Tuesday, October 4, 2016

திகில் நிமிடங்கள் (தொடர்ச்சி)/அப்துல் கபூர்

திகில் நிமிடங்கள் 
சென்ற பதிவின் தொடர்ச்சி ....
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
இரு சக்கர வாகன திருடர்கள் நீட்டிய கத்தி என் வயிற்றை குறி வைத்ததும் யா அல்லாஹ் என்னை காப்பாற்று என்று ஆங்கிலத்தில் கத்தி சப்தமிடுகிறேன் ....
எனது குரல் வளையிலிருந்து பழுத்து விழுந்த சப்தத்தை காற்று இழுத்துச் சென்று சம்பவ இடத்தின் எதிர் புறமுள்ள ரயில்வே குடியிருப்பில் நிலை கொள்ளச் செய்கிறது...
குடியிருப்புகளில் உறங்கத் துவங்கிய கருப்பின தொழிலாளிகள் சிலர் அறைகளுக்கு வெளி வந்து உள் வராந்தாவின் வேலியருகே நின்று என்னை விட்டு விடுங்கள் என்று திருடர்களிடம் சொல்லுகிறார்கள் ...
(தொழிலாளிகளுக்கு வெளியே வர இயலாது)
நாங்கள் இந்த இந்தியனை விடமாட்டோம் என்று தொழிலாளிகள் பக்கம் திரும்பி காட்டமாக திருடர்கள் பதில் சொல்கிறார்கள் ...

இந்த தருணத்தில் திருடர்களின் பிடி தளர்வதும் இறைவனின் அருள் என் மடி மீது விழுவதும் எனது கால்கள் வேகமாய் அடி எடுத்து வைப்பதும் ஒரே நேரத்தில் ஆச்சரியமாய் நிகழ்கிறது ...
நான்கு திசைகளுக்கு செல்லும் சாலையில் பிராயணிகளின் பஸ்கள் வரும் சாலையை நோக்கி ஓடுகிறேன் ...
திருடர்களும் என்னை விடாமல் சில மீட்டர்கள் இடைவெளியில் வேகமாக துரத்துகிறார்கள் ...
1985 ம் ஆண்டிலிருந்து 2011 வரை எனது இரண்டு கால்களும் பதினொரு தடவைகள் பிரண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி படைத்த வரலாறும் உண்டு ....
அந்த கால்களால் வேகமாக நான் ஓடினால் மீண்டும் பிரளும் என்பதை பொருட்படுத்தாது திரளும் சக்தியோடும் புரளும் அச்சத்தோடும் ஓடி ஒரு பக்க சாலையை கடந்து மறு பக்க சாலையில் கடக்கையில் பயணிகளை ஏற்றும் மினி பஸ் ஒன்று எனக்காக வந்தது போல் மெதுவாய் நின்றதும் என் சூழலை புரிந்த கண்ட்ரக்டர் கதவை திறந்ததும் களைத்து வந்த நான் உடம்பை வளைத்து உள்ளே ஏறி அமர்ந்தேன் ....
உள்ளே அமர்ந்திருந்த சுமார் ஏழு பயணிகளிடமும் ஓட்டுனரிடமும் மூச்சு வாங்கிய நிலையில் நடந்ததை விளக்கிய எனது பேச்சு கேட்டு அதிர்ச்சியடைந்து என்னை ஆசுவாசப்படுத்தி நாங்கள் உன்னை பாதுகாப்பாய் அழைத்துச் செல்கிறோம் என்று எனக்கு தைரியம் கொடுத்தனர் ....
திருடர்கள் நான் அமர்ந்திருக்கும் மினி பஸ்ஸின் பின்புறம் ஓங்கி அடித்து உள்ளே ஏறிய இந்தியனை வெளியேற்று இல்லை என்றால் பஸ்ஸை சேதப்படுத்துவோம் என்று கொக்கரிக்கிறார்கள் ...
அந்த சூழல்களிலும் நல்ல மனம் படைத்தவர்கள் என்னை பஸ்ஸிலிருந்து வெளியேற்றவில்லை ...
வெளியே இரண்டு கெட்டவர்கள் நான் வேண்டும் என்கிறார்கள் உள்ளே சில நல்லவர்கள் என்னை விடமாட்டோம் என்கிறார்கள் ...
ஆம் எல்லாம் இறைவனின் நாட்டம் ....
மினி பஸ் 20 நிமிடங்கள் அங்கேயே நின்றதும் திருடர்கள் மெதுவாக நகர்ந்து வேறு பாதைக்கு சென்ற பின்னர் பஸ் நகர்ந்து பக்கத்து நிறுத்தத்திற்கு வந்து டிரைவருக்கு பழக்கப்பட்ட இன்னொரு இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றி அவர்களது பொறுப்பில் எங்கள் தொழிலக இல்லத்தில் விட்டனர் ....
நான் தப்பித்து வீடு சேர்ந்ததை என்னால் நம்பவே இயலவில்லை அன்றிரவு நான் தூங்காமல் விழித்திருந்தேன் ...
அடுத்த நாள் எனது நண்பர்களிடம் எனக்கு நேர்ந்த நிகழ்வை சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர் ...
அன்றிலிருந்து (30.09.2011) இன்று வரை (30.09. 2016) ஐந்தாண்டுகளில் நான் கலந்த சுமார் நூறை நெருங்கும் உகாசேவா கூட்டங்கள் முடிந்த இரவு நேரங்களில் என் மீது நேசம் கொண்ட எனது நட்பு உறுப்பினர்கள் தங்களது வாகனங்களில் என்னை அழைத்து வந்து எனது இல்லத்தில் இறக்கி விட்டு பின்னர் அவர்கள் இல்லத்திற்கு விரைவார்கள் ...
எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களுக்கு உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் ...
புகழ் அனைத்தும் இறைவனுக்கே ...
முற்றும்
அன்புடன்
அப்துல் கபூர்

Abdul Gafoor

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails