடிவமைத்திருக்கிறார்கள். உதா Mi, IPhone உள்ளிட்ட நிறுவங்கள் அந்த சாதனத்தை துவங்கும்போதே இணையத்தில் உள்நுழைந்து ஒரு கணக்கு உருவாக்கி மேகக்கணினி யுகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதன் அநுகூலங்களாக சிலதைச் சொல்லலாம். நம் காண்டாக்ட் நம்பர்களை சேமிப்பதில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை ஒரு முறை கணக்கில் உள்நுழைந்து விட்டால் நம் கணக்கிற்கென ஒதுக்கியிருக்கும் சில ஜிகா பைட் ஸ்டோரேஜ்களில் சேமித்துவிடுகிறது. இதனால் எத்தனை ஃபோன் மாற்றினாலும் பிரச்சினை இல்லை. ஆயிரம் நம்பர்கள் என்றாலும் ஒவ்வொன்றையும் காபி பேஸ்ட் செய்யத்தேவையில்லை.

இன்னும் பல மொபைல்களில் ஆன் செய்தவுடனேயே உனக்கு கூகிள் அக்கவுண்ட் இருக்கிறதா இல்லையெனில் புதிதாக திறந்துகொள் என்று கிட்டத்தட்ட கட்டளையிடுகிறது. இதை கடந்துவிடலாம் என்றாலும் இணைய இணைப்பை சரிவர உபயோகிக்க முடியாது. சில அப்ளிகேஷன்கள் ஆதரவு தராது. இந்த கணக்கிற்குஅம் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளுக்கும் உள்ளூற ஒரு இணைப்பு இருக்கிறது. அதாவது காண்டாக்ட்ஸ் அல்லாது இன்னும் சில வசதிகள் கால் லாக்ஸ், சென்ற இடங்கள் புகைப்படங்கள் என சின்க் செய்து அவ்வப்போது தகவல் தரும்.
உதா: ஒருமுறை ஒரு தியேட்டருக்கு சென்று வந்தால் மறுநாள் பக்கத்து ஊருக்குச் சென்றால்கூட இங்கேயும் ஒரு தியேட்டர் இருக்கிறது முயற்சிக்கிறாயா என அக்கறையாக சஜஸ்ட் செய்யும். அதாவது யூட்யூபில் ஒருமுறை அரைநிர்வாணப் படம் பார்த்தால் போதும் க்ளவுட்களில் உங்கள் செயற்பாடு பதிந்து விடும். மனைவி ஊருக்குப் போன சமயம் புரண்டுபடுத்து கூகிள் செய்யும்போது இன்னொரு பிட்டுப் படத்தைக் காட்டி உங்களுக்கு பிடிக்கும் என்று மனைவி நமக்குப் பிடித்த பட்ஷிணம் செய்வதுபோல் அக்கறையாக கூட்டிக்கொடுக்கும். உங்கள் நண்பர்களிடத்தில் கூட பகிராத விஷயங்களை இது பின் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். சமயங்களில் எடுத்துச் சொல்லி உங்களிடம் விசுவாசத்தைக் காட்டும். இப்போது அசந்து மசந்து ஒரு கெட்ட செல்ஃபி எடுத்து நீங்களே பார்த்து உடனடியாக அழித்தாலும் கூட அதன் ஒரு நகலை உங்களுக்கு விசுவாசமான நாய்க்குட்டியான க்ளைவுட் சேமித்து வைத்துக் கொள்ளும்.
சிலவருடங்கள் முன்பு வரை எஸ்.டி கார்ட்கள் மூலமாக் செல்ஃபோன் சர்வீஸ் செய்யும் ஆட்கள் அதன் தரவுகளை இறக்கி வெளியிட்டு வந்தார்கள். அந்த வேலையை இப்போது கூகிள் போன்ற க்ளவுட் சர்வர்கள் செய்கின்றன. இது மாத்திரமல்ல. உங்கள் வங்கி நெட்பேங்கிங்க் கணக்கின் பாஸ்வேர்டுகளைக் கூட நியாபகம் வைத்திருந்து உங்களுக்குச் சொல்கின்றன. நம்மை முழுக்க முழுக்க ஒரு இயந்திரமாக ஆக்கி அந்த இயந்திரத்தை மனிதர்களாக்குகிறார்கள்.
ஒருகாலத்தில் தேடல் எந்திரமாக மட்டுமே இருந்துவந்த கூகிள் இப்போது பத்துக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை வைத்திருக்கிறது. நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்கள் கணினியில் அல்லது ஆண்ட்ராயிட் மொபைல்களில் இருக்கும்படி டீஃபால்ட்டாக செட் செய்திருக்கிறார்கள். நீங்கள் அழிக்கவே முடியாத அசுரன் அது. மெல்ல உங்களுக்கு கைகட்டி சேவகம் செய்ய வந்தவன் போல உள்ளே வந்த கூகிள் இப்போது உங்கள் இடத்தை மொத்தமாக ஆக்கிரமித்திருக்கிறது. சில வருடங்களில் உங்கள் டேட்டவை திண்று கொழுத்து உங்களை உங்கள் மூளையோடு இணைந்துகொள்ளப் போகிறது.
நகக் கண் அளவுள்ள சிப்கள்தான் இதென்ன செய்துவிடப்போகிறது என்று இருந்துவிடமுடியாது. உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒரு அந்து ஜிபி ஸ்பேஸில் சந்தி சிரிக்கவைத்துவிடும்.
*
அதில் கருணாகரன் கமென்ட்
பிக் டேட்டான்னு ஒரு கருத்து ரொம்ப வருஷமா பேசப்பட்டுகிட்டு இருக்கு. பெரும்பான்மை கவனத்துக்கு இது வரலை..
விஷயம் என்னன்னா, கடை விரிச்சுட்டு கொள்வாருக்காக காத்திருந்த காலமெல்லாம் கடந்துபோய் நவீன யுகத்துல கொள்வாரை நாமே உருவாக்கிக்கலாமேன்னு பன்னாட்டு, இந்நாட்டு நிறுவனங்கள் அறிவியல் வழிமுறைகளை கையில் எடுத்ததுதான்...
ஒவ்வொரு தனி மனிதனையும் பிரதி நொடியும் கண்காணிச்சு அவனோட விருப்பங்கள், ரசனை சார்ந்த செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பயணங்கள் போனது போகப்போறது, இன்னபிற எல்லாத்தையும் கனினி வழி கண்காணிச்சு அவனோட தேவை என்னன்னு சுலபமா கண்டுபுடிச்சு அதை நோக்கி மறைமுகமா உந்தி கொண்டு செல்வதே பிக் டேட்டாவோட அடிப்படை அம்சம்...
இப்பவும் ஃப்ளிப்கார்ட் அல்லது அமேஸான்ல ஒரு பொருளை தேடினீங்கன்னா பல மாசத்துக்கு நீங்க இணையத்துல எங்க உலவினாலும் அந்த பொருளை வாங்கிக்கறீங்களான்னு காண்பிச்சுட்டே இருப்பானுங்க..ஒரு சந்தோஷ மனநிலையில அல்லது தேவைக்கதிகமா கையில காசு இருக்கும் சூழல்ல அந்தப்பொருள் தேவையோ இல்லையோ டிஸ்கவுண்ட் கிடைக்குதேன்னு ஆர்டர் போட்ருவோம்..உண்மையில் டிஸ்கவுண்ட் எனபதே ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேளை..அதை இன்னொரு நாளைக்கு பார்ப்போம்..
பிக் டேட்டா தியரி படி நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சானிய தட்டையாக்கி உங்களுக்கு ஈஸியா விற்க முடியும்..இந்த விஷயத்துக்கு ஆணிவேரா இன்னொன்னு இருக்கு..அமெரிக்காவில் சிகரெட் விற்பனை ரொம்ப மந்தமாக இருந்த காலகட்டத்துல விற்பனைய அதிகப்படுத்த இதற்கான நிபுணனை அணுகியிருக்காங்க...அவர் சொன்ன யோசனைப்படி நாடெங்கும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு, தினசரிகளில் விளம்பரம் செய்யப்பட்டு பின்னாடி சிகரெட் விற்பனை பிச்சுகிட்டு போச்சுதாம்..என்ன விளம்பரம்னா பெண்கள் ஏன் சிகரெட் பிடிக்க கூடாது? சுதந்திரத்தின் உச்சம் சிகரெட்டை உடனே கையிலெடுங்கள் என்பதே... இதுக்காக செயற்கையா வாடகைக்கு பெண்களை அமர்த்தி கையில் சிகரெட்டோட ஊர்வலமும் நடத்தப்பட்டிருக்கு...
Shahjahan R 

No comments: