Saturday, August 20, 2016

பாதச்சுவடுகள்..!! #நிஷாமன்சூர்

காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியே
கிட்டத்தட்ட தெருவோரத்தில் விடப்பட்டிருக்கிறது
பணியாளர்களின் நலிந்த காலணி
கேட்டுக்கு உள்ளே ஓரத்தில் விடப்பட்டிருக்கிறது
தூரத்து அல்லது எளிய உறவினர்களுடைய தேய்ந்த காலணி
தலைவாசற்படிகளுக்குக் கீழாக
ஆனால் ஓரமாகவும் நேர்த்தியாகவும் விடப்பட்டிருக்கிறது
கொஞ்சம் நெருங்கிய ஆனால் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் செய்கிற
உறவுக்காரர்களின் நளினமான காலணி

தலைவாசற்படியில் அலட்சியமாக
இங்கொன்றும் அங்கொன்றுமாக விடப்பட்டிருக்கிறது
தாய்மாமன்களுடைய உரிமைப்பட்ட காலணி
வீட்டுக்கு மிக உள்ளே வரவேற்கும் மிதியடிக்கருகே
விடப்பட்டிருக்கிறது
இல்லத்தரசியின் கம்பீர காலணி
அதற்கென வைக்கப்பட்டுள்ள ஸ்டேண்டில் அப்பாவியாக அமர்ந்திருக்கிறது
குடும்பத்தலைவனின் பாவப்பட்ட காலணி
கட்டிலுக்கடியில் பத்திரமாக பேப்பர்சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது
முதல் ஹஜ்ஜில் இஹ்ராமோடு அணிந்திருந்த ஹவாய் காலணி
அட்டாணியில் பழைய ஆனால் தூக்கிவீச மனசில்லாத மூட்டைகளுக்கிடையில்
துணிபோர்த்தி பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
அம்மா மரணமடைந்தபோது அணிந்திருந்த ரப்பர் காலணி.

நிஷா மன்சூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails