Tuesday, February 9, 2021

சடப்பொருட்கள் உயிர்பெற்ற தருணங்கள் #நிஷாமன்சூர்

பிரபஞ்சம் அணுக்களால் ஆனது. அணுக்களின் கூட்டமைப்பு மூலம் வடிவங்களும் உருவங்களும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களும் உருவாகின. ஒரு மரம் பூத்து காய்த்து கனி கொடுக்கும்போது மட்டுமே  உயிருள்ளதாக இருப்பதில்லை. வெட்டுப்பட்டு கதவாகவோ மேசையாகவோ நாற்காலியாகவோ அலமாரியாகவோ உருமாறிய பிறகும் உயிரோட்டம் மிகுந்த பொருட்களாகவே மனிதன் பயனுற சேவையாற்றுகின்றன. எனினும் எந்த இடத்தில் எந்த ரூபம் எடுக்கின்றனவோ அதற்கேற்றாற்போல் நன்மை பயப்பனவாகவோ அல்லது தீமைக்கு உடந்தையாகவோ ஆகி விடுகின்றன.

பரிசுத்தவான்களின் கரம்பட்டதால் உயிர்ப்பிக்கப்பட்ட சடப்பொருட்களின் வரலாறு மிக நீண்டது. கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு.நபியின் பள்ளிவாசல் எனப்பொருட்படும் மதினாவில் உள்ள "மஸ்ஜிதுன் நவபி" பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைக்கு முன்னர் நபிகளார்  உரை நிகழ்த்துவதுண்டு. அப்போது துண்டிக்கப்பட்ட ஒரு பேரித்தம் மரத்தின் அடிப்பாகத்தில் சாய்ந்து நின்றபடி உரையாற்றுவார்கள். சீரிய மார்க்கத்தின் தலைவர்,தன்னிகரற்ற இறைத்தூதர் நின்று உரையாற்ற ஒரு மேடை அமைத்தால் நன்றாக இருக்குமே என்று தோழர்கள் மிம்பர் எனும் மேடையை பள்ளியில் அமைத்துத் தருகிறார்கள்.

முதன்முதலாக அந்த மேடையிலேறி கண்மணி நபிகளார் வெள்ளிக்கிழமை உரையாற்றிக் கொண்டிருக்கும்போது நிறைமாத கர்ப்பிணி ஒட்டகை, வேதனையில் முனகுவது போன்ற ஒரு ஒலி எழுகிறது. நபிகளார் பேசப்பேச அந்த ஒலி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த அழுகையொலி எங்கிருந்து வருகிறது என்று அனைவரும் திரும்பித்திரும்பிப் பார்த்து கேள்விக்குறியுடன் தடுமாறுகையில் நபிகளார் மேடையிலிருந்து கீழிறங்கி ஓரமாய் வைக்கப்பட்டிருந்த அந்த பேரித்தம் மரத்துண்டின் அருகில் வந்து நிற்கிறார்கள். ஆம், அந்தப் பேரித்தம் மரத்துண்டுதான் நபிகளாரின் அண்மையை இழந்துவிட்ட துக்கத்தில் அழுது கொண்டிருந்தது. வானளாவிய கருணையின் கனிவு பொங்கும் பார்வையுடன் அந்த மரத்துண்டைப் பார்த்த நபிகளார்,தம் கரங்களால் ஆதுரமாகத் தடவி  அமைதிப்படுத்துகிறார்கள். மெல்லக் குனிந்து "சுவர்க்கத்தில் என்னுடன் நீ இருப்பாய்" என்று கூறியதாகவும் சரித்திரக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.  அந்த அழுகையொலி நின்று அமைதி நிலவிய பின்னர் நபிகளார் மீண்டும் மேடையிலேறி உரையைத் தொடர்கிறார்கள்.

சடப்பொருள்களுக்குள் உறைந்துவிட்ட இயக்கத்தை உயிர்ப்பிக்கும் ஆக்க சக்தியாக ஞானிகளின் அண்மையும் ஸ்பரிசமும் இருந்திருக்கிறது என்பதற்கு அற்புதமான உதாரணமாக இந்த வரலாற்று நிகழ்வு அமைந்திருக்கிறது. இந்த வரலாற்று ஒளியில் ஐயா தமிழன்பனின் ரூமியின் தொப்பி,செருப்பு,கண்ணாடி,சட்டை போன்ற பொருட்கள் குறித்த கவிதைகள் மேலும் மேலும் மெருகேறுகின்றன. இக் கவிதைகளை வாசித்து முடிக்கும்போது  உச்சபட்சமான ஆன்மீக உணர்வில் திளைத்து  ஞான சாகரத்தில் சுழன்று மயங்கும்  தர்வேஷ்களில் ஒருவராக நாமும் ஆகிவிடுகிறோம். இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதைகளாக நான் இவற்றையே குறிப்பிடுவேன்.பொருட்களை தன்னிஷ்டம்போலப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் அந்தப் பொருட்களுக்கு நேர்மையாக வாழ நினைக்கும் சூஃபிய சிந்தனையின்  அடையாளங்களாக உள்ள இந்தக் கவிதை வரிகள், ஆசான் ரூமி தலைக்கு வைத்துப் படுக்கும் செருப்பாகி விட மாட்டோமா என்கிற ஏக்கத்தை இரட்டிப்பாக்கி நம் கண்களைக் கசியவைக்கின்றன.

#தமிழன்பன் இதயத்தில் ஒளிரும் ஆசான் ரூமியின் சுடர்-கட்டுரையிலிருந்து.....

No comments: