பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்
ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)
ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)
பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு
ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)
பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல
ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....
பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & எல்.ஆர்.அஞ்சலி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.
1 comment:
நல்ல பாடல்!
இந்தப் பாடலை எனது வலைப்பூவிலும் படிக்கலாம்:
"
http://nizampakkam.blogspot.com/2009/09/kappalukkupona.html
Post a Comment