Tuesday, March 14, 2017

எனக்குத் தெரிந்து ....! வேலைக்கு தகுந்த ஊதியம்.

எனக்குத் தெரிந்து ....!
வேலைக்கு தகுந்த ஊதியம்.
எனக்குத் தெரிந்து, சிறிய ஒரு ஸ்தாபனத்தில் முழுபொறுப்போடு ஒருவர் இருந்துவந்தார். அவர் அந்த வேலையில் சேரும்போதே முதிர்ச்சி அடைந்த நடுத்தர வயதினராக இருந்தார். சொந்தவாழ்க்கையில் பொறுப்புகள் இருந்தாலும் மிகவும் பொறுமையானவராகவும் முதலாளிக்கு முழு நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் இருந்துவந்தார். அதிகாலையில் வேலைக்கு வந்தால் எல்லாமுமாக அலுவலகத்திலேயே இருந்து நடுஇரவில்தான் தங்குமிடத்திற்கு சற்று உறங்கி எழுவதற்காக சென்றுவருவார்.

மேற்சொன்னவற்றிலிருந்து அவரது குணநலனை புரிந்து கொள்ளலாம். ஒரே ஆளாக அந்நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் தலையில் இழுத்துப்போட்டு செய்துகொண்டிருப்பார். வேலைகூடுதல் என்று ஒருதரம் கூட அலுத்துக்கொண்டது கிடையாது. இத்தனைக்கும் அவர் வாங்கும் சம்பளம் ஒரு சொற்ப தொகைதான். பலவருடங்களாக அங்கேயே பணிசெய்து இப்போது ஒய்வு பெற்றிருந்தாலும் ஒரு தடவைகூட முதலாளியிடம் சம்பளம் கூட்டித் தரவேண்டுமென அவரது வாயால் கேட்டது கிடையாது. கிடைத்ததைக் கொண்டு சலிப்படையாமல் வேலைசெய்து கொண்டேயிருப்பார். தற்போது ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார். பலவருடங்கள் வெளிநாட்டில் வேலைசெய்தும் எந்தவிதமான சேமிப்பும் சொத்துசுகமோ இல்லாமல் ஆனால் மனநிம்மதியோடுதான் இருக்கிறார்.
இத்தனைக்கும், அந்நிறுவனத்தின் முதலாளி வயது முதிர்ந்தவர், வருடத்தில் ஒருமுறைதான் அங்கு வருவார், வந்தால் ஒருமாதம் தங்கி இருப்பார். முதலாளி இல்லாத மற்ற மாதங்களில் முழுப்பொறுப்பும் அவருடையதுதான்.
அவர் பார்க்கும் வேலைகளில் ஓன்று, வரவு செலவு வாட் வரி கணக்குகளை எழுதி முடித்து லாப நஷ்டம் வருமானவரி வரைக்கும் பார்த்து கணக்கு தணிக்கையாளரிடம் ஒப்படைத்து அரசாங்க வருமானவரித்துறையில் நற்சான்றிதழ் வாங்குவதுவரைக்கும் அவரே செய்வார். திறமைகள் உள்ளவர். இந்த ஒரு வேலையை மட்டுமே நல்லதொரு நடுத்தர நிறுவனத்தில் முழுநேர பணியாக செய்தால் அவர் இப்போது செய்யும் ஸ்தாபனத்தில் சம்பளமாக பெறும் தொகையில் நான்கு மடங்கு அதிகமாக நிசாரமாக பெறமுடியும். அவருக்கு அதற்கான வாய்ப்புகளை தெரிவிப்பதற்கு உதவிகள் செய்வதற்கும் நல்ல நட்புவட்டமும் உறவினரும் இருந்தனர். இருந்தும் அவர் அதை செய்ய எந்த முஸ்தீபும் எடுக்கவில்லை.
ஏனென்ற காரணம் எனக்கு தெரியவந்தபோது சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியாமல் மிகவும் குழம்பித்தான் போனேன்.
சொல்லிவிடுகிறேன் ...
அதாவது அவரது முதலாளி இறந்துபோன தனது தந்தையின் சாயலில் இருப்பதாகவும் பார்க்கும்போதெல்லாம் அதுவே ஞாபகத்தில் வருவதாகவும் அதனால் அவரிடம் சம்பளம் கேட்க மனம் வருவதில்லையாம். என்னே ஒரு அதிர்ஷ்டமான முதலாளி!
படிப்பினை:
மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னதுபோல ' நீங்கள் செய்யும் வேலையை முழுமனதாக விரும்புங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை (முதலாளியையோ) அல்ல'.
வேலைக்கு தகுந்த ஊதியமே முக்கியம் தனிமனித உணர்வுகளுக்கு ஆட்பட்டுவிட்டால் நிச்சயமாக உழைப்பின் நோக்கம் நிறைவேறாது .
பாகம் 3
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails