Saturday, August 20, 2016

மரிச்சாலும் அழமாட்டாயா? - அபு ஹாஷிமா

நூறு வயசுக்கு மேலிருக்கும் உம்மாவுக்கு...
ஆனாலும் ..
உம்மா ஆரோக்கியமாத்தான் இருக்கா!
உம்மாவுக்கு ஒருபாடு பிள்ளைகள் இருந்தது
இப்போதும் இருக்கிறது!
ஒவ்வொருநாளும் புதுசு புதுசா
புதுப் பிள்ளைகள் பூவாகப் பிறக்கும்
அடுத்த நாளு பிள்ளையா வளரும்!
உம்மாவே ஒரு பூப்பந்தல்போல அழகா இருப்பா
உச்சந்தலையிலே பூமுடிந்து
சுமங்கலியா மகராசியா இருப்பா
பார்க்கப் பார்க்க சந்தோசமா இருக்கும்
கொஞ்சம் சங்கடமாவும் இருக்கும்...!
காரணம்...

நித்தம் நித்தம் கொஞ்சம் பிள்ளைங்க
மரிச்சுப் போவும்!
நான் கண்ணு தொறந்த நாளிலிருந்தே
பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்!
எத்தனை பிள்ளைகள் மரிச்சாலும்
உம்மா மட்டும் அழமாட்டா!
பொறுக்க முடியாம உம்மா மடியிலிருந்து
ஒரு நாள் கேட்டேன்...
"நான் மரிச்சாலும் அழமாட்டாயா உம்மா?"
வாஞ்சையோடு என் தலையைத் தடவி விட்டு
உம்மா சொன்னா...
" என் பொன்னு மொவளே!
நம்ம வாழ்க்கை
*துனியாவிலே ஆரம்பிச்சு
துனியாவிலேயே முடிஞ்சு போகும் ..
மனுஷங்களுக்கு மட்டும்தான்
*ஆகிரத்திலேயும் தொடரும்" னு !
"அப்போ எதுக்கு ஆண்டவன்
நம்மை படைக்கணும்" னு கேட்டேன்.
" மனுஷங்களுக்கு உபயோகமா இருக்கத்தான்
அந்த *ரப்புல் ஆலமீன் நம்மை படைச்சிருக்கான்
அவங்க கால் நடைகளுக்கு உணவாகவும்
அவங்க வீட்டுக்குக் கதவாகவும் நம்மை ஆக்கியிருக்கான்
படச்சவன் நமக்கு விதிச்சதை
சந்தோசமா ஏத்துகிட்டு நாம வாழணும் மொவளே" ன்னு
உம்மா விளக்கமா சொன்னா!
உம்மாகிட்டெ நெறய கதைகள் உண்டு
அவ்வளவும் உண்மைக் கதைகள்!
காக்கையும் குருவியும்
மைனாவும் மரங்கொத்தியும்
எங்க வீட்டிலே உக்காந்து
கதை பேசாத நேரத்திலே
உம்மா கதை சொல்லுவா!
இப்போ...
நானும் என் கூடப்பிறப்புகள் கொஞ்சம் பேரும்
உம்மாவப் பிரிஞ்சி கீழே விழுந்து கிடந்தோம்
எங்க மேலே காரோ பைக்கோ ஏறி சிதைக்கும்
எங்க சலசலப்பு பேச்சுக்கள் நசுங்கிப் போகும்!
அப்புறம் எங்களை கூட்டிப் பெருக்கி
நெருப்பு வச்சு சாம்பலாக்கி
எங்க உம்மா காலடியிலேயே கொட்டுவாங்க !
நான் உம்மாவோடு இருக்கும்போது
இதையும் பார்த்து அழுதேன் ...!
அப்போ உம்மா சொன்னா...
" அழாதே மொவளே..
நமக்கு இதெல்லாம் வலிக்காது
படச்சவன் இரக்கம் உள்ளவன் ..
படைக்கப்பட்ட மனுஷன்தான் இரக்கமில்லாதவன்"
ஆச்சரியத்தோடு நான் உம்மாவ பார்த்தேன் ...
உம்மா சொல்ல ஆரம்பிச்சா...
" குஜராத்துன்னு ஒரு ஊரு இருக்கு மொவளே..
அங்க.. அல்லாவைத் தொழுற ஜனங்களை
கொத்து கொத்தா அள்ளிகிட்டு வந்து
கொடூரமா கொல செஞ்சி எரிச்சு போட்டாங்க
வயித்துலே பிள்ளையை சுமந்த பிள்ளத்தாச்சிகளின்
வயித்தைக் கிழிச்சி
கண்ணு முழிக்காத பிள்ளைகளை
உருவி எடுத்து
என்னப்போல மரங்களை
வெட்டிப்போட்டு தீவச்சு
அதிலே போட்டு கொளுத்திப் போட்டாங்க ...
அந்த படுபாதக கொல செய்றதுக்கு
எங்க ஒடம்பும் துணை போயிடுச்சேன்னு
நாங்க அழுத அழுகை அந்த
அல்லாஹ்வுக்குத்தான் தெரியும் மொவளே... "
" ஆனாலும் ஒரு சந்தோசத்தை
படச்சவன் எங்களுக்குத் தந்திருக்கான்...!
இந்த பாவிங்க செத்துப்போனா
அந்த பொணத்துமேலே
எங்களைப் போட்டுத்தான் எரிப்பாங்க..
நாங்க ஆவேசமா உண்ணுற உணவே
அதுதான் மொவளே..
எங்க கோவத்த தீர்க்க அதுபோதும்..."
உம்மா அழுததையும் ஆவேசப்பட்டதையும்
அப்போதான் முதன் முதலாப் பார்த்தேன்...
என் சின்னக் கையாலே உம்மா கண்ணீரை
தொடச்சு விட்டு
உம்மா நெஞ்சோடு சாய்ந்து...
" உம்மா... அந்தப் பிள்ளைகளுக்கும்
அவங்க உம்மா வாப்பாவுக்கும்
ஆகிரத்திலே
அல்லாஹ் என்ன கொடுப்பான்" ன்னு கேட்டேன்
" சொர்க்கத்த கொடுப்பான் மொவளே ..
அது நம்ம பூமியை விட அழகா இருக்கும்
அங்கேயும் நம்மை மாதிரி
அழகான மரங்கள் இருக்கும் ..
அது பூ பூக்கும்..
வாசனையா இருக்கும்
சொர்க்கவாசியா வருகிற மக்களுக்கு
சந்தோசம் கொடுக்கும்" னு உம்மா சொன்னா!
அத கேட்டு எனக்கு மனசெல்லாம்
நெறஞ்சு போச்சு !
அல்லாஹ் நாடினா
நானும் அங்கே மரமா வளரனும்..
உங்களுக்கெல்லாம் சுகம் தரணும்..
துஆ செய்ங்கோ....
அஸ்ஸலாமு அலைக்கும் !
* துனியா ... பூவுலகம்
* ஆக்கிரத்து ..... இறப்பிற்கு பின் வருகின்ற மறு உலகம்
* ரப்புல் ஆலமீன் .... அகிலமெல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற இறைவன்
( என் முற்றத்தில் விழுந்து கிடந்த இலைகளைப் பார்த்து உருவான சிந்தனை


Abu Haashima

No comments: