Sunday, February 9, 2014

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!


நான் என்பது பொதுப்பெயர் என்றாள்,
பிரபஞ்சத்தின் துணுக்குகள் தன்னை பிரபஞ்சமாக நினைத்துக் கொள்ளும் மயக்கம் என்றேன்...!!

ஓவியம் என்பது வண்ணங்களின் கலவை என்றால்
இசை என்பது ஒலிகளின் முயக்கம் என்றாள்,
இவையிரண்டுமே புலன்களின் மயக்கம் என்றேன்..!!

கலை என்பது இச்சைகளின் புனிதப்போர்வை என்றாள்,
புனிதம் என்பது கற்பிதங்களின் உருவெளித்தோற்றம் என்றேன்..!!

ஓவியம் என்பது உணர்வுகளின் வர்ணம் என்றாள்,
வர்ணம் என்பது இசையதிர்வுகளின் கண்காட்சி என்றேன்..!!

மரணம் என்பது உயிரின் பிரிவு என்றாள்,
மரணம் என்பது ஆன்மாவின் விடுதலை என்றேன்..!!

முதுமை என்பது மரணத்தின் முற்றம் என்றாள்,
முதுமை என்பது வாழ்வின் பூரணம் என்றேன்..!!

நான் என்பது பெயர்ச்சொல் என்றாள்,
நாம் என்பது வினைச்சொல் என்றேன்..!!

பெயர்களுக்கு ஏதும் அர்த்தம் உள்ளதா என்றாள்,
அந்த அர்த்தம் அர்த்தப்பட செயல்பட வேண்டும் என்றேன்..!!

பெயர்களுக்குள் என்னை அடைக்க முடியாது, வெறும் பெயரல்ல நான் என்றாள்..
முகங்களுக்குள்ளும் உன்னை முடக்க முடியாது, வெறும் முகமல்ல நீ என்றேன்..!!

பெயரற்றவளை என்ன பெயர்சொல்லி
அழைப்பது என்றாள்,
முகமற்றவளுக்குப் பெயரெதுக்கு
என்றேன்..!!   

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....! தொ...


Nisha Mansur

2 comments:

abu haashima said...

மிக அருமையான கவிதை ஐய்யா !
ஆயிரம் அர்த்தங்களை பொதிந்து நிற்கும் " பெட்டகம் " இந்த உடலும்
ஆன்மாவும் !ரகசியங்களின் மாயச் சுரங்கம் ! அதை சுவைபட சொல்லியுள்ள தோழர் நிஷா கவிஞர் மன்சூரின் கவிதையை தங்கள் " முற்றத்தில் " விதைத்திருப்பது விருந்து !
வாழ்க உங்களின் தொண்டு !

நிஷா மன்சூர் said...

நன்றி அண்ணன் அபூஹாஷிமா அவர்களே,
முற்றம் மகிழ கவிமழை பொழியப்படும்...:)