Sunday, April 19, 2020

உணர்வுகளால் உயிர்த்தெழுவோம்


வானமே எல்லை என்ற இலக்கை நிர்ணயித்த மனிதன் இன்று அதனையும் தாண்டி தன் அறிவாற்றலை நிரூபித்துள்ளான். உலகில் இயற்கை வளங்களைப் பாழ்படுத்திவிட்டு இன்னபிற கோள்களில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றான். உலகில் வியாபித்திருக்கும் வற்றா ஜீவ நதிகளின் பாதையை செப்பனிடாமல் வல்லரசுகள் வானில் தண்ணீரைத் தேடுவது  முரண்பாடுகளாய் தெரியவில்லையா?

தொலை நுட்பங்களின் தொலைநோக்கு சிந்தனை என்ற ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக கிரகங்களைத் துளைத்து  பிரபஞ்சத்தின் எல்லையைத் தொட்டு விட்ட நிலை. அறிவின் முதிர்ச்சியும் கிட்டத்தட்ட உச்சத்தை அடைந்து விட்டது உண்மை தான் எண்ணியதை எல்லாம் கையகப்படுத்தி விட்டான் மனிதன். ஆனாலும் ஓயவில்லை இறைவனுக்கு சவால்விடும் மமதையை என்ற குணத்தை கையில்  எடுத்தான். குளோனிங் மூலம் பல உயிர்களையும், காய்கறி வகைகளையும் உற்பத்தி செய்தான். என்னால் எல்லாம் முடியும் என்றான். ஆனால், அவன் உற்பத்தி செய்ததில் விளைந்த விஷத்தன்மையை கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை. வினையை விளைத்து விட்டு பலனை அனுபவித்து கொண்டிருக்கிறான் மீளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்துள்ளான்


அகிலம் அமைதிப்பூங்காவாக நிலைத்திருப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. படைவீரர்களின் உயிரைக் காக்க “பயோ வார் “என்ற அணு யுத்தங்களுக்கு தயாராகக் காத்திருக்கிறான் , வியாபாரிகளாய் மாறிவிட்ட வல்லரசுகளுக்கு மனித உயிர் ஒரு பொருட்டல்ல அதுவும் பண்டமாற்று பொருட்களில் ஒன்று தான்

. கொத்துக் கொத்தாய் உயிர்கள் கொல்லப்பட்ட இடங்களில் மனித நேயங்கள் மனிதாபிமானங்குகள் குழி தோண்டி  புதைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் எல்லையை வகுத்தவன் பிற நாட்டு கனிம சுரண்டல்களில் பேராசை கொண்டிருந்தான். பணம் மட்டுமே குறிக்கோளாய் அவன் பயணம் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முதுகுகளில் கத்தியை சொருகும் கை குலுக்கல்களில் நட்புத்தன்மை செத்துக் கொண்டிருக்கிறது. ஆதாயம் மட்டுமே குறிக்கோளாய் அமைந்த போலியான நட்புகளை இரு சாராருக்கும் புரிந்திருந்தும் அவைகள் அங்கீகரிக்கப்பட்டன.

 ஒளித்து வைக்கப்பட்டுள்ள அணுஆயுதங்கள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் நிறைந்த ஆயுத வியாபாரங்கள் அமைதியாய் நடந்து கொண்டிருக்கின்றன. எதற்காக இத்தனை சிரமபரிகாரங்கள்? பணம் பணம் பணம் மட்டுமே   அவர்மகளுக்கு மனித  உயிர்களை  விலைபேசும் ஒரே நோக்கத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

அறிவின் வளர்ச்சியில் மனித உணர்வுகள் செத்துக் கொண்டிருக்கின்றன. அபரிமிதமான அறிவின் முதிர்ச்சி இல்லாமல் மனிதனால் வாழ முடியும். ஆனால், இயற்கையாய் உள்ளூரும் மனித நேயங்கள் இல்லாமல் எப்படி சமூகங்கள் நிலைபெற்றிருக்கும்?

உலகின் அத்தனைப் படைப்புகளும் ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்வு நிலையை ஏற்றுக் கொண்டதால்தான் காடுகளில் மிருகங்களும், நாடுகளில் மனிதர்களும் வாழ்வதை தங்களாகவே வரையறுத்துக் கொண்டனர். அந்த நிலைகளில் மாற்றங்களை மனிதன் உருவாக்கும் போது இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது.

கடலின் ஆழங்களில் அணுகுண்டுகள் பரிசோதனையாக வெடிக்கச் செய்கின்றான். சோதனைகள் வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், அதன் பின்விளைவுகள் சுனாமிகளாய் பெருந்துயர் தருவதை எப்படி நிறுத்த முடியும்? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று மனிதன் போட்ட கணக்கு மட்டுமல்ல. அதனை இறைவனும்  மனிதனுக்கு உணர்த்தினான்  மனிதனின்   ஒவ்வொரு செயல்பாடுகளும் உலகை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்வதை உணர்ந்தான் இல்லை. அதனால் தான் இறைவன் அவ்வப்போது அதனை அவனுக்கு நினைவூட்டுவதற்கு தானும் சில அடையாளங்களை காட்டுகின்றான்.

சுனாமி பேரலையில் கொத்துக்கொத்தாய் மனித உயிர்கள் சுருட்டிக் கொண்டு செல்லப்பட்டன. உடல்களை புதைப்பதா? எரிப்பதா? என்ன ஈம கிரியைகளை செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு நியதியும் இன்றி அழுகி மக்கிய மனித உயிர்கள் எத்தனை? காணாமல்போனவர்கள், காலமானார்கள் என்ற அட்டவணையில் தான் மிஞ்சி நிற்கின்றனர். மனிதன் இதனாலும் பாடம் படித்தான் இல்லை

அரசியல் இலாபங்களுக்காக, பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அமேசான் காடுகள் எரியூட்டப்பட்டன. உலகின் நுரையீரலே எரிந்தது. கரியமில வாயு சூழ்ந்ததால் உயிர் மூச்சு வாயு உலகில் தன் விகிதாச்சாரத்தை குறைத்துக் கொண்டது. அதனால் எத்தனை வியாதிகள் உலகில் வியாபித்தன. இதிலும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை மனிதன்.

அநியாயங்கள் அளவுக்கு அதிகமாக தலைதூக்கும் போது தர்மம் அவதாரம் எடுப்பது அந்த காலம். இது கணினி யுகம் கையடக்கம் கொண்ட பொத்தான்களால் பொல்லாத்தனம் அத்தனையையும் செய்ய முடியும். அது மனிதன் மட்டும்  அறிந்ததல்ல இறைவன் தந்த ஆற்றலும்  தான் அதனால் தான் இறைவன் அவ்வப்போது அடையாளங்களைக் காட்டுகின்றான்.

சீன தேசத்தில் வூஹான் மாவட்டத்தில் அழுத்தப்பட்ட பொத்தான் உலகெங்கும் பரவியுள்ளது. கண்ணுக்கு தெரியாத சிறு கிருமிகள் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இறைவன் அடையாளங்களை காட்டிய போதெல்லாம் அறிவை மதித்த மனிதன் உணர்வுகளை மதிக்கத் தவறியதால் இத்தனை அழிவுகள். கொரோனா கிருமியின் கோரத்தாண்டவம் நாளுக்குநாள் வீரியம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இத்தாலி, ஈரான், சிரியா, அமெரிக்கா என்று தன் பயணத்தை ஏவப்பட்ட திசையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இத்தாலி தன் கவனக்குறைவால் ஏற்படுத்திக்கொண்ட பாதிப்பை தடை செய்ய முடியவில்லை. சரியான மருத்துவ உதவி இல்லை. ஏன் பிரேதங்களை புதைப்பதற்கு கூட இடமில்லையாம். அந்நாட்டு பிரதமர் உலகின் உதவியை எதிர்பார்க்கிறார்.

மதம், ஜாதி, உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற எந்தவித பாகுபாடும் அதற்கில்லை. யாரைத் தாக்க வேண்டும் என்ற இலக்கும் இல்லை. எதிர்படுபர்களை ஒழித்துக் கட்டுவது மட்டுமே அதன் உள்நோக்கம். கனடா பிரதமரின் மனைவி கண்ணீரோடு காணொளியில் வந்து கரம் கூப்பகிறார் இங்கிலாந்து அரண்மனையில்  வாழும் அத்தனைப் பேரையும் விடுத்து அரசு வாரிசு இளவரசர் சார்லசை கொரோனா தனிமை படுத்தியுள்ளது தர்க்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்து அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது

இங்கிலாந்து பிரதமர் கெயின் ஜான்சன் என்ன செய்வதென்று அறியாமல் அன்னியப் படுத்தப்பட்டு தனிமைச்சிறையில் தவித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பல ஆற்றல் மிக்கவர்கள், அறிவிற் சிறந்தோர் வெளியே தெரியாமல் இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பரிதவிப்பில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு நாம் அச்சப்படத் தேவையில்லை. மனிதனை அச்சுறுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட அடையாளம் இது இந்த  அடையாளங்களைப் புரிந்துகொண்டு நம் நிலைமையை மாற்றிக்கொண்டால் ஓரிரவில் எப்படி இது உருவானதோ அதேபோன்று ஒரே இரவில் உருக்குலைந்தும் போகும் .

இதன் மூலம் இறைவன் நம்மிடம் எதையோ ஒன்றை எதிர்பார்க்கிறான் என்பதை உணர்கிறோமா நாம்?

உலகில் இயற்கையில் எந்த வித மாற்றங்களும் நிகழவில்லை. எல்லா தட்பவெப்ப நிலைகளும் சீறாக  நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வெயில் காய்கிறது, மழை பெய்கிறது, பனி பொழிகிறது, உணவுகள் தாராளமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது.மிருகங்கள் சந்தோஸமாய் சுற்றி வருகின்றன ஆனால், மனிதன் மட்டும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தனிமைச் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறான். நாளை என்ன நடக்கும் என்பதில் நம்பிக்கையற்றவனாக வெறும் நடைபிணங்களாய் நடமாடிக் கொண்டிருக்கின்றான்

தெய்வங்கள் மனிதனை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டன. கர்ப்பகிரகங்களில், தீபாராதனைகள் இல்லை. கோயில்கள் இருளில் மூழ்கியுள்ளன. தேவாலயங்களில் ஆராதனைகள் இல்லை. ஆலயமணி ஒழிக்கவில்லை, தொழுகையை நோக்கி வாருங்கள் என்ற பாங்கொலி வீட்டில் தொழுங்கள் என்று கட்டளையிடுகின்றன. ஏன் இந்த அவலநிலை?

இவையெல்லாம் எதனைக் காட்டுகின்றன. இறைவன் நம்மை அவன் வீட்டிற்கு அழைப்பதில் விருப்பம் இல்லை என்பதைத்தானே? அது மட்டுமா? உறவுகளை உதாசீனப்படுத்தினீர்களா அவர்களை விட்டு விலகி இருங்கள். பக்கத்து வீட்டுக்காரர்களோடு பகையா அவர்களைப் பார்ப்பதற்கே  தடை. ஒரே வீட்டிலேயே வாழ்ந்தும் மனங்களில் விசாலங்கள் இல்லையா இடைவெளி விட்டு  வாழ வேண்டிய கட்டாயம். இன்றைய சூழ்நிலைகளின் கோரங்களுக்கு இவைகள்  காரணமாய் இருக்கலாமா? இவைகள் சரியானால் நிலமை சீர்திருந்துமா! நம்முன் உள்ள பெரிய கேள்விக்குறி ?

அறிவியலும், ஆன்மிகமும் இணையான இரட்டைக் கோடுகள். உலகம் பயணிப்பதற்கு இரண்டும் மிக அவசியம். எனவே இந்த நிலை மாற அணு ஆயுதங்களால் அச்சப்பட்டு கிடக்கும் மனிதனுக்கு அவை ஆக்கபூர்வமான திசைகளில் மடைமாற்றப்பட்டு அமைதியை  வழங்க வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட்டு மத, மன மாச்சரியங்கள் களையப்பட்டு மனித நேயம் மிளிர வேண்டும்.

வெள்ளங்களில், புயல்களில் மீட்புப் பணிக்காக ஒன்றிணைந்த உள்ளங்களில் ஏற்பட்ட இடைவெளிகளும், விரிசல்களும் ஒட்டு மொத்தமாய் விலக வேண்டும் அங்கு அன்பும் பாசமும் பிரவாகமாய் வெளிப்பட்டு அவை நிதந்தரமாய்  நிலைபெறச் செய்யவேண்டும். சுபிட்சம் நிறைந்த காலகட்டத்தில் எப்படி ஒன்றிணைந்து வாழ்ந்தோமோ அந்த நிலைமை மீண்டும் வரவேண்டும்.

உங்தகளைத் தனிமைப்படுத்தி  கொள்ளுங்கள் . இது தற்காலிகமானதுதான். மீண்டு வருவதற்கு நாம் சில  வேள்விகள் செய்ய வேண்டும்

அதற்கு இடையில் இன்னலுக்கு ஆளாகி இருப்போரின் துயர்துடைக்க கரங்கள் ஒன்று சேரட்டும். நடைபாதை, நடுத்தர, ஏழை, எளியவருக்கு அன்றாட உணவு, உடை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். வெறிச்சோடிக் கிடக்கும் மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் அடைக்கலம் தரும் இடமாக, மருத்துவமனைகளாக மாற்றப்படவேண்டும். முதியோர் இல்லங்கள், காப்பகங்கள், கல்விக்கூடங்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அன்றாடகாச்சிகளின் வாழ்வாதாரத்திற்கு அரசு மட்டுமல்ல முடிந்தவர்கள் எல்லாம் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் பிரபலங்கள் மேல்மட்ட பிரமுகர்கள் மனம் இளகி அவர்கள் காசு பைகள் விசாலமாய் திறக்கப்பட வேண்டும்

இளைஞர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன்னார்வ தொண்டர்களாய் அரசுக்கு உதவ முன் வர வேண்டும்  அவர்களின் அத்தியாவசிய தேவைகள் அரசால் நிறைவேற்றப் படவேண்டும் கல்விக் கூடங்களில் கட்டணங்கள் கனிசமாய் குறைக்கப்பட வேண்டும்

இவற்றையெல்லாம் நாம் செய்யும் போது இறைவன் அதனை  உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இவைகளில் உறுதித்தன்மை நிலைக்கும் பட்சத்தில் இறைவன் ஒருவேளை மனம் குளிர்ந்து கொடிய கொரோனாவை அப்புறப்படுத்தலாம். விகர்ப்பங்கள் இன்றி உணர்வுகள் ஒன்றிணைந்தால் அந்த அற்புதம் நடக்கும்.

அத்தனை வல்லரசுகளும் இறைவனிடம் கையேந்துங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சாதாரண சோப்பில் கரைந்துவிடும் அந்தக் கிருமியின் மூலம் ஏற்படும் தாக்கத்தை தடுக்க மனிதனால் முடியவில்லை என்றால் மனிதனின் ஆற்றல் இறைவன் வகுத்தளித்த அந்த  எல்லை வரை மட்டுமே என்பது தான் உண்மை

எனவே இன்றைய இந்த நிலமைக்கு அறிவியல் பூர்வமாக எத்தனை காரணங்கள் இருந்த போதிலும் அதை மதித்து அது விதிக்கும் கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வதோடு ஆன்மீகத்தில் திளைக்கும் இந்தியர்கள் நாம் இறைவனை சாந்த படுத்தினால் நம் நிலைகளை அவன் விரும்புவது போல் மாற்றிக் கொண்டால் மாற்றங்கள் தன்னால் நிகழும் மறுமலரச்சிகள் தாமே வந்து நம்மை அரவணைத்துக் கொள்ளும்

இறைவனிடம் கையேந்துவோம். இன்னல்களில் இருந்து விடுபடுவோம். உள்ளங்களால் உணர்வுகளால் ஒன்றிணைவோம். உலகில் புதிய விடியல் தோன்றட்டும்.

எழுத்தாளர். மு. முகமது யூசுப். உடன்குடி
From: Mohamed Yousuf <mmyousuf.is@gmail.com>

முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com

No comments: