Friday, April 23, 2010

விதர்பா விவசாயிகள் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல் தீர்வு - விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் கருத்து!


உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி செய்யப் படுவதால் இந்திய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.  விவசாயத்தில் நட்டமடைந்ததாலும் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததாலும் மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்தப் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல் தகுந்த தீர்வாக அமையலாம் என இயற்கை வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 'கருணா ரத்னா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய எம்எஸ் சுவாமிநாதன், விதர்பா பிரதேச விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு கடன்காரர்கள் அளவிற்கதிகமான வட்டி விதித்ததாலேயே கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்னை முற்றிப்போனதாகக் குறிப்பிட்டார்.  'நேற்று கூட 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன' என்று சொன்ன அவர், 'இப்பிரச்னையைத் தீர்க்கும் சாவி, வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கியியலில் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

சுவாமிநாதன் சிறுவயதினராய் இருக்கும்போது ஒருமுறை அவரது பெற்றோர் அவர் அணிந்திருந்த வளையல், சங்கிலி போன்ற நகைகளை காந்திஜியின் நிவாரண நிதிக்கு வழங்கிவிடும்படி அறிவுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.  அவ்வாறு வசூலிக்கப்பட்ட விலை மதிப்புள்ள பொருள்களை காந்திஜி ஏலமிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை ஹரிஜன மக்களின் நலனுக்காக செலவிட்டு வந்தார்.  சுதந்திரப் போராட்ட வீரரான சுவாமிநாதனின் தந்தை, அவரது தேவைக்கு மிகுதியான பொருள்களை தேவையுடையோருக்காக செலவிடும்படி தன் மகனுக்கு அறிவுறுத்தினார்.

இஸ்லாமிய ஷரியா சட்டம் வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் அடியோடு தடை செய்திருக்கிறது.  இதன் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் கடனுக்கு வட்டி வசூலிப்பதில்லை.  மாறாக, தொழில், விவசாயம் போன்ற காரணங்களுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு அதன் மூலம் பெறப்படும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பெற்றுக் கொள்கின்றன.  உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமிய வங்கியியல் அறிமுகப் படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடந்துக் கொண்டுள்ளன.  ஆனால் இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதை சுப்ரமணியன் சாமி போன்ற சில அரசியல்வாதிகள் எதிர்த்து வருகின்றனர்.
Source : http://www.inneram.com/
விதர்பா விவசாயிகள் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல் தீர்வு -

No comments: