Wednesday, December 22, 2010

ஜெயமோகன் இந்துத்துவவாதி?




ஜெயமோகன் - இந்துத்துவ வாதியா? - உமர்
தம்மை அறிவு ஜீவியாகக்க் காட்டிக் கொள்ளும் முயற்சியில் கருணாநிதியையும் வைரமுத்துவையும் இலக்கியவாதிகளல்லர் என விமர்சித்தவர். அவரின் எழுத்துக்களுள் பலவும் இந்துத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பவையாகவும் சிறுபான்மையினருக்கு எதிரானவையாகவும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இந்துத்துவ சக்திகளும் அவரைத் தம் ஆளாகவே பார்க்கின்றன. அதனால் அப்படி ஒரு சாயல் அவர் மீது படிந்து விட்டது தவிர்க்க முடியாததாகி விட்டது.


தாங்கள் சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் எது? - ரவி
புத்தகங்களின் நடுவே உண்டு, உறங்கி வாழ்ந்த கடந்த கால்ம் ஒன்று எனக்கும் இருந்தது. bibliophile எனச்சொல்லும் அளவுக்குப் புத்தகப் பைத்தியமாக இருந்த காலம் அது."நமக்குத் தொழில் கவிதை" எனப்பாரதி சொன்னதுபோல "நமக்குத் இலக்கியவாதி படித்தல்" என வாழ்ந்திருந்த காலம். எனக்கு வாய்த்த நண்பர்களும் புத்தகப் பிரியர்களாக இருந்ததால் இலக்கிய ஆய்வுகள்,, வரலாறு, அரசியல், சமயம், இசை, நாடகம்,சிறுகதை, புதினம், அறிஞர்களின் சொற்பொழிவுத் திரட்டு, சிற்றிதழ்கள், கவிதைத் தொகுப்புகள் எனத் தமிழில் நிறைய வாசித்த அக்காலம் - "அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-“ எனத் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் ஏங்கியதுபோல இன்று என்னை ஏங்க வைக்கும் இறந்தகாலம்.

இத்தனை பீடிகையும் எதற்காக? வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேர்ந்தெடுத்த தொழிலால் கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்சு விடவே முடிகிறது; புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதைச் சொல்லவே!. கடைசியாக நான் வாசித்த புத்தகம் என்று சொன்னால், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் என் இளவல் நூருத்தீன் பரிந்துரைத்து பதிப்பாளார் மூலம் என்க்கு அனுப்பித் தந்த 'நூறு தமிழ்க்கவிஞர்கள்'என்ற நூலே!

தொலைக்காட்சியின் வரவு வாசிக்கும் வழக்கத்தை அழித்து விடும் என்று சொன்னார்கள். அப்படி நிகழ்ந்ததும் உண்மையே! ஆனால் இன்று இணைய தளங்களில் வாசிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.ஆனால் புத்தகங்களை வாசிக்கும் நிறைவும் அறிவும் இதில் கிடைக்காது என்பது என் துணிபு.


"கருணாநிதிக்குப் பேசத் தெரியவில்லை" என்று நடிகர் விசயகாந்து கூறியிருப்பது பற்றி உங்களது கருத்து என்ன? -வசீகரன்

அப்படி நேரடியாகக் குற்றம் சாட்டும் அளவுக்கு விஜயகாந்த் பெரிய பேச்சாளார் இல்லை. கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாக விஜயகாந்த் குற்றம் சுமத்தியுள்ளதை நீங்கள் "அரசியல்"ஆக்கிவிட்டீர்களே ஐயா!

கருணாநிதிக்குப் பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேசத்தெரியாது. இதை வணங்காமுடி விடைப்பகுதியில் முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம். கருணாநிதியின் மேடைப்பேச்சு கவரும்படி இருக்கும்; ஆனால் அவரது உரையை உன்னிப்பாகக் கேட்டால் உங்களுக்கே நிறையப் புரியும்.


லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு இருக்கும் இன மான உணர்வு தமிழகத்தில் இருக்கும் நமக்கில்லையே ...ஏன்?- சௌந்தர்ய குமார், கோவைலண்டனுக்குச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக இலங்கைத் தமிழர்கள் கொதித்தெழுந்ததல் இவ்வினாவைத் தொடுத்துள்ளீர்கள். இனமான உணர்வு என்பது லண்டனில் இருப்பவர்களுக்கு மட்டும் உரியது இல்லை; அது தமிழர்களுக்கு மட்டும் உரியதும் இல்லை. பிறந்த பொன்னாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வாழும் எவர்க்கும் உள்ள உணர்வே இது.

தம் நாட்டை விட்டு இந்தியாவில் வாழும் திபெத்தியர்கள் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தைத் தடுக்க முயன்றதையும் லண்டனில் ஜோதியைப் பறித்துக்கொண்டு ஓடியதையும் ஆறு நாட்களுக்கு முன்னால் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவின் இந்திய வருகைக்கு எதிராக நடத்திய அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் நினைவு கூர்ந்தால் புலம் பெயர்ந்தவர்களின் ஆக்ரோஷமும் இன மான உணர்வும் நமக்குப் புரியும்.

உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்கிறார்களே, அதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் எதேனும் உண்டா வணங்காமுடியாரே? - செல்வன் -லாஸ் ஏஞ்சலஸ்
அது திருடர்களும் பிக்பாக்கெட்டுகளும் சொல்லும் டயலாக்!

உங்களுக்கு ஏன்?

எனக்கு உள்ளங்கை அரித்தால் செலவுதான் வருகிறது.

அமெரிகாவின் லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து கொண்டு இதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் வேறு கோருகிறீர்கள்; என்ன சொல்ல? :--))

தமிழ் போராளி சீமான் வரும் தேர்தலில் முதல்வர் கருனாநிதியை எதிர்த்து போட்டியிடுவாரா அல்லது தேர்தல் நேரத்தில் பல்டியடித்து விடுவாரா? - தமிழ்செல்வன், றொறென்றொ
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது குறள்.

உலகில் மட்டுமில்லை; அரசியலிலும் இதுவே உண்மை. இன்றுளோர் நாளை இரார்; நாளை இருப்போர் மற்றைநாள் இலார்; இன்றிலார் நாளை வருவர். கூட்டணிகளும் தேர்தல் போட்டிகளும் அன்றைய வானிலையைப்போல மாறிக் கொண்டே இருப்பவை.அதனால் இன்று சீமான் எடுத்த சபதம்,

“தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
செய்யு முன்னே முடியே'னென்று”


பாஞ்சாலி எடுத்த சபதம் இல்லை நிறைவேற்றுவதற்கு.; தமிழநாட்டு அரசியல் சபதம். அது தேர்தல் நேர அரசியல் வானிலையைப் பொறுத்தது. இப்போது ஒன்றும் சொல்ல இயலாது.

'கருணாநிதியை அரசியலை விட்டு ஒழிப்பேன்' என்றும் 'ஜெயலலிதாவை விரட்டுவதே நோக்கம்' என்றும் சபதம் எடுத்துப் பின்னர் அவர்கள் இருவரிடமும் மாறி மாறித் தஞ்சம் புகுந்த புரட்சிப் புயலையும் தமிழ்க்குடிதாங்கியையும் தமிழ்நாடு கண்டுகொண்டுதான் இருக்கிறது

2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி பி ஐ நடத்தும் ரெய்டுகளல் காங்கிரஸ் தி மு க கூட்டனி உடையுமா தொடருமா என்ற எதிர்பார்ப்பே இன்றைய அரசியல் வானிலை.


விஜய் - ரஜினியா ? விஜயகாந்த்தா? (வருவாரா? வரமாட்டாரா?) - ஏகலைவன்
...... வரத்துடிக்கிறார்; ஆனால் விஜயகாந்தாக மாட்டார். இன்றைய அரசியல் கிசுகிசுக்களின் படி கருவேப்பிலையாவதற்கே வாய்ப்புள்ளது.

ரஜினியைப் பார்த்தாவது அரசியலுக்கு வராமல் இருப்பது விஜய்க்கு நல்லது.

உருது மொழியை "நமது" மொழி என்கிறாரே கருணாநிதி? - ஹசன், பரங்கிபேட்டை
உருது மொழி அந்நியநாட்டு மொழி இல்லை. சில அறிவிலிகள் அம்மொழியைப் பாகிஸ்தான் மொழி என ஒரு தமிழ் நாளிதழில் எழுதுகின்றனர். உருது மொழி இந்தியாவில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் உருவான கலப்பு மொழி. அம்மொழி உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில்தான் அதன் இனிமை மாறாமல் பேசப்படுகிறது. இந்திய மொழி என்பதாலும் தமிநாட்டில் தமிழைப் போலவே வட்டார வழக்கின் ஏற்ற இறக்கத்துடன் தமிழ் கலந்தே பேசப்படுவதாலும் கருணாநிதி அதை "நம் மொழி" எனச்சொன்னார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்

தமிழகத்தின் நம்பர் 2 நடிகர் கமல், மலையாளத்தின் நம்பர் 2 நடிகர் மோகன்லால் ஆகியோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? - சின்ன துரை
உங்கள் வினாப்படி இருவரும் நம்பர் 2 ஆக இல்லாமல் நம்பர் 1 ஆக இருந்தால் கடவுள் நம்பிக்கை கொள்வார்களா? கடவுள் நம்பிக்கை என்பது தொழில் சார்ந்தது இல்லை; அவரவரின் அறிவையும் ஆய்வையும் சார்ந்தது. கமலும் மோகன்லாலும் கடவுள் நம்பிக்கை இலாதவர்களாக இருப்பதில் என்ன தொடர்பு இருக்க முடியும்?

சரி! நம்பர் 1, நம்பர் 2 என்பதை எதை வைத்துத் தீர்மானிக்கிறீர்கள்?

படம் வெற்றி பெறுவதை வைத்தா? பண வசூலை வைத்தா? அல்லது ரசிகர் மன்றங்களின் பலத்தை வைத்தா?

நடிகர்கள் பந்தயத்தில் ஓடும் குதிரைகள். ஜெயிக்கும் குதிரை நம்பர் 1. திரையுலகிலும் அரசியலைப்போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவன. எனவே நம்பர் இடும் வழக்கம் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது.

வழக்கமாக டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் பாபர் மசூதி தொடர்பான போராட்டத்தை ஒரு முஸ்லிம் அமைப்பு ஜனவரி 27ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது குறித்து? - தமீம்
அப்படி ஒரு செய்தியை நான் ஊடகங்களில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லையே!

நீங்கள் வினவியுள்ளது உண்மையெனில் ஒருவேளை அவர்கள் தங்களைத் தனியாக அடையாளம் காட்டுவதற்காகச் செய்வார்களோ என்னவோ?

நான் கேள்விகளை அனுப்பி உங்களால் பதில் சொல்ல முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?- முஹம்மது அலி ஜின்னா
விடை எழுத மாட்டேன்ஃ உங்கள் வினா என்றில்லை; எவரது வினாவாயினும் இந்நேரம் தள முகவரியில் அனுப்பப்படுவன அனைத்தும் என் மின்னஞ்சல் முகவரிக்கு வரும்படி, தள நுட்பக்குழு ஏற்பாடு செதுள்ளதால், வரும் வினாக்களுக்கு விடை எழுதி ஆசிரியருக்கு அனுப்பி விடுவேன். எனக்கு விடை தெரியா வினாக்களுக்கு விடைகளைத் தேடும் வரை அமுக்கி விடுவேன்.
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source:http://www.inneram.com/2010121912590/vanagamudi-answers-19-12-2010

No comments: