Monday, December 13, 2010

இந்திய ஜனாதிபதியாக சுப்ரமணிய சாமி....?




கவிதைக்குப் பொய் அவசியம்தானா? - ஹசன், மயிலாடுதுறை
கவிதைக்குப் பொய் அழகுதானே தவிரக் கட்டாயத் தேவையில்லை.

ஆனால் தமிழில் அணி இலக்கணம் உண்டு. அதன்படிச் சிலவற்றை உயர்வு நவிற்சியாகச் சொன்னால்தான் கவிதை இனிக்கும்.

என் காதலியின் முகம் - நிலவு; கண்கள்- கருவண்டு.,கன்னம்- ஆப்பிள்; உதடு - ஆரஞ்சு; பற்கள்- முத்து; கழுத்து- சங்கு, குரல்- குயில்.

இப்படி உண்மையில் இல்லை; ஆனால் வர்ணனை. இது இல்லாவிட்டால் கவிதையாக இருக்காது; செய்யுள் ஆகிவிடும்.

நாடாகொன்றோ; காடாகொன்றோ;
அவலா கொன்றோ; மிசையாகொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை;வாழிய நிலனே !

இது புறப்பாடல்.

“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

இது ராமாயணம்.

முன்னது செய்தி- செய்யுள்

பின்னது கருத்து, கற்பனை, உணர்ச்சி, வர்ணனை, வடிவம் எல்லாம் நிறைந்த கவிதை.

முன்னது ஒளவை;

பின்னது கம்பன்.

இரு பாடல்களுக்கும் இடையில் உங்களுக்கே வேறுபாடு தெரிகின்றதா?

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.

இந்தப் பாடலில் காணப்படுவன கற்பனையா, பொய்யா, உயர்வு நவிற்சியா?

இந்தப் பாடலை ஓசையுடன் படிக்கும்போது நீங்களும் சேர்ந்து பயணிக்கவில்லையா?

கடந்த இரு வாரங்களுக்கு முன் கவிதை எழுதிய அனுபவம் உண்டா என ஒரு வாசகர் வினவியதற்கு அளிக்கப்பட்டிருந்த விடையையும் பார்க்கவும்.

மழை பொழிந்துக் கொண்டிருக்க, ஆளரவமற்ற டீக்கடையில் சூடான பஜ்ஜியுடன் டீ குடித்ததுண்டா? - குமார்

உண்டு; ஆனால் மிதமான குளிருடன் சிலுசிலுக்கும் மழையில் சூடான பஜ்ஜிக்குத் தேநீரை விடச் சுக்குக் காப்பி நல்ல பொருத்தம்

மரவள்ளிக் கிழங்கைத் துண்டு துண்டாக நறுக்கி வேக வைத்துச் சூட்டோடு தட்டில் வைத்து, சிவந்த மிளகாய் வற்றலையும் உப்பையும் சேர்த்து அரைத்துப் பொடியாக்கிய தூளை அதில் மிதமாகத் தூவிச் சுடச்சுடப் பொரித்த அப்பளத்தை நொறுக்கி அதனுடன் சேர்த்துச் சாப்பிடும்போது இடையிடையே சூடான மசால் வடையையும் கடித்துக் கொண்டு சுக்குக் காப்பியையும் குடிப்பது சிறு மழை, பெரு மழை இரண்டிற்கும் மிகப்பொருத்தம்.

என் மாணவப் பருவத்தில் அந்திமாலை நேரத்தில் நண்பர்களுடன் இதுபோல் சாப்பிடுவது வழக்கம்.இவை அத்தனைக்கும் மொத்தச் செலவு ஆளுக்கு அதிகபட்சம் 15 முதல் 20 பைசா வரையே!


தொழிற்நுட்பம் உச்சக்கட்டமாக முன்னேறியுள்ள நிலையில் அமெரிக்க ரகசியங்களை விக்கிலீக்ஸ் உளவு பார்த்தது, இந்திய சிபிஐ இணையதளம் ஹேக் செய்யப்பட்டது போன்றவை எதை உணர்த்துகின்றன? -ராகவ்

நாம் அறிந்தது மட்டுமே தொழில் நுட்பமில்லை; நம்மை விழுங்கி ஏப்பம் விடும் வல்லவனுக்கு வல்லவனான நுட்ப வல்லுநர்கள் உலகில் உள்ளனர் என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதையும் உலகில் இரகசியம் என்று ஏதும் இல்லை என்பதையும் உணர்த்துகின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய சுந்தரம்பிள்ளை தமது மனோமணியம் நாடகத்தில்,

"ஒருவர் ஒருபொருள் அறியின் இரகசியம்; இருவர் அறிந்திடிற் பரசியம்“ என்றார்.

அந்த அடிப்படையில் பார்த்தால் உலகில் இரகசியம் என்று ஏதும் இல்லை... அவரவரும் தமக்குள் புதைத்து வைத்துக் கொண்டதைத் தவிர.


விக்கி லீக் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் நம்பகமானவையா?- செல்வாபல நாடுகளின் இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக். அவை உண்மைதானா இட்டுக்கட்டப்பட்டவையா என்பதை அவ்வந்நாடுகளின் பொறுப்பில் உள்ளவர்களே அறிவர். நாம் நம்பகமானவை என்றோ அல்ல என்றோ கூற முடியாது.

ஸவூதி அரேபிய அரசகுடும்ப வாரிசுகளின் களியாட்டங்களைப் பற்றி விக்கிலீக் செய்தி வெளியிட்டுள்ளதையும் அமெரிக்காவுக்கான ஸவூதி அரேபிய அரசின் முன்னாள் தூதரான இளவரசர் துர்கி அல் பைசல், விக்கிலீக் வெளியிட்ட செய்திகளுக்காக அதைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் எனக் கூறியிருப்பதையும் இணைத்துப் பார்த்தால் அப்படியும் இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

கடந்த வார வ மு விடையில் ஈரான் அதிபர் அகமது நிஜாத் விக்கிலீக் செய்திகள் "லீக்" அல்ல; திட்டமிட்டுப் பரப்பப் பட்டவை என்று சொன்னது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஊழல் பற்றி கமிஷன் வைப்பதெல்லாம் சரிதான். ஆனால் ஊழல் செய்த பணம் இதுவரை மீண்டதாக சரித்திரம் இல்லையே? பின் எதற்கு கமிஷன்?? - கண்ணன்
ஊழல் விசாரணைக் கமிஷனால் ஊழல் தொடர்பான பணம் மற்றும் அசையும் அசையாச் சொத்துகளைக் கைப்பற்ற முடியாது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் ஊழல் விசாரணைக் கமிஷன் வைப்பது புகாருக்குள்ளானவர்கள் ஊழல் செய்துள்ளனரா; எனில் எந்தெந்த இனங்களில் எப்படி, எத்தனை வழிகளில் எவ்வளவு தொகை மதிப்பில் என்பதையும் அதன் மூலம் சம்பாதித்தவற்றையும் கண்டறிந்து அரசுக்குத் தெரிவிப்பதும் அந்தத் துறையில் ஊழலுக்கான வழிகளை அடைக்கவும் ஊழல் செய்தவர்களின் சொத்துகளைத் திரும்பப் பெறவும் பரிந்துரை செய்வதும் கமிஷன்களின் பணிகள். பணத்தை மீட்பது அரசின் வேலை. அரசுகள் இதுவரை பெரிதாகச் சாதித்ததாகத் தெரியவில்லை.

ஊழல் விசாரணைக் கமிஷன் மட்டுமின்றி, பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் மீது விசாரணைக்கு அமைக்கப்பட்ட லிபரஹான் கமிஷன், மும்பை மாநகரத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த சிவசேனாவினர் மீது விசாரணைக்கு அமைக்கப்பட்ட கிருஷ்ணா கமிஷன் போன்றவற்றின் முடிவுகளின் மீதும் இந்தியாவில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஒரு விஷயத்தை மக்களிடமிருந்து மறக்கடிக்க வேண்டுமெனில் அவ்விஷயத்தின் மீது ஒரு விசாரணைக் கமிஷனைப் போடு என்பது இந்திய அரசியலின் பிரபலமான பொன்மொழி.

கறைபடிந்த நீதிமன்றம் என அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்சை உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளதே? - தேவகி, மதுரை
ஆமாம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் சில நீதிபதிகள், தம் உறவினர்களான வழக்கறிஞர்கள் வாதிடும் வழக்குகளை விசாரிக்க மறுத்துத் தலைமை நீதிபதியிடம் வேறு நீதிபதிகளை அவ்வழக்கு விசாரணைக்கு நியமிக்கும்படிக் கோரியதை நான் அறிவேன்.

மிக மிக அண்மைக்கால எடுத்துக்காட்டு.

மும்பையில் ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பிய விளக்கம் கோரும் நோட்டீஸுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் அக்கட்டுமான நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது. தலைமை நீதிபதி மோஹித் ஷாவும் நீதிபதி கதவாலாவும் அடங்கிய பெஞ்ச் அவ்வழக்கை விசாரிக்க இருந்தது. தலைமை நீதிபதி ஷா, 'தம் உறவினர்கள் பணி புரியும் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனம் இக்கட்டுமான நிறுவனத்துக்குத் துவக்கத்தில் சட்ட ஆலோசனைகள் வழங்கியிருந்ததால் இவ்வழக்கை இனி தாம் விசாரிக்க முடியாது எனவும் வேறு பெஞ்சுக்கு வழக்கை மாற்றவிருப்பதாகவும்' நிறுவனத்தின் வழக்குரைஞரிடம் கூறிவிட்டார்.

அந்தப் பண்பாடும் ஒழுக்கமும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சில நீதிபதிகளிடம் இல்லை. நீதி வழங்கப்பட்டது என்பதைவிடத் தீர்ப்பு வாங்கப்பட்டது என்பது நீதித்துறைக்கே அவமானம்

இத்தகு பெருமை பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள்தாம் பாபரி மசூதி வழக்கில் அப்பம் பங்கு வைத்தனர்.


சுப்ரமணிய சாமியை இந்திய ஜனாதிபதி ஆக்கினால் என்ன? - சுவாமி, கோவை
சிறப்பாக இருக்கும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டிருந்த நிலையை டி என் சேஷன் வந்து மாற்றினார்.தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உள்ள அதிகாரம் என்ன என்பதை நாட்டுக்கு உணர்த்தினார்.

அதுபோலவே இந்தியக் குடியரசுத் தலைவர்களும் பிரதமரின் தலையாட்டிப் பொம்மைகளாகவே இருந்துள்ளனர். சுப்பிரமணியம் சுவாமி வந்தால் பிரதமரின் கைப்பாவையாகச் செயல்படமாட்டார்.

இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரையும் மத்திய அரசையும் சுவாமி நீதிமன்றத்தில் நிறுத்தியதில் அரசு ஆடிப்போயுள்ளதே!


விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம் என்று வணங்காமுடியார் கருதுவது எதனை? - பாலா
இது வரை cloning


அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கும் அரசு, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வற்புறுத்துவதில்லையே? - அழகப்பன்
அரசுடன் போராடிச் சலுகைகளைப் பெறும் ஊழியர்களுக்குத் தம் கடமையைச் செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாமல் போய்விட்டதா? அரசு, சம்பளமும் சலுகைகளும் தருவது அவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட வேலையைக் குறைவின்றிச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இதை அரசு அவர்களுக்கு வற்புறுத்தினால்தான் வேலை செய்வர் என்பது கேவலமானது. தம் வேலையைச் செய்வதற்குப் பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்பது அதைவிடக் கேவலமானது.


கடந்த17-10-2010 வணங்காமுடி பதிலில், எனது கேள்விக்குப் பதிலளிக்கும் போது, "இப்போதே இப்படி என்றால் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் உலகம் எங்கேயோ போய் விடும்; மதம், சாதி, மசூதி, கோயில் கடவுள் எல்லாம் சமூகத்தைப் பாதிக்காத தனிநபர் விவகாரம் என்றாகிவிடும்" என்று கூறி விட்டு, மற்றொரு பதிலில், "நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்தவருக்கே இந்நிலை இருந்தது என்றால், தீண்டாமைக் கொடுமை மறைய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் பயணப்பட வேண்டுமோ?" என்று பதில் அளித்துள்ளீர்கள்.

வணங்காமுடியாரே, சாதியின் அடிப்படையில் தானே தீண்டாமை கொடுமை உருவாகிறது. அப்படியெனில், உங்கள் பதில்களில் முரண்பாடு தெரிகிறதே?
- நேசமணி, குடியாத்தம்
இரு விடைகளையும் படிக்கும்போது முரண்போலத் தோன்றுவது சொற்ளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதாலேயே! விடைகள் கூறப்பட்ட பின்னணியுடன் அவற்றைப் புரிந்துகொண்டால் குழப்பம் வராது.

உங்களுக்கு எளிதாக விளங்க ...................

நாடெங்கும் கிளைகள் பரப்பி விரிந்து நிற்கும் ஒரு பெரும் வணிக நிறுவனம் இருக்கிறது; அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்குள் ஒத்துழைப்போ விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோ இல்லாமல் குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டும் ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொண்டும் இருப்பதால் நிறுவனத்தின் முன்னேற்றம் தடைபடுகிறது. நிறுவனத்தைத் தலைமை தாங்கி நடத்த, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பொது மேலாளர்களும் தமது இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஊழியர்களின் போக்கைக் கண்டுகொள்ளாமலும் சிலர் அவர்களின் செயல்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். ஒரு துணைப் பொதுமேலாளரை ஊழியர்கள் சிலர் இழிவு படுத்தி விடுகின்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற -- நிறுவனத்தின் மீது அக்கறை கொண்ட-- ஊழியர்களுள் சிலர், "இந்தப் போக்கில் போனால் நூறு ஆண்டுகள் ஆனாலும் நிறுவனம் முன்னேறாது" என ஆதங்கப்படுகின்றனர்.

பல ஐந்தாண்டுகள் கழிந்து ஒரு தன்னலமற்ற சிறந்த பொது மேலளார் வந்து அத்தனை ஊழியர்களையும் அழைத்து, நிறுவனத்தின் பழமையையும் பெருமையையும் எடுத்துக் கூறி, நிறுவனத்தின் வளர்ச்சியும் மேம்பாடும் ஊழியர்கள் ஒற்றுமையாக அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காகச் செய்தாலே உருவாகும் என்று உணர்த்துகிறார். முன்னர் அந்நிறுவனத்தில் குழப்பம் செய்தவர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட, உயர்ந்த கல்வித்தரத்துடன் புதிய உலகப்பார்வையுடன் பணியில் சேர்ந்திருக்கும் இப்போதைய ஊழியர்கள் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்கின்றனர்.

இதைக் காணும்போது, "பழைய பிரிவினைகளைப் பற்றிய எண்ணமே இவர்களுக்கு வராது;இன்னும் ஐந்தாண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி எங்கேயோ சென்றுவிடும்" என்று கூறுகிறார் முன்னர் ஆதங்கப்பட்டவர்களுள் ஒருவர். இது நம்பிக்கை.

அவரிடம் போய் முன்னர் அப்படிச் சொன்னாய்; இபோது இப்படிச் சொல்கிறாய். முரண்பாடில்லையா என வினவுவது அறிவுடைமையாகாது.

நிகழ்ந்துவிட்ட ஒன்றுக்காய் ஆதங்கப்படுவது வேறு;நிகழப்போகும் ஒன்றுக்காய் நம்பிக்கை தெரிவிப்பது என்பது வேறு..

இதில் சொல்லப்பட்ட நிறுவனம், பொது மேலாளர்கள், துணைப்பொது மேலாளர் போன்ற உருவகங்களைப் புரிந்துகொண்டால் ஜெகஜீவன்ராம் யார் எனப்து விளங்கும். அவருக்கு இழைக்கப் பட்ட அநீதியும் இன்னும் தமிழகத்தில் இருக்கும் இரட்டைக் குவளை முறையும் ஏற்படுத்திய ஆதங்கத்தின் விளைவே,"நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்தவருக்கே இந்நிலை இருந்தது என்றால், தீண்டாமைக் கொடுமை மறைய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் பயணப்பட வேண்டுமோ?" என்ற அந்த விடை என்பதை எளிதில் உணரலாம்

உங்கள் வினாவுக்கு அளித்த விடையில்,"இப்போதே இப்படி என்றால் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் உலகம் எங்கேயோ போய் விடும்; மதம், சாதி, மசூதி, கோயில் கடவுள் எல்லாம் சமூகத்தைப் பாதிக்காத தனிநபர் விவகாரம் என்றாகிவிடும்" என்று சொன்னதில் எவ்வித முரணும் இல்லை.

நூறைம்பது ஆண்டுகள் என்பது "ஒன்றரை நூற்றாண்டுகள்" என்பதால் ஒன்றரை நூறாண்டுகள் பயணப்பட்டால் மதம், சாதி, மசூதி, கோயில் கடவுள் எல்லாம் சமூகத்தைப் பாதிக்காத தனிநபர் விவகாரம் என்றாகிவிடும்" என்பது சிறுபிள்ளைக்குக் கூட எளிதில் விளங்கி விடும். 
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

1 comment:

Zakir Hussain said...

//சுப்ரமணிய சாமியை இந்திய ஜனாதிபதி ஆக்கினால் என்ன?//

இவனெ வெச்சு காமெடி கீமடி பண்ணலியே????