Wednesday, October 12, 2016

நான் பிரமித்துப் போனேன்.

அப்துல் கையூம்
தொப்பி அணிந்து இஸ்லாமிய அடையாளத்துடன் இந்த போட்டோவில் இருக்கும் என்னுடன் , நெற்றியில் விபூதியும் சந்தனப்பொட்டு சகிதமாக இந்து மத அடையாளத்துடன் காணப்படும் இவரை இதற்கு முன்பு எனக்கு பழக்கமில்லை. இவர் யாரென்றே எனக்குத் தெரியாது.
அண்மையில் நான் தாயகம் சென்றபோது ஒரு திருமண நிகழ்ச்சியில், இவரைத் தேடிக் கண்டு பிடித்து, இந்த உடன்பிறவா சகோதரருடன் எடுத்துக்கொண்ட எனது முதல் செல்ஃபி இது.
இவரோடு எடுத்துக்கொண்ட இப்புகைப்படத்தை என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக நான் நினைக்கிறேன். இவர் பெயர் ராஜா. அதிக விபரம் இவரைப் பற்றித் தெரியாது....
அதற்கு முன் இப்பதிவுக்கான ஓரு காரணம்..
.
உலகில் மிகவும் மோசமான , கொடூரமான நோய் "பார்க்கின்ஸன்" என்பது என் எண்ணம். எதிரிக்கு கூட இந்த நோய் வரக்கூடாது.
ஏனென்றால் என் தாய்க்கு இந்த நோய் தாக்கி அவர்படும் அவஸ்தையை நேரில் கண்டவர்கள் நாங்கள். நன்றாக ஓடி ஆடித் திரிந்த எங்கள் தாயார் எங்கள் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து ஒரு குழந்தையைப் போல் ஆனதை நினைக்கும்போது எங்கள் நெஞ்சே வெடித்துவிடும்.
குழந்தையாக இருந்த என்னையும் என் உடன்பிறந்தவர்களையும் எந்தக் கரங்களால் அரவணைத்து எங்களை அவர்களது பொன்னான கரங்களால் ஊட்டி மகிழ்ந்தார்களோ , அவர்களுடைய இறுதி நாட்களில் அவர்களை நாங்கள் குழந்தையாக பாவித்து அத்தனை பணிவிடைகளையும் செய்தோம்.
"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது" என்றார்கள் நபிகள். முதுமையில் தாய்க்கு பணிவிடை செய்வதை விட உலகில் பிள்ளைகளுக்கு வேறு பாக்கியம் எதுவும் இருக்க முடியாது. இது முற்றிலும் உண்மை
ஆனால் எங்கள் கண்முன்னே எங்கள் தாயார் நரம்புகள் இறுக்கமாகி, கையையும் காலையும் அசைக்கவும் முடியாமல், அப்படியே நாங்கள் அவரை உட்காரவோ நடக்க வைக்கவோ முயலுகையில் வேதனையால் அவர்கள் துடிப்பதையும் எங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
பொங்கிவரும் அழுகையை நாங்கள் அடக்கிக் கொள்வோம். பிள்ளைகள் அழுவதை எந்த தாயாலும் பொறுத்துக் கொள்ள முடியாது . அது அவர்களை மேலும் மனம் கலங்கச் செய்யும் என்பது எங்களுக்குத் தெரியும். அச்சமயம் நாங்கள் பட்ட மனவேதனை எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
நான் கடைசியாக ஆண்டு விடுமுறையில் ஊர் சென்றபோது எனக்கு தெரிந்து விட்டது ; 'இதுதான் அவர்களது இறுதி கட்டம்' என்று. என்னால் முடிந்த அளவு அவர்கள் அருகிலேயே நாட்களைக் கழித்தேன். உணவு முதற்கொண்டு நானோ அல்லது என் உடன்பிறந்தவர்களோதான் அவர்களுக்கு ஊட்டி விட வேண்டும்.
அவர்கள் பிறந்த ஊரான திருச்சியில் வைத்துதான் நாங்கள் சிகிச்சை செய்தோம். என் தாயாரின் உடன்பிறந்தவர்களும், அவர்களுடைய அனைத்து சொந்தங்களும் ஒவ்வொருவராக வந்து பார்த்தார்கள். திடகாத்திர பெண்மணியாக இருந்த அவர்கள் எலும்பும் தோலுமாக ஆனதைக் கண்டு அவர்கள் கதறிக் கதறி அழுதார்கள். ரத்த பந்தமல்லவா..?
அப்பொழுது, நிலைகுத்திய பார்வையில், ஒரு குழந்தையின் மனநிலையில் , என் தாயார் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் என் கண்முன் காணொளியாய் நிற்கிறது. ஏதோ சொல்ல முயல்வார்கள். ஆனால் சொல்ல இயலாது.
என் தாயார் தன் பால்ய வயதில் தன் உடன்பிறப்புக்களுடன் விளையாடி மகிழ்ந்ததை அல்லது பிணங்கி சண்டையிட்டதை நினைத்துப் பார்த்து மனம் நெகிழ்கிறார்களோ...? ஊஹும்.. ஊகிக்க முடியவில்லை .
ஆனால் தாரைத் தாரையாக அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழியும். அதற்குரிய காரணம் அவர்களுக்கும், படைத்தவனுக்கும்தான் தெரியும்.
உலக வாழ்க்கை என்பது ஒரு சிறிய கால பயணம் ,அவ்வளவுதான்; என்ற உண்மையை அவர்கள் படும் வேதனை எங்களுக்கு உணர்த்தியது. "காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா" என்று ஏதோ ஒரு சித்தர் பாடிய பாடல்தான் அப்போது என் நினைவில் நிழலாடியது.
நான் விடுமுறை முடிந்து ஊரைவிட்டு புறப்படுகையில் அவர்களுடமிருந்து விடை பெற்றேன். அவர்களாலும் ஊகிக்க முடிந்தது அதுதான் என்னுடனான இறுதி சந்திப்பாக இருக்க வேண்டுமென்று.
அவர்களின் கண்களில் நீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது. நான் மட்டும் சற்றும் அழவே இல்லை. எனக்குத் தெரியும் நான் அவர்கள் முன் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று. சிரித்துக் கொண்டே "கவலைப் படாதீர்கள். உங்களுக்கு ஒன்றுமே ஆகாது" என்று பொய்யான ஆறுதல் கூறினேன்.
பாத்ரூம் போகிற சாக்கில் அங்கு சென்று வாய்விட்டு கதறி அழுதுவிட்டு , முகத்தை கழுவி விட்டு 'நல்ல பிள்ளையாக' திரும்பி வந்து , விடை பெற்று, விமான நிலையம் புறப்பட்டேன்.
என்னதான் பிறந்த வீட்டுப் பாசம் இருந்தாலும் புகுந்த வீடுதான் - தான் தன் கணவரோடு வாழ்ந்த இல்லம்தான் - தனக்கு நிரந்தரம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலும். கண்களின் செய்கையாலும், நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பார்வையாலேயே பதில் சொல்லி விட்டார்கள் "நாகூர் செல்ல வேண்டும்" என்று.
நாகூர் சென்ற பிறகு அவர்கள் உடல்நிலை மேலும் மோசம் ஆனது. கடைசி ஒரு மாதம் அவர்களுக்கு மருத்துவ ரீதியிலும், பணிவிடை செய்யவும் ஒருவர் தேவைப்பட்டது . என்னுடைய மைத்துனருக்கு நன்றாக அறிமுகமானவர் நான் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த இந்த மகத்தான நபர் ராஜா.
மிகுந்த தெய்வ பக்தி உடையவர், சமூக சேவகர். தான் செய்யும் சேவைக்கு ஒரு நயா பைசாவும் எதிர்பார்க்காதவர். இவர்தான் என் தாயின் இறுதி நாட்களில் ஒரு மகன் செய்யக்கூடிய அத்தனை பணிவிடைகளையும் செய்தார். அவர்கள் இறந்தபோது எங்கள் எல்லோரையும் விட "அம்மா" என்று கதறிக்கதறி அழுததும் இவர்தான்.
என் தாயாரின் இறுதி யாத்திரைக்காக நான் வந்தபோது என்னைக் கட்டியணைத்து விம்மி விம்மி ஒரு குழந்தையைப் போல் அழுததும் இவர்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் யாரென்று நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே அங்கிருந்து நழுவியும் விட்டார்.
இன்று என் #தாயார் மறைந்த தினம். சரியாக ஓராண்டு ஓடி விட்டது.
என் தாயாரின் நினைவுகள் என் மனதில் அலைமோதும் அதே வேளையிலும் ராஜா என்கிற இந்த இந்து நண்பர் என் தாயார் மீது கொண்டிருந்த ஓர் இனம் புரியாத பாசம் என்னை நெகிழச் செய்கிறது.
இவர் இன்னும் எத்தனையோ பேர்களுக்கு எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் இதுபோன்ற பணிவிடைகள் செய்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார் என்பதை கேள்வியுற்றபோது நான் பிரமித்துப் போனேன்.
அப்துல் கையூம்

No comments: