Sunday, March 5, 2017

மக்கா ...

Abu Haashima


மக்கா ...
சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது.
மக்காவை சுற்றிலும் மலைகள்.
காலைச் சூரியனின் கதிர்கள் பட்டு
மாலையிலும் உலைக்களம்போல்
கொதித்துக் கொண்டிருந்தது
அந்த புனித நகரம்.
கொஞ்ச நஞ்சமிருந்த பயிர் பச்சைகளும்
கருகிக் கொண்டிருந்தன.
கால்நடைகள் குடிக்க நீரின்றி
தவித்துக் கொண்டிருந்தன.
வெயிலைத் தாங்க முடியாமல்
சின்னக் குழந்தைகள்
வாடி வதங்கிக் கொண்டிருந்தன.
மக்களெல்லாம் திரண்டு மக்காவின் தலைவர்
அபுதாலிப் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
" அபு தாலிப் அவர்களே வாருங்கள்....
இறைவனிடம் மழை கேட்டு பிரார்த்திக்க வாருங்கள் "
என்று அழைத்தார்கள்.
அபுதாலிப் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அவரது தோளில் ...
" மேகம் மறைக்காத
சூரியனின் பிரகாசமுள்ள
ஒரு சிறுவர் அமர்ந்திருந்தார்."

மக்கா நகர் மக்களும் ஏராளமான குழந்தைகளும்
அபுதாலிபை சூழ்ந்து நின்றனர்.
தன் தோளிலிருந்த குழந்தையை எடுத்து
அதன் முதுகை
தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து
யா அல்லாஹ் ... மழைகொடு என்று
இறைவனிடம் அபுதாலிப் பிரார்தித்தார்.
கோப முகம் காட்டிய சூரியனின் முகம்
குழந்தை முகம் கண்டதும்
சாந்த முகம் காட்ட ஆரம்பித்தது.
தன் மேனியை கறுப்பு புர்கா அணிந்து
மூடிக் கொண்டது.
ஹோவென பெருமழை பெய்ய ஆரம்பித்தது.
பாலை நிலமெங்கும்
பால்போல் மழைவெள்ளம்.
கால்வாய்கள் வயிறு நிறைந்தன.
மரங்களெல்லாம் மழைநீராடி மகிழ்ச்சியில் திளைத்தன.
கால்நடைகளெல்லாம் ஆனந்த கூச்சலிட்டன.
குட்டிப் பிள்ளைகள் தலை நனைய நனைய
நீராடி நீராடி மீன்களைப்போல் நீச்சலடித்தன.
மக்களெல்லாம் மலர்ந்த முகத்தோடு
அபுதாலிபின் தோளில் இருந்த குழந்தையை
கொஞ்சி மகிழ்ந்தனர்.
மழையைப் போல மனம் கொண்ட
அபுதாலிப் துளித் துளியாய்
தேன் துளியாய் சொன்னார் ...
" அவர் அழகரல்லவோ
அவரை முன்னிறுத்தி
நாங்கள் மழை கேட்போம் !
அவர்
அநாதைகளின் அரணல்லவோ
கைம்பெண்களின்
காவலரல்லவோ !"
அந்தக் குழந்தைதான் ...
அகிலத்தின் அருட்கொடையாக வந்த
அண்ணல் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மறைகொணர்ந்த மாநபி
வந்துபோக வெயிலினை
மறைத்து வந்த மேகந்தம்
மாண்பு செப்ப இயலுமோ ...
நபிகளார் பொருட்டால்
இறைவனிடம்
நாமும் மழை கேட்போம்
கருணை இறைவன்
அருள் மழை பொழிவான். !
இரக்கமுள்ளவனே
இனியவனே
இறைவா ...
இடியையும்
மின்னலையும்
மேகத்துக்குள்
இணைய வைத்து
மழையை
உற்பத்தி செய்பவனே
யா அல்லாஹ் ...
மழைக் குழந்தைகளுக்காக
வேர்வை வடித்துக் கொண்டிருக்கும்
எங்கள் மண் வீடுகள்
மனம் மகிழ
மண் மணக்க
இரக்கமுள்ளவனே
வான் மழையை
இறக்கி விடு !
எங்கள் தாகங்களை
தீர்த்து விடு !
பயிர்களை
செழிக்க விடு !
துயரங்களை
துடைத்து விடு !
கருணையாளனே
கருணை மழை தந்து
ஆனந்தக் கண்ணீரில்
எங்களை
நனைய விடு !


Abu Haashima 

No comments: