Thursday, February 11, 2021

அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் வணக்கமே!

 

அனுமதிக்கப்பட்ட செயல்கள்

அனைத்தும் வணக்கமே!

 -----------கணியூர் இஸ்மாயீல் நாஜியின்

ஜும்மா உரையிலிருந்து

**;********************************

லால்பேட்டை அரபிக் கல்லூரியில் நான் கல்வி பயிலும்  பொழுது முப்தியுல் அஃலம்கைருல் மில்லத்அல்லாமா அப்துல்லாஹ் ஹஜரத ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “ துன்யாவை வெறுக்க வேண்டும், துன்யாவிற்காக வாழக் கூடாது என்கிறார்களே. #துன்யா என்றால் என்ன??’ என எங்கள் வகுப்பில் கேட்டார்கள்.

இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்றார் ஒருவர். திருமணம் செய்து குடும்பம் நடத்துவது துன்யா என்றால் அல்லாஹ்வும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதனை ஏன் வலியுறுத்தியுள்ளார்கள் என்றார்கள் ஹளரத்.

பொருள் தேடுவது என்றார் மற்றொரு மாணவர். தொழுகை முடிந்து விட்டால் பூமியெங்கும் பரவி அல்லாஹ்வின் அருளான பொருளைத் தேடுங்கள்என குர்ஆன் கூறுகிறதே எனக் கூறி புன்னகை புரிந்தார்கள்.

ஒவ்வொரு மாணவரும் மனிதர்கள் விரும்பும் ஒவ்வொரு செயலினைக் கூற அத்தனைக்கும் ஒரு பதிலைக்கூறி அந்த செயலினை சரிதான் என்றார்கள். இறுதியில் பொறுமை இழந்த நாங்கள்  தாங்களே சொல்லுங்கள் என்றோம்.

مأ انساك عن ذكرالله فهي الدنيا.

எவையெல்லாம் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உன்னை மறக்க வைக்கிறதோ அவையெல்லாம் துன்யா இவ்வுலகின் நலனுக்காகச் செய்யப்படுவைகள் என்றார்கள்.

ஆம்! அல்லாஹ்வின் நினைவின்றி நாம் தொழுதால் அதுவும் துன்யா தான். வீண் பகட்டுக்காக தான தர்மம் செய்தால் அதுவும் துன்யா தான்.

அதற்கு மாற்றமாக மனிதன் அல்லாஹ்வின் நினைவுடன் அவன் திருப்தியைப் பெறும் நோக்குடன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மறுமைக்கானது. அதற்கான நன்மை உண்டு. அது வெளிரங்கத்தில் இவ்வுலகத்திற்கான செயலாகத் தெரிந்தாலும் சரியே.

ஒருவர் தன் கடையை திறப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது,

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், லா ஹவ்ல வஅலா குவ்வத இல்ல பில்லாஹ்என்று கூறியவராக ஹலாலான முறையில் வியாபாரம் செய்து என் குடும்பத்தை பராமரிப்பதுடன், ஈட்டும் வருமானத்தில் தான, தர்மம் செய்வேன் என்ற நிய்யத்துடன் தன் கடைக்கு செல்கிறார்.

இஸ்லாம் வலியுறுத்தும் நெறியுடன் வியாபாரம் செய்கிறார். பொருட்களை அளவிலும், நிறுத்தலிலும் மோசடி செய்யாதே என்ற குர்ஆனின் வசனத்தை நினைவில் கொண்டு வியாபாரம் செய்கிறார்.

விற்கின்ற பொருளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை வாடிக்கையாளரிடம் சுட்டிக் காட்டி அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு விற்பனை செய்கிறார்.

இவை அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்தார் என்றால், இந்த வியாபாரம் வணக்கமாக, மறுமைக்கானதாக மாறி விடுகிறது.

உங்கள் முன்னாள் நான் பயான் செய்கிறேன். குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் அடுக்கடுக்காக உங்கள் முன்னால் பேசுகிறேன். இந்த செயல் மறுமைக்கானதா? இவ்வுலகிற்கானதா? என்பது எனது எண்ணத்தை பொறுத்து தான் அமையும்.

நான் செய்கின்ற இந்த பயானின் மூலம் என் நோக்கம் எல்லோரும் பாராட்ட வேண்டும். நன்றாக பேசுகிறார் என்று புகழ வேண்டும் என்று இருந்தாலோ அல்லது உங்களிடமிருந்து எதாவது உதவி கிடைக்கும் என்ற நோக்கிலோ இருந்தாலோ நான் பேசிய குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ எந்த நன்மையையும் தராது.

மாறாக, அல்லாஹ் எனக்களித்திருக்கின்ற கல்வி ஞானத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதன் மூலம் மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்று நிய்யத் செய்தால் இந்த செயல் மறுமைக்கானதாக, நன்மைக்குரியதாக மாறும்.

அதே போன்று ஒருவர் ஹஜ் செய்கிறார், உம்ரா செய்கிறார் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் செய்தால் அக்காரியம் துன்யாவுடைய காரியமாக மாறிவிடும். அல்லாஹ்வின் திருப்தியை பெரும் நோக்குடன் செய்தால் அந்த காரியம் மறுமைக்கானதாக மாறும்.

இவ்வாறே, நம் அன்றாடம் செய்யும், அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்திக்காக என செய்தால் அவை அனைத்தும் வணக்கமாக மாறிவிடும்.

உதாரணமாக, நாம் காலையில் பல் விலக்குகிறோம் அந்நேரத்தில் பல் துலக்குவது சுன்னத் என்றும் மஸ்ஜிதிற்கு சென்றால் அருகில் தொழுபவர்களுக்கு துர்நாற்றம் அடிக்க கூடாது என்ற நோக்கத்தோடு நாம் பல் விலக்கினால் அவை நன்மை தரகூடியதாக இபாதத்தாக மாறி விடுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை. நாம் அனைவரும் காலையில் குளித்திருப்போம். இது எப்போதும் வழமையாக செய்யும் வேலை தான். அதே நேரத்தில், இன்று நாம் குளிக்கும் போது  வெள்ளிக்கிழமை குளிப்பது நபிகளார் வலியுறுத்திய சுன்னத் என்று நிய்யத் செய்து குளித்தால் அது வணக்கமாக, நன்மை தரும் செயலாக மாறிவிடுகிறது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியால்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு தாங்கள் வசிக்கும் வீட்டின் தெருவழியாக போவார்களாம். தொழுது முடித்து செல்கின்ற போது கடைத் தெரு வழியாக வீட்டிற்கு செல்வார்களாம்.

அதை பார்த்த ஒரு மனிதர், நபி தோழரே! இடங்களில் மோசமானது கடைத்தெரு என்று நபிகளார் சொல்லியிருக்க நீங்கள் ஏன் கடை த்தெரு வழியாக செல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு, தெரிந்தவருக்கும் தெரியாதவர்களு க்கும் ஸலாம் சொல்லுங்கள் என நபியவர்கள் சொன்னார்கள், வழக்கமாக செல்லும் தெரு வழியாக சென்றால் நமக்கு தெரிந்தவருக்கு மட்டும் தான் ஸலாம் சொல்ல முடியும் கடைத்தெரு வழியாக சென்றால், நமக்கு அறிமுகமில்லாத பலரை பார்த்து ஸலாம் சொல்ல முடியும். எனவே அந்த ஹதீஸை நிறைவேற்றுவதற்காக கடைத்தெரு வழியாக செல்கிறேன் என்று சொன்னார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஜாஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், எப்பொழுதும் அனுமதியளிக்கப்பட்ட உயர் தர ஆடையையே அணிவார்களாம். அவர்களிடம் ஒருவர் கேட்டார். நபியுடைய பேரராக இருந்து கொண்டு ஏன் நீங்கள் ஆடம்பரமான ஆடையை அணிகிறீர்கள். உங்களுக்கு இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் எனும் ஆசை வந்துவிட்டதா? என்று கேட்டார்.

அதற்கு இமாம் அவர்கள் தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழட்டிக் காட்டினார்கள். உள்ளே, உடலை உறுத்துகின்ற கம்பளி ஆடையை அணிந்திருந்தார்கள். இந்த உலக இன்பங்களை அனுபவிக்க கூடாது என்பதற்காக நான் இந்த ஆடையை அணிந்திருக்கிறேன். வெளியே செல்வந்தர்களுக்கான ஆடையை அணிந்திருக்கிறேன்  ஏனேனில் என்னை அறியாத  ஏழைகள் நான் செல்வந்தரை போன்று காட்சியளித்தால், என்னிடம் வந்து உதவி கேட்பார்கள் என்பதற்காக  தான் இந்த ஆடையை அணிகிறேன் என்றார்கள்.

   தன்னுடைய புதிய வீட்டிற்கு மாணவர் ஒருவர் தன்னுடைய ஆசிரியரை அழைத்துச் சென்றார். அந்தவீட்டின் கூடத்தின் மேல் பகுதியில் சின்ன சின்ன ஜன்னல்களை அமைத்திருப்பதைக்கண்டு இது எதற்காக என ஆசிரியர்கேட்டார்

நன்றாக காற்றுவருவதற்காக என்றார மாணவர்.

அடடா நன்மையை வீணாக்கிவிட்டாயே

மஸ்ஜிதில் சொல்லப்படும் பாங்கொலி தெளிவாக கேட்கவேண்டும் என நிய்யத்துடன் இந்த ஜன்னல்களை அமைத்திருந்தால் நன்மையும் கிடைத்திருக்கும் காற்றும் தானாக வந்திருக்கும் என்றார்.

    உணவு பரிமாறும் மனைவிக்கு அன்புடன்வாயில் உணவூட்டுவதும் தர்மம் என நபிபெருமான்  சொன்னதை நினைவில் கொண்டு உங்கள் மனைவிக்கு உணவூட்டினால் மனைவி மகிழ்வடை வதுடன் அல்லாஹ்வின் நற்கூலியும் கிடைக்கும்.

இவ்வாறு, அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியை பெரும் நோக்குடன் செய்தால் அவை அனைத்தும் இபாதத்தாக, வணக்கமாக, மறுமைக்கானதாக மாறிவிடும்.



கணியூர் இஸ்மாயீல் நாஜி


No comments: