Wednesday, March 1, 2017

மகளே... உனக்காக ! -அபு ஹாஷிமா

நல்ல இனிமையான குடும்பம் அது.
பாசமும் பிரியமும் உள்ள கணவன் மனைவி அவர்கள்.
எப்போதாவது சில சண்டைகள் வரத்தான் செய்யும். ஆனால் கொஞ்ச நேரத்தில் அது சரியாகி விடும்.
வழக்கம்போல் அன்று காலை
கணவன் வெளியே கிளம்பும் அவசரத்தில் டேபிள் முன்னால் வந்து பசியாற அமர்ந்தான்.
கணவனுக்கு வாய்க்கு ருசியாக செய்து கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் மனைவி ஏதோ தயார் செய்து கொண்டிருந்தாள்.
அது கொஞ்சம் நேரம் பிடித்தது.
கணவன் பொறுமை இழந்து சத்தமிட ஆரம்பித்தான்.

அவன் அவசரத்திற்கு டிபன் தயாராகவில்லை.
கோபத்தோடு எழுந்து..
" என்க்கு பசியாறவும் வேண்டாம் .. ஒரு மண்ணும் வேண்டாம் .நான் போறேன் .." என்று கிளம்பி விட்டான்.
மனைவி எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள். அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டான்.
மனைவியும் பசியாறாமல் வேதனையோடு பட்டினி இருந்தாள்.
வயதுக்கு வந்த மகள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மனம் வேதனைப் பட்டது.
" ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு இருவரும் தண்டனை அனுபவிக்கிறார்களே " என்று வருந்தினாள்.
அவளும் கூட எதுவும் சாப்பிட பிடிக்காமல் பட்டினியாகவே இருந்தாள்.
வேதனை மனதில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கணவனுக்காக மதிய உணவை தயார்செய்து அவன் வருகைக்காக காத்திருந்தாள் மனைவி.
மதியம் கணவன் திரும்பி வந்தான்.
மனைவி அவனை சாப்பிட அழைத்தாள் .
கோபத்தை விட்டுக் கொடுக்காத கணவன் அப்போதும் சாப்பாடு வேண்டாம் என்றான்.
அவள் கெஞ்சினாள்.
அவன் மனம் இரங்கவில்லை.
அழுதாள்
அப்போதும் அவன் மனம் மாறவில்லை.
பசியாலும் வேதனையாலும் சோர்ந்து போன மனைவி துவண்டு விட்டாள்.
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மகள் தகப்பனின் அருகில் வந்தாள்.
" வாப்பா... சாப்பிட வாங்க வாப்பா ..." என்று அழைத்தாள்.
மகளின் அழைப்பையும் அவன் பொருட்படுத்தவில்லை.
இத்தனைக்கும் மகள்மீது மிகுந்த பாசமுள்ளவன் அவன்.
" வாப்பா... எதுக்கு வாப்பா சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட்டு பட்டினி கிடக்கீங்கோ... நீங்க சாப்பிடலைன்னு உம்மாவும் காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலை .... "
" நீ சாப்பிட்டியா மொவளே?"
"..ம்.. சாப்ட்டேன் ..."
மகளும் சாப்பிடவில்லை என்பதை வாடிப்போன அவள் முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டான் அவன்.
அவன் மனசு இப்போது வருந்தியது .
" சரி ... சாப்பாட்டை எடுத்து வை. சாப்பிடுவோம் ..." என்றான்.
மகள் சந்தோசமாகச் சென்று சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
" உம்மாவையும் கூப்பிடு . சேர்ந்தே சாப்பிடுவோம் .."
டைனிங் டேபிளின் மீது சாப்பாடெல்லாம் எடுத்து வைத்து மூவரும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
பகை மறந்து புன்னகைத்தார்கள்.
" மொவளே ... உனக்காகத்தான் சாப்பிடுறேன் .."
என்று சொல்லிக் கொண்டான் அவன்.
" பசி பொறுக்காமல் சாப்பிட வந்துட்டு இந்த பெருமை வேறே " என்று மனசுக்குள் சொல்லிக் கொண்ட மனைவி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
வாப்பாவும் உம்மாவும் சண்டை மறந்து இணங்கியதைக் கண்ட மகளும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டாள்.
*****************
" பெண் குழந்தைகள் பெற்றோருக்கு இறைவன் வழங்கும் அன்பளிப்புகள் "
என்ற அமுத மொழிகளின் அர்த்தம் தெரிந்து
அவனும் சிரித்துக் கொண்டான்.
-அபு ஹாஷிமா

No comments: