Tuesday, March 14, 2017

மருத்துவமனைகள் பரப்பும் நோய்கள்! பேராசிரியர் கே. ராஜு

அறிவியல் கதிர்
மருத்துவமனைகள் பரப்பும் நோய்கள்!
பேராசிரியர் கே. ராஜு
   
உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைச் சந்திக்கிறோம். மிக மோசமான உடல்நிலையெனில் மருத்துவனையிலேயே உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறோம். அங்கு நாம் எந்த நோயின் சிகிச்சைக்காகச் சேர்ந்தோமோ அந்த நோய் குணமாவது இருக்கட்டும்.. புதிதாக வேறு ஏதாவது நோயுடன் திரும்ப வேண்டியிருந்தால் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? இது என்ன கொடுமையாக இருக்கிறதே என்று அதிர்ச்சியடைய வேண்டாம்! மருத்துவமனைக்குச் செல்பவர்களில் பலர் மேலும் ஆபத்தான சில நோய்களுடன் திரும்புகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கிறது உலக சுகாதார நிறுவனம். எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் உலகில் 14 லட்சம் மக்கள் மருத்துவமனையிலிருந்து சீதனமாகப் பெற்ற தொற்றுநோயால் அவதிப்படுகிறார்கள் என்கிறது அந்த நிறுவனம். இத்தகைய நோய்களுக்கு எச்ஏஐ (hospital-acquired infections) என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ஓராண்டில் எச்ஏஐ காரணமாக 2 லட்சம் பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 80,000 பேர் இறந்தும் போகிறார்கள்.
 

  "இந்த நிலைமையிலிருந்து மீள மருத்துவமனையைத் தூய்மையாகப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்... ஒவ்வொரு கட்டத்திலும் நன்கு தீர்மானிக்கப்பட்ட செயல்முறை வடிவங்களை கறாராக அமுல்படுத்த வேண்டும்" என்கிறார் ஐஎன்ஐசிசி எனப்படும் மருத்துவமனைத் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் விக்டர் டி. ரோசென்தால். இவர் இப்பிரச்சினை மீது பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருபவர். "கைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது போன்ற தொற்றுநோய்த் தடுப்புக்கான வழிமுறைகளை சரிவரக் கடைப்பிடிக்காததாலும் அரதப் பழசான தொழில்நுட்பத்தை மாற்றாமல் அப்படியே கடைப்பிடிப்பதனாலும் எச்ஏஐ பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்கிறார் ரோசென்தால். எச்ஏஐ நோய்கள்தான் எவை என்ற கேள்வி எழுவது இயற்கை. ரத்த ஓட்டத்தில் தொற்றும் கிருமிகள், நிமோனியா, சிறுநீர்க் குழாய்த் தொற்று, அறுவைச் சிகிச்சை நடைபெறும் இடத்தில் ஏற்படும் தொற்று போன்றவையே அவை.
     20 இந்திய நகரங்களில் உள்ள 40 மருத்துவமனைகளில் 2004ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஆய்வுகளை நடத்திய ஐஎன்ஐசிசி 2015 ஆம் ஆண்டில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 2,36,700 நோயாளிகளிடமிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்படித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை இந்தியாவில் எச்ஏஐ பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறது. "வேறு பல நாடுகளில் உள்ளது போல, இந்தியாவில் மருத்துவமனைகளைத் தரப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இந்தியாவில் உள்ள தொழில்நுட்பம்  வளர்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்பத்திலிருந்து மாறுபட்டது. பொது மருத்துவமனைகளில் தொற்றுநோய்த் தடுப்புத் திட்டங்களைத் அமுல்படுத்துவதற்கு நிர்வாகரீதியாகவும் நிதிஒதுக்கீட்டின் மூலமாகவும் அரசு கொடுக்கும் ஆதரவு போதுமானதல்ல. இதன் காரணமாக இங்கே செவிலியர்-நோயாளிகள் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. மருத்துவமனைகளில் அன்றாடம் கூடும் மக்கள் கூட்டத்தின் காரணமாக பல தூய்மைப் பராமரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. இப்பெரும் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை இல்லாதது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அவசர சிகிச்சைப் பிரிவில் மூன்று படுக்கைகளுக்கு ஒரு நர்ஸ் என்பது போதுமானதே அல்ல. பொதுசுகாதாரத்திற்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுவதால் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள், முறையான பயிற்சி, சரியான கல்வி, நோயாளிகளிடம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, காலத்துக்கேற்ற நவீன தொழில்நுட்பம் ஆகிய எல்லா அம்சங்களிலும் குறைபாடுகள் இருக்கின்றன. இவையெல்லாம் விரைவில் சரிசெய்யப்பட வேண்டும்" என்கிறார் ரோசென்தால்.
     நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு தன்இயல்புமாற்றம் (mutation) அடையும் நுண்ணுயிரிகளை எதிர்க்க, உரிய சிகிச்சை முறைகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் முன்னெப்போதையும் விட தற்போது நோயியல் வல்லுநர்கள் இருக்கின்றனர். ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகோ, மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருவதாலோ உடலில் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள நோயாளிகளே புதிய தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். "ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எச்ஏஐ பாதிப்புகளைக் குறைக்க வேண்டுமே தவிர, தொற்றுநோயைப் பரவவிட்டு அதன் பிறகு ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்துக் கொள்ளலாம் எனக் காத்திருப்பது சரியல்ல" என்று மருத்துவர்களை எச்சரிக்கிறார் ரோசென்தால்.
                                               (நன்றி ; 2017 பிப்ரவரி 12 தி இந்து ஆங்கில நாளிதழில் சிந்தியா ஆனந்த் எழுதிய கட்டுரை)
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
From: Raju Krishnaswamy <aasiriyan11@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails