Friday, February 9, 2018

அஜ்மானில் தமிழக கல்வியாளருடன் ஒரு சந்திப்பு

அஜ்மானில் தமிழக கல்வியாளருடன் ஒரு சந்திப்பு

அஜ்மானில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஷேக் ஜப்பார் அலி வசித்து வருகிறார்.
அவருடன் மேற்கொண்ட சந்திப்பில் இருந்து கிடைத்த விபரம் வருமாறு :
ஷேக் ஜப்பார் அலி வாணியம்பாடியில் கடந்த 1948-ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது பெற்றோர்கள் ஷேக் தாவுது மற்றும் ஜைத்தூன் பீவி ஆவர்.
இவருடன் மனைவி, மூன்று மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது மூன்று மருமகள்களும் அஜ்மானில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றனர்.

இவர் தனது பள்ளிப்படிப்பை வாணியம்பாடி இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளியில் படித்தார். அதனையடுத்து இஸ்லாமிய கல்லூரியில் 1964-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை பி.எஸ்.சி. கணிதம் பயின்றார். அதனையடுத்து பி.டி. படிப்பை காட்பாடி அரசினர் பயிற்சிக் கல்லூரியில் படித்தார்.
மேல்விஷாரம் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர் மசாருல் உலூம் மேல்நிலைப்பள்ளி, சென்னை முர்துசாவியா ஓரியண்டல் பள்ளிக்கூடம், சென்னை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கணித ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.
1992-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை அல் அய்ன் இஸ்லாஹி பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் பின்னர் கோழிக்கோடு, மாலத்தீவு, கொல்லம் ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2004-ஆம் ஆண்டு சார்ஜாவில் உள்ள நியூ இந்தியன் மாடல் ஸ்கூலில் ( NIMS )  தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்ஹ்ட 2010-ஆம் ஆண்டு வரை இந்த பணியில் இருந்தார்.
சென்னையில் உள்ள லயன்ஸ் கிளப்பின் சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதனையடுத்து 2010-14-ஆம் ஆண்டு வரை ஸ்பிரிங்டேல் இந்தியப் பள்ளிக்கூடத்தின் இயக்குநராக பணிபுரிந்தார். அதனையடுத்து தற்போது அமீரகத்தில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் ஆலோசகராக இருந்து வருகிறார்.
அமீரகத்தைப் பொறுத்தவரை கல்வி முறை சிறப்பாக இருந்து வருகிறது. எனினும் இந்தியப் பள்ளிக்கூடங்களில் spoon feeding எனப்படும் முறை இருந்து வருகிறது. பள்ளிப்படிப்புடன் வெளியுலக அனுபவம் அவசியம் ஆகும்.
இதனால் இங்கு படிப்பவர்களுக்கு மொழியில் புலமை அதிகம் இருந்தாலும், பாடத்தில் உள்ள அறிவு குறைந்து காணப்படுகிறது. தற்போது மருத்துவப் படிப்பில் சேர நீட் எனப்படும் தேர்வுகள் இருந்து வருகின்றன. இதனை எதிர்கொள்ள போதிய அனுபவம் மற்றும் பயிற்சி மிகவும் அவசியம் ஆகும். இதனால் அமீரகத்தில் வசித்து வரும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சியினை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அமீரகத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர விரும்பும் ஆசிரியர்களுக்கு அஞ்சல் வழியில் படித்திருந்தால் பணி கிடைப்பது இயலாத காரியம். இதற்கு தமிழகத்தில் இருந்து வரும் கல்வி முறை பற்றி தெரியாமல் இருப்பதே காரணம் ஆகும். இது குறித்து அமீரக கல்வித்துறைக்கு முறையாக தெரிவித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
மேலும் இங்கு கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியராக சேர மாண்டிசோரி படித்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது.
அமீரகத்தை பொறுத்த வரை கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். இதனால் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இங்கு பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் பள்ளிக்கூடத்தை தொடங்க முன் வராமைக்கு காரணம் ஆகும்.
கல்லூரியில் படிக்கும் போது கவிக்கோ அப்துல் ரஹ்மான் இவரது ஆசிரியராக இருந்தார். இதனால் தமிழின் மீது ஆர்வம் ஏற்பட்டது. மேலும் நெடுஞ்செழியன், மதியழகன், அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் நடத்திய தமிழ் இதழ்களை அதிகம் வாசித்து வரும் பழக்கம் இருந்தது. இதனால் விடுமுறை நாள்களில் நூலகங்களில் தனது பொழுதை அதிகம் கழிக்கும் நிலை இருந்து வந்தது. மேலும் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார்.
அமீரகத்தில் பள்ளிக்கூடத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்ததால் பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் கல்வி தொடர்பான ஆலோசனையை வழங்க சிறப்பான வாய்ப்பு இருந்தது.
தன்னிடம் படித்தவர்கள் அமீரகத்திலும், இந்தியாவிலும், பிற வளைகுடா நாடுகளிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். இது தனக்கு பெருமையாக இருந்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும் கல்வி தொடர்பாக ஆலோசனைகள் தேவைப்படுவோர் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.
 from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: