Sunday, September 25, 2011

புன்னகை



தேக மரத்தின்
வதனக் கிளையில்
மொட்டு உதட்டின்
புன்னகை

அடடா
பூமியில் பிறக்கும்
தேவதை நீயோ
பூக்களும் செய்யும்
அர்ச்சனை

கன்னியர் கண்ணில்
கவிதைக் கீற்றாய்
மின்னலடிக்கும்
புன்னகை

அவளின்
உள்ளக் கள்வன்
பெயரைச் சொல்ல
புன்னகை பூக்கும்
புன்னகை









விலைமகள் இதழில்
வாணிபப் புன்னகை
வேதனைக் காம்பினில்
சுழலும்

அவளின்
நிலைதனைக் கூறும்
தகவல் பலகை
உயிரை அறுக்கும்
அவலம்

வாழ்க்கை ஊஞ்சலில்
ஆடிடும் இளமை
பூத்துக் குலுங்கும்
புன்னகை

இரவில்
தூங்கிய பூமியை
எழுப்பும் சூரியன்
விடியலாய் விரிக்கும்
புன்னகை

வாங்கிய கடனைக்
கொடுத்தவன் வந்தால்
வட்டிக்கு உதிரும்
புன்னகை

பொழுதும்
வறுமைக் கலைஞன்
உதட்டில் கூட
வறண்டு உடையும்
புன்னகை

உழைக்கும் மக்கள்
உதட்டில் புதைந்து
உயிரை இழக்கும்
புன்னகை

அதனைப்
பிழைக்க வைக்கக்
குரல்கள் நீட்டும்
புரட்சிக் கருத்தின்
புன்னகை

மெய்யோ பொய்யோ
புன்னகை சிந்து
பொய்கள் விலகும்
தோற்று


புவியில்
அய்யோ துயரம்
போர்கள் போதும்
புன்னகை ரத்தம்
ஏற்று

Source : http://anbudanbuhari.blogspot.com

No comments: