Wednesday, April 7, 2010

பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

"தமிழக அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தால் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பி.எட்.​ பட்டதாரிகள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கல்வி அமைச்சர் க.​ பொன்முடி ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.​
விழாவில் கல்வி அமைச்சர் க. பொன்மொடி கலந்து கொண்டுப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது, "4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எட்.,​​ போன்ற படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கின்றன.​ அதனால்,​​ பட்டப் படிப்பு முடித்து பி.எட்.,​​ படிப்பவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை.​ எதிர்காலத்தில் அவர்களின் வேலைவாய்ப்பு மறுக்கப்படாது.
இப்போதைய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தால் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.​ அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பி.எட்.​ பட்டதாரிகள் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.​ கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதைவிட தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதுதான் உண்மையான வேலை. எழுத்தறிவித்தன் இறைவன் ஆவான் என்று வார்த்தைக்காக சொல்லப்படுவதில்லை.​ 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே உணர்ந்து சொல்லப்பட்டது.
ஆசிரியர்கள் தமிழில் பாடம் சொல்லித் தருவதை கௌரவக் குறைவாக நினைக்கின்றனர்.​ இது கூடாது.​ மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.​ பயிற்று மொழியாக தமிழைப் பயன்படுத்துங்கள்.​ கல்வித் துறையில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வருவது கட்டாயம்.​ அதைச் செயல்படுத்தும் பொறுப்பும் ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது" என்று பேசினார்.

1 comment:

Anonymous said...

Very shorts, simple and easy to understand, bet some more comments from your side would be great