Tuesday, February 20, 2018

மழைக்காலத்து ஈரம்

-தாஜ்

காலை மணி பத்து. டிஃபன் சாப்பிட்டாகிவிட்டது. முற்றத்தில் சூரியனின் உக்ரம் விழுந்து, குட்டிச் சுவற்றைப் பற்றி மெலேறுகிறது. தாயாரின் திட்டு சின்னச் சின்ன வார்த்தைகளின் முனங்களாக கிளம்பி, வெடிக்கத் துவங்குகிறது. கொல்லைப்புறக் கதவை திறக்கிறேன், தளைகொள்ளா பச்சையடர்ந்த மரங்கள் வளைந்து கிடக்கின்றன. நல்ல பருவம் கொண்ட அம் மரத்தின் நாளைய கனிகள், அதன் கிளைகளில் இன்றைய காய்களாக முத்து முத்தெனத் திரண்டுக் கொத்துக் கொத்தாகத் தெரிகிறது. கோழியைத் சேவல் திரும்பத் திரும்ப துரத்துகிறது. பக்கத்து வீட்டில், தாயுக்கும், அவரது மூத்த மகளுக்குமான வழக்கமான வாய்ச் சண்டை, நேரம் தப்பாமல் இன்றைக்கும் தடித்து உரக்க தெளிவாக கேட்கிறது. யார், யார்யாரோடு படுத்தார்கள் என்கிற உச்சக்கட்ட ஆய்வு நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. தினம் தினம் கேட்டு சளித்துப் போன வசவு! ஆனால்,  அவர்களுக்கு அது சலிப்பதாக இல்லை. என்றாலும், பொழுதின் மற்ற நேரங்களில், அந்த தாயும் மகளும், வெளியுலகம் காண கொள்ளும் அன்னோன்னியம் காண்போரை வியக்கச் செய்யும்!



என் நடை அவசரம் கொள்கிறது. எங்களது நீளம் கூடிய கொல்லையில், இரு புறமும் வரிசைக்கட்டி வளர்க்கிற தென்னைக் கன்றுகளின் நீட்டோலைகள் முகத்தில் நெடுக தட்டுப்பட, அவற்றை விலக்கியவனக நடக்கிறேன். ஒரு கன்னிவாய்க்கால் சலசலத்தப்படிக்கு நிறை கொள்ளா நீரோடு கொல்லையின் வடபுற எல்லையாக ஓடுகிறது. அதனோர வேலி அருகில் நின்று, அந் நீரில் படைப்படையாக ஓடித் திரியும் மீன் குஞ்சுகளைப் பார்க்கிறேன். அப்படியே அள்ளி முத்தமிட நினைத்து, சிரிக்கிறேன்.

வேலியைத் திறந்துக்கொண்டு, கன்னியைத் தாண்ட. கூடவே 'இட்லி சட்னி' ஏப்பம். இன்னொரு புறம் பாதமெல்லாம் சகதி. மேட்டில் ஏறுகிறேன். ரொம்பதூரம் பச்சையான வயல் விரிகிறது! காற்றுக்கு அது அசைந்துக் கொடுத்து ஆட்டம் காட்டுவதும்தான் எத்தனை அழகு! அதன் மையத்தில் நீளும் வரப்பில் நடக்கிறேன். காலில் அப்பிய சகதிகளை புல்தரையில் தேய்த்து துடைத்தப்படி, வரப்பின் போக்கில் சென்று, வலது புறமாகத் திரும்பி, மேடு பள்ளமெல்லாம் ஏறி இறங்கி, ஓரிரு பாம்புப் புற்றுகளையும் கடந்து,  ஓங்கி நிற்கும் பனை மரவரிசையோடு கிழக்குப் பார்த்த மேட்டுப் பகுதி ஒன்றின் மீது ஏறி நிற்கிறேன்.

மேட்டுப் பகுதியின் இடதுபுறம் சற்றுப் பெரிய வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. கரைகளைத் தொட்டப்படி, மையத்தில் சுழித்துக்கொண்டு தண்ணீர் மெதுவாக நகர்கிறது. வாய்க்கால் வளைந்துத் திரும்பும் வளைவின் கரையோரம் கேரைகளின் மீதமர்ந்து ஒரு கிழவனும் ஒரு பொடியனும் சிரத்தையாக தூண்டில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது கவனம் தங்கள் தங்கள் தூண்டியல்களின் தக்கைகள் மீது பதிந்திருக்கிறது. தக்கையின் மீது பதிந்திருக்கும் அவர்களது கவனம்தான் அன்றைய அவர்களது வயிற்றுப்பாட்டிற்கான ஆதாரம்! மனசு கஷ்டமாக பார்வையை திருப்பினேன்.

அவர்களின் மீன்பிடி சிரத்தைக்கு பங்கம்வராது தூரத்தே நகர்ந்து, வாய்க்காலின் இன்னொரு திருப்ப முனைக்குப் போய், கைலியை அள்ளி மடித்து, அதனை ஆண்ணுருப்போடு சேர்த்துப் பிடித்தப்படிக்கு வாய்க்காலைக் கடந்து, எதிர்வரப்பில் மீண்டும் நடக்கிறேன். கால்களில் சுருக் சுருக்கென்ற வலி! நின்று, பாதத்தைத் தூக்கி விரலால் தடவிப்பார்க்கிறேன். தைத்த முள் தட்டுப்படுகிறது. அதை வெளியே நிமிட்டி எடுக்க இப்போதைக்கு அவகாசமில்லை. பாதங்களை ஒருமாதிரி குத்தலாக வைத்து நடக்கிறேன். வழியில் ஆங்காங்கே கவிழ்ந்துக்கிடக்கின்றன இலந்தை மர முட்கிளைகள்! சட்டையிலும், தலையிலும் அக்கிளைகள் தைத்தப்படி இருக்க, அந்த உபாதைகளை சகித்தப்படியும், புறங்கையால் விலக்கியப்படியும் நடக்கிறேன்.

அதோ, நான் தேடிவந்த என் சமஸ்தானம் தெரிகிறது. கிளிகளும் பறவைகளும் கீதம்பாடுவது கேட்கிறது. சின்னச் சிட்டுகள் கிளைகளிலிருந்து கிறீச்சிட்டு மேலெழும்பி, என் வரவை வட்டமிட்டு ஊர்ஜிதப்படுத்தியப்படி கிளைகளில் அமர்கிறது. எத்தனையோ ஆண்டுகள் கொண்ட இழுப்பை மரங்கள் அங்கே இருமாப்பாய் திட்டு திட்டாய், நான் மலைக்க நிற்கிறது. அதன் உடம்புகளில் ஏகப்பட்ட நெளி நெளியான திருகல்கள்! மரங்களைச் சுற்றி இழுப்பைப் பூக்கள் சிதறிக் கிடக்க, மனம் கொள்ளா மணம்! எண்ணற்ற மூலிகைச் செடிக்கொடிகள் பரந்து விரிந்து ஸ்தலம் பூராவையும் பசுமைப் படுத்தியிருக்கிறது. ஆனாலும், கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் தெரியும் இழுப்பையும் அது அல்லாத இன்னும் பலவிதப் பெரிய மரங்களும் சேர்ந்து, மனிதர்களை இந்தப் பக்கம் வரவொட்டாது அஞ்ச வைக்கிறதென்பதும் நிஜம்.

எங்க ஊரின் வடகிழக்குக் கோடியிலிருந்த ஆதிக் காட்டை, தோப்பாக சரிப்படுத்திய ஆதிக்க வம்சத்தின் பிரதிநிதி ஒருவன், எப்பொழுதோ அங்கே பங்களா ஒன்றையும் கட்டியெழுப்பி,  தனிமை வாசம் செய்த இடம் என்கிறார்கள். மனைவியல்லாத பெண்களுடன் ஆதிக்கம் சல்லாபம் புரிந்த இடம் இது என்பதும் காதுவழிச் செய்திகள்! அந்த பங்களா இருந்த இடத்தில் இப்போது அரித்தச் செங்கல் சுவர்கள்தான் பாக்கி! ஆதிக்கத்தின் அடாவடிகள் அத்தனைக்கும் நேரடிச் சாட்சியாக இது மட்டுமே மீதம்! இன்றைக்கு அங்கே உதவியென யாரேணும் குரல் கொடுத்தால் கூட, ஓடி வந்து உதவுவதற்கு அதன் சுற்றுவட்டத்தில் மனித வாடையே கிடையாது. இப்போது அங்கே வாழ்வதும், வளர்வதும், பாடுவதும், பறப்பதும், ஆடுவதும், ஓடுவதும், ஊர்வதும், உலாவுவதும் என்று எல்லாமே மனிதரில்லா சிருஷ்டிகள் மட்டுமே!

என்னுடைய கல்லூரி காலத்தின் விடுமுறை தினங்களில் கனமான புத்தகங்களுடன் இங்கே... இந்த விஸ்தீரணத்துக்குதான் வந்துவிடுவேன். எங்காவது ஒரு மரத்தின் மீது ஒய்யாரமாய் சாய்ந்துக்கொண்டு மணிக்கணக்கில் படிப்பேன். இயற்கை எனக்குப் பின்னணி வாசிக்கும். படித்தது அவ்வளவும் மண்டைக்குள் ஒட்டிக்கொள்ள, அப்படியே அயர்ந்து அதன் அடியில் சாய்ந்துவிடுவேன்.  தென்றல் தாலாட்ட, நேரம் போவதும் தெரியாது. விழித்தெழுந்தப்பின்னும், வீட்டுக்குப் போக மனம்வராது. 'அங்கேயெல்லாம் போகக்கூடாது' என்று திட்டித் திட்டி என் பாட்டி அலுத்தும் சலித்தும் போய்விட்டார்கள். ஆமாம், இங்கே 'பேய்' இருக்கிறதாம்!

மாலைவேளைகளில் இறை ஆயத்துக்களை ஓதி, என்மீது ஊதுவார்கள். நினைத்துக் கொண்டால் சாம்பிராணிபோடுவார்கள்! எனக்கு வேடிக்கையாக இருக்கும். என்றாலும், சிரிக்காமல் வயதுக்கொண்ட அந்த அன்பின் மத ரீதியான சம்பிரதாயங்களை மறுப்பேதும் கூறாமல், அப்படியே ஏற்றுகொள்வேன்.

சொல்ல விட்டேன், எனக்குக் கிடைத்த இன்னொரு இயற்கைச் செல்வம் என் பாட்டி. நான் படித்து முடித்துவிட்டு சம்பாதிக்காமல் ஊர் சுற்றுகிறேன் என்று என் தந்தை திட்டுவார். தாயோ நான் இப்படி இருக்கும் சூழ்நிலைகளின் ஆற்றாமைப் பொருக்க முடியாமல், ஆதங்கம் கொண்டவர்களாக  புலம்புவார். சிலநேரம் நேரிடையாக திட்டவும் திட்டுவார்கள். ஆனால், என் பாட்டிக்கு அது குறித்தெல்லாம் கவலை இல்லை. பெற்றோர்களின் திட்டை பெருசுப்படுத்தி  நான் சாப்பிட மறுத்தால்தான் கவலை. நாழிகழித்து வீட்டுக்குத் திரும்பினால்தான் கவலை. நான் தலைச்சன் பிள்ளையாக இருப்பதிலும், அந்தத் தோப்புக்கு போய்வருவதிலும் பாட்டிக்கு சொல்லமுடியாத பெருங் கவலை. காத்துக் கருப்பு பேய்களுக்கெல்லாம் தலைச்சன் பிள்ளைகள் என்றால் கொண்டாட்டம் என்பது எனக்கு விளங்குவதில்லை என்கிற கவலைமேல் கவலை.

நம்மோடு வலம்வருகிற, கூடவே உலாத்துகின்ற மனிதர்களுக்கு பயந்துதானே தினமும் அங்கே ஓடுகிறேன். மனிதர்களை விடவா பேய் கொடுமையாக இருந்துவிடப் போகிறது? அப்படி என்று ஒன்று இருந்தால்!

ஒரு முறை விளையாட்டாக என் பாட்டியிடம் சொன்னேன், "பேய் என்னை அடிப்பதாவது? நான் அதை அடிக்காமல் இருந்தால் போதாதா! எனக்கும்கூட பேயைப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை ரொம்பநாளாக இருக்கிறது. அதற்காகதான் நான் தொடர்ந்து அங்கே போகிறேன். அதுதான் இன்னும் எதிர்பட மாட்டேன் என்கிறது!" என்றேனே பார்க்கலாம் என் பாட்டிக்கு ஏகப்பட்டக் கோபம். என்றைக்கும் அவர்களிடம் அப்படியோர் சீற்றத்தைப் பார்த்ததில்லை.

நான் ஆர்வமாக போய்வரும் அந்தத் தோப்பு, இன்றைக்கெனக்கு தனது வசீகரப் பக்கங்களைக் காட்டினாலும், காதில் விழும் அதன் பழைய வரலாறு அச்சப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கிறது. அந்தத் தோப்பு பங்களாவில் வாசம்செய்த ஆதிக்கப் பிரதிநிதி, ஓடியாடி ஆண்டு அனுபவித்த அதே வாலிபப் பருவத்தில், அவன் தற்கொலையும் செய்துக் கொண்டானாம்! தனது வைரமோதிரத்தில் ஜொலித்த வைரக்கல்லை பொடிச்செய்து சாப்பிட்டுவிட்டானாம்! அவன் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை, அப்படி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றப் பேச்சும் எழ. அதையொட்டிய வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் அத் தோப்பில் புதைக்கப்பட்டிருந்த ஏகப்பட்ட பெண்களின் சடலங்களை தோண்டி எடுத்ததாகவும் சொல்கிறார்கள்! பெருத்துக் கிடக்கிற எல்லா மரங்களின் அடியிலும் கூட பெண்களின் சடலம் இன்னும் இருக்கலாம் என்கிற ஹேசியம் இன்றைக்கும் ஜனங்களிடம் நிலவுகிறது. நான் பிறப்பதற்கு முன் நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள் இப்பவும் பலரை இங்கே அச்சப்படுத்திக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

நான் அங்கே போய்வருகிற போது, சகஜமாக மக்கள் யாரும் தென்படுவது இல்லை என்பது நிஜமென்றாலும், அது அத்தனை உண்மையில்லை. சில நேரம் அங்கே சீட்டு விளையாடும், சாராயம் விற்கும், பாலியல் சேட்டைகளுக்காக மாடுமேய்க்கும் பெண் பிள்ளைகளை அங்கே இட்டுவரும் மனிதர்கள் சிலரை சந்திக்க நேர்ந்ததும் உண்டு. இதனையெல்லாம் என் பாட்டி அறிந்திருக்கக் கூடும். என்னிடம் எதனையும் விவரிக்கவிரும்பாமல் அங்கே 'பேய் பிசாசு' யென எனக்கு ஆச்சம் காட்டுகிறார்களோ என்னவோ. ஏனோ எனக்கு 'பேய் பிசாசுகள்' குறித்து பயமே எழுவதில்லை. வயசு கோலாறுதானா?

என் பாட்டியின் கோபத்திற்கும் சீற்றத்திற்கும் வேப்பிலையடிக்க எனக்கா தெரியாது. பொய்யானச் சிணுங்களோடு பிடிப்படாத கோபமும் வெடிக்கும். "இனிமேல் நான் அங்கேயேதான் இரவும் பகலும் தங்கப்போகிறேன்" என்கிற அறிவிப்பு தடாலென என்னிடம் கிளம்பும். என் பாட்டி பாவம். அப்படியே உடைந்துப் போய் "வேண்டாம் பாவா" என்ற கெஞ்சலாய் கெஞ்சுவார். எனக்காக கவலைப்படுவதைத் தவிர, வேறேதும் தெரியாத என் பாட்டியை இனியும் சங்கடப்படுத்தக் கூடாது என்றும், முடிந்தால் சந்தோஷப் படுத்தவேண்டும் என்றும் நினைத்தேன். ஒண்ணு, ஏதாவது ஒரு வேலைத் தேடிக் கொள்ளவேண்டும், இரண்டு, அரணான அந்தத் தோப்புக்குப் போவதை நிறுத்த வேண்டும். இரண்டும் கஷ்டம்தான்.

பத்தாயிரம் பேர்கூடி பட்டத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்! ஒருவன் கூப்பிட்டு வேலைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். வேலைத் தேடி கொள்கிற ஒவ்வொருவனின் திரையையும் விலக்கிப் பார்த்தால்... ஊசிக் கண்ணில் ஒட்டகத்தை சமத்தாய் இழுத்திருப்பான்! எனக்கு அந்தக் கலை தெரியதே.

இப்படியொரு நெருக்கடியான நேரங்களில் மனம் இருக ஆரம்பிக்கும் போதுதான், அந்த தோப்பை நோக்கிய வனவாசத்தை அவ்வப்போது நிகழ்த்துகிறேன். அங்கே நான் மலர்வதும், திரும்பியதும் மனித வாடையில் நான் வீழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.

எனக்கு வேலைக்கிடைக்காதது என்னவோ வாஸ்த்தவம்தான். தினம் தினம் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றுகிறேன் என்பதும் வாஸ்த்தவம்தான். 'சாப்பிடாமல் ஊர் சுற்ற முடியுமா என்ன?' சரி, வீட்டில் முடங்கிக் கிடப்பதென்பதும் நடக்குமா? நான் என்ன வேலைக்குப் போகமாட்டேன் என்றா சொல்கிறேன். எவன் கொடுக்கிறேன் என்கிறான். இதற்காகப் போய் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? நல்ல வாழ்வு வாழ்வேன் என்ற பெரிய நம்பிக்கை என்னுள் வாழ்கின்ற போது இந்தச் சின்னச் சின்ன சமாச்சாரத்திற்கெல்லாம் சங்கடப்படவும்தான் முடியுமா?

ரொம்பவும் நிதானமாகத்தான் இருந்தேன். இப்படியே வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக, என் தந்தையுடன் என் தாயும்... அப்புறம் என் பந்துக்கள் எல்லோருக்குமே எனக்கு வேலை கிடைக்கவில்லை என்பதில் பெரிய கவலையாகி, தாங்கமுடியாத சப்தங்கள் நாலாத் திக்கிலிருந்தும் என்னை தாக்கியபோது, கோபத்தின் உச்சிக்கும் போயிருக்கிறேன். எத்தனையோ பொருட்கள் பறந்து, ஓடி, உருண்டு, விழுந்துடைந்திருக்கிறது.

அன்றைக்கு, என்னையொத்த எல்லோருக்கும் விடிவெள்ளியாகத் தெரிந்த சவூதி அரேபியாவுக்கு நானும் போய் சேர்ந்துவிட்டப் பிறகு, என் வீட்டில், உறவினர்கள் வீட்டில் என்று எல்லோரின் முகத்திலும் ஏகப்பட்ட பிரகாசம்! அவர்களது கடிதவரிகளில் அந்த வெளிச்சம் பிரகாசிக்கவும் செய்தது. என் பாட்டிக்கும் எனது இந்தப் பயணம் மகிழ்ச்சி தந்திருப்பதாக அறிய வந்தபோது, நான் சௌதி வந்ததில், கக்கூஸ் கழுவியதில் எனக்குள் எழுந்த மன உறுத்தல்கள் மறைந்தது போனது.

ஆனால், அந்த என் சமஸ்தானத்தை, அதன் இனிமையான வசீகரங்களை, அங்கு என் மனம் நினைத்தேங்காத நாளேயில்லை! மழைக்காலத்து ஈரமாய் மனதில் அப்படியொரு சொத சொதப்பு! காயாத ஈரம்! காயக்காயத் தூறல்! தூறல் காணக்காண ஈரம்! வசீகரித்தது அந்தப் பச்சை ஈரம்!

ஒவ்வொரு நாளாய், 'எழுநூற்று இருபது நாட்கள்!' இரண்டு வருட காண்ட்ராக்ட் முடிந்த நாளில் அங்கே எனக்கு இடைக்கால விடுதலை கிடைக்க, தாய் மண்ணின் தகதகத்த விடியலை மீண்டும் தர்சித்தேன். என் பாட்டி, பெற்றோர் உற்றோரென எல்லோரையும் நலம் விசாரித்தவனாய், இன்னுமான சம்பரதாய முகமன்களை சம்மந்தப்பட்டவர்களிடம் முடித்துவிட்டு, மறுநாள் காலை என் வீட்டு நீளக் கொல்லை, கன்னி வாய்க்கால், மேடு, வரப்புகளையெல்லாம் தாண்டி, இலந்தம் முற்களின் கீறல்களையும் சகித்துக் கொண்டு நடந்தேன்.

விருட்சங்கள் தளைத்து பசுமையோடு வாழும் என் சமஸ்தானத்து இனிமை காண, அன்றைக்குப் பூராவும் என்னை நான் அங்கே முழுகவிட நடந்தேன். அந்த  நடையை, நடை என்பதைவிட, சின்ன ஓட்டமென்றுத்தான் சொல்ல வேண்டும். முடிவில், கால்கள் ஓர் எல்லையில் நின்றது. சமஸ்தானத்தைக் காணோம்! தேடத் தேட கண்கள் விரிந்து பார்வை அலையாய் அலைந்ததுதான் மிச்சம்.

சூரியனின் கிரணங்கள் புக முடியாத என் சமஸ்தான மண்! இன்று வெளிச்ச ஆக்ரமிப்பில்! மரங்கள் இறுமார்ந்திருந்த இடமெல்லாம் பள்ளம்! புரட்டப்பட்ட மண், புல் பூண்டுகள் அற்று தீய்ந்துக் காய்ந்து காற்றில் எழும்பி திரிந்துக் கொண்டிருந்தது! நிர்வாணமாக்கப்பட்டு கற்பழந்த நிலையில் வெறிச்சோடிய நிலதைப் பார்க்க சகிக்கவில்லை! மனதில் இடம்கொள்ளா கேள்விகள்! எங்கே என் சமஸ்தானம்? அரக்கர்கள் மாதிரி எழுந்து நின்ற மரங்களெல்லாம் ஏன் இப்படி சாய்க்கப்பட்டிருக்கிறது? ஏனாம் இப்படி துண்டாடப்பட்டிருக்கிறது? ஏன்? ஏன்? எங்கே என் உலகம்? அந்த ஆதி உலகம்?  
       
மாய வாசிப்பின் இசை நாண்களிலும் சிக்கா, ஒலி செய்யும் அந்தச் சின்னஞ்சிறு பறவைது கூட்டம் எங்கே? சலசலப்புகளுக்கெல்லாம் எழுந்து வானில் கோலமிட்டமரும் அந்தச் சிட்டுகளின் கூட்டம்தான் எங்கே? அவைகள் கிசுகிசுக்கும் ரீங்காரப் பண்ணெங்கே? மனத்தைக் கட்டி இழுக்கும் காட்டுப் பூக்களின் வாசனையெங்கே? வண்ணத்திலொரு நிறம் மண்டிக்கிடந்த அந்தப் பூக்களும்தான் எங்கே? கோணல் மனம் கொண்ட எந்தவொரு மிருகமும் கூட இப்படியொரு அழிப்புக்கு உடன்படாது! அது,  மனிதர்களுக்குதான் அத்துப்படி! அவன்தான் துணிவான்! இந்த அழிப்பெல்லாம் அவனுக்குதான் சாத்தியம். உயிர்களை இப்படி திருகிப் போட அவனுக்குத்தான் கூசாது! அங்கே துண்டாடிக் கிடக்கும் மரங்களுக்காக என் மனம் மௌன அஞ்சலி கொண்டது.

திரும்ப நினைத்தேன். அந்த மண்ணைவிட்டு அகல மனமில்லாமல் கால்கள் தயக்கம் காட்டியது. சிகரெட்டை பற்ற வைத்தப்படி, ஸ்தலத்தில் ஆங்காங்கே கோடாரி, வெட்டரிவாலோடு திரியும் மனிதர்களை வெறுப்புடன் பார்த்து நின்றேன்.

அழிப்பு ஆயுதத்தோடு ஒருவன் என்னிடம் வந்தான். என்ன? என்பதுபோல் நிமிர்ந்தேன். "விறகா ஸார் வேணும், இழுப்பன் விறகு ஸார். டன் நூறு ரூபாய்தான். நல்லா காஞ்சுப் போச்சு. கபகபன்னு நிண்ணு நிதானமா எரியும்! விலாசம் மட்டும் சொல்லுங்க, வீட்டிலேயே கொண்டு வந்து இறக்கிடுறோம்!" என்றான்.

இயற்கையை இப்படி விறகாக்கி, எரிக்கத்தரும் பாவிகளில் ஒருவனை நேருக்கு நேர் சந்தித்ததிலான சூடோடு, தக தகன்னு நின்றேன்.

"என்ன ஸார் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க, ஓ, நீங்க மனைப் பார்க்க வந்த ஆளா? அதுக்கு இன்னும் வேலையாகல. மூணுமாசமாவதுப் பிடிக்கும்! சினிமா கொட்டகை கிட்டக்க இருக்கிறாருப் பாருங்க சம்பந்த முதலியாருன்னு, அவருதான் இங்கே மனைப் போடுறார். அவரைப் பாருங்க." என்றான். மீண்டும் ஒருமுறை அவனை அடிமுதல் நுனிவரை எரித்துவிட்டு, கொதிநிலையில் திரும்பினேன்.


தாஜ்
   
*

No comments: