Sunday, April 18, 2010
அந்த உத்தமி எங்கே?
ஆயிஷா! என்னருமை ஆயிஷா!
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாய்! இந்த இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
``ஆயிஷா இவ்வுலகத்தில் இல்லை `` என நினைக்கும் பொழுது எங்கள் மனம் துடிக்கின்றது, கண்கள் குளமாகின்றன.
தேனியைப்போல் சுறுசுறுப்பாக ஓடி ஆடி இயங்கும் ஆயிஷா, இவ்வளவு விரைவில் மீளாத்துயில் கொள்வாய் என கனவிலும் நினைக்கவில்லை.
"ஆயிஷா!, ஆயிஷா!" என எங்கள் மனம் கதறுகிறது. இனி எப்போது நாங்கள் உன்னை காண்போம்.
ஆயிஷா! என் தங்க ஆயிஷா!
இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்த நீ நற்குணம் நிறைந்த பெண்ணாக, எங்கள் அனைவருக்கும் ஓர் இனிய சகோதரியாக, நல்ல சிநேகிதியாக திகழ்ந்தாய். அமைதியாக, மிக மிக அடக்கமாக எங்கள் அனைவருக்கும் உதவி செய்தாய். உன்னைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதலாம். உன் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பாக இருக்கின்றது. மனம் கலங்குகிறது, கண்கள் கசிகின்றது.
ஆயிஷா! என் இனிய ஆயிஷா!
உனக்கு ஆயுள் குறைவு என தெரிந்திருந்தால் எங்கள் வயதை குறைத்து உனக்கு தந்தருள அல்லாஹ்விடம் இறைஞ்சியிருப்போம். "தெரியவில்லையே" என கண்ணீர் வடிக்கின்றோம். உன் மறைவு எங்களுக்கு பேரிழப்பாக உள்ளது.
என் செல்லக்கிழியே, ஆயிஷா! துன்பம் நிறைந்த இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என பறந்து சென்றுவிட்டாயோ?
யா அல்லாஹ்! மர்ஹூமா ஆயிஷாவின் பாவங்களை மன்னித்து, ஆயிஷாவின் மண்ணறையை விசாலமாக்கி, ஒளிமயமாக்கி இறுதிநாள் வரை ஆயிஷா நிம்மதியாக சுகமாக துயில் கொள்ளவும், சொர்க்கத்தின் காற்று கப்ரில் (மண்ணறையில்) வீசும்படியாகவும் கிருபை செய்வாயாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.
-நீடூர் பாத்திமுத்து ஜொஹரா சர்புதீன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment