Sunday, September 20, 2015

தூக்க மாத்திரை - Rafeeq Friend


அன்று இரவு உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவேண்டிய கட்டாயமேற்பட்டது.

இரவு உணவுமுடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வேளையில் அவரது ஆறு வயது மகன்வந்து அவரை அழைத்துக் கொண்டிருந்தான்.

'தம்பிகூப்பிடுகிறான் என்னவென்றுகேளுங்களேன்' என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில், " அவனுக்கு தூக்கம் வருவதற்கு மாத்திரைகேட்கிறான். இருங்கள் எடுத்துக்கொடுத்துவிட்டு வருகிறேன் " என்று சிரித்துக்கொண்டே போனார். என்னது ஆறு வயது பையன் தூங்குவதற்கு மாத்திரையா? என்று நீங்கள் பதறுவது போலத்தான்நானும் அதிர்ந்தேன்.

திரும்பிவந்தவர் என் அதிர்ச்சியை அறிந்தவராக, "ஒன்னும் இல்லை! கதைகள் சொல்லும் வீடியோஅவனது Tablet இல்இருக்கிறது. அவன் தூங்கும் முன் அந்தக் கதைகளைக் கேட்டுத் தூங்கிவிடுவான்."என்று அவர் போட்ட புதிரின் முடிச்சினை அவிழ்த்தார்.

ஓ..அப்படியா...இது நான்பயந்த தூக்க மாத்திரைகளைவிடக் கொடியதாயிற்றே? என்றதும்உண்மையிலேயே புரியாமல் விழித்தார்.

சரி, கதை பற்றி கதைப்போம் என்று எங்கள்பேச்சு திரும்பியது....

குழந்தைகள்இரவில் தூங்குவதற்கு முன் கதை கேட்பது / சொல்வது என்பது இயல்பான ஓன்று தான். காரணம், இயற்கையிலேயே அவர்களிடம் ஏற்பட்டிருக்கும்தேடலுக்கான ஈர்ப்பு.கற்றலுக்கான எதிர்பார்ப்பு. கற்பனைக்கு எட்டாத வியப்பிற்குரிய புது நிகழ்வுகளைக்கேட்கும் ரசிப்பு. இப்படி ஏராளம்.

குழந்தைகள்கதையைக் கேட்டுத் தூங்கிவிடப் போகிறார்கள். இதில் எங்கிருந்து கற்றல் நடக்கிறது? இதுதானே சந்தேகம்.

எந்தக்குழந்தைகளிடத்தும், 'ஒரு ஊரில்ஒரு ...' என்று ஒரு கதையை ஆரம்பித்துப் பாருங்கள். உடனே கவனத்தை நம் பக்கம்குவிப்பார்கள்.
இந்தஆர்வத்திற்குக் காரணம் நமது மூளையில் உள்ள தகவல் சேகரிக்கும் பகுதிகள் புதியதகவல்களைச் சேகரிப்பதற்காகத் தூண்டப்படுவதே ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் இதுபொருந்ந்தும். மூளையின்இந்தப் பகுதியை 'ப்ரோகா' மற்றும் 'வெர்னிக்' பகுதிகள் என்று அறிவியலறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கேட்கப்படும் மொழியின் பொருளறிந்து செயலாக்கத்தைத்தூண்டும் பகுதிகளாகுமாம்.

குழந்தைகள்கதை கேட்கத் துவங்கும் போது, மொழி செயலாக்கத் தூண்டல் மட்டுமன்றி பெருமூளையின் இதர பகுதிகளும்தூண்டப்படுகின்றன. உதாரணத்திற்கு, 'ஆயிஷா ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்சாப்பிட்டாள்' என்றுசொன்னால், சொற்றொடரின்மொழிமாற்றம் மட்டுமன்றி அதன் நிறம், சுவை, மணம் என அத்தனையும் அந்தக் குழந்தையால்உணரப்படுகிறது. அதுபோல, 'குரங்கு மாமரத்திலிருந்து தென்னைமரத்திற்குத் தாவியது.' என்றுசொல்லும்போது மிகக் குறைந்த அவகாசத்தில் அந்தக் காட்சியை மனத்திரையில் ஓட்டிப்பார்க்கும் கற்பனைத் திறனைஅந்தக் குழந்தைப் பெறுகிறது என்பது போன்ற அநேக நன்மைகள் இருக்கிறதாம்.

கதைகளில்சொல்லப்படும் வார்த்தைகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் தன் மனத்திரையில்காட்சிப்படுத்துதல், சொல்லப்படும்பொருள்களை உருவகப்படுத்துதல், அடுத்த நிகழ்வு என்னவாக இருக்கும் என்பதை உடனடியாக யோசிக்கும் கற்பனை போன்ற திறன்களைக் குழந்தைகள் பெறுகிறார்கள். இதன் மூலமாக, வெகு சீக்கிரமே படங்கள் அல்லாத புத்தகத்தைப் படிக்கும் போது எளிதில் புரிந்து செல்லக்கூடிய திறன் அவர்களுக்குள் வளர்கிறது. மேலும் புதிய பல சொற்களை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.அதிகமாக சொற்களை அறிவதனால் சரளமாகப் பேசக்கூடியவர்களாய் குழந்தைகள் மாறுவார்கள்.இவையனைத்திற்கும் மேலாக பெற்றோர் அரவணைப்பில் அவர்களின் தன்னம்பிக்கையும் வளர்கிறது. இதனால் சமூக ஒழுக்கம் நல்ல முறையில்கட்டமைக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வீடியோ படங்கள் மூலம் கொடுக்கப்படும்கதைகளினால் மேற்சொன்ன அனைத்து வகையான நன்மைகளையும் நாமே நம் குழந்தைகளிடமிருந்து பறிக்கிறோம் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை. ஆம், தொடர்புநிலை என்று வரும்போதுகுழந்தைகள் பேசுபவரின் முகபாவங்களையே முதலில் கவனிப்பார்கள். கண்ணசைவுகளைக்கவனிப்பார்கள். ஆனால் வீடியோ அனிமேஷன் படங்களில் இது சாத்தியமில்லை. பிற்காலங்களில் அவர்கள் பேசும்போது அதே தொனியில்இயந்திரத்தனமாய் பேச்சு இருக்கும் வாசிப்பு மிகவும் சிரமமானதாக உணர்வார்கள். கதை சொல்லும்போது கிடைக்கும்கற்பனைத் திறனுக்குத் தடையேற்படுமாம். ஏனென்றால் வீடியோ / அனிமேஷன் ஒருவழித் தொடர்பு முறை.குழந்தைகள் இயந்திரத்திடம் கேள்வி கேட்க மாட்டார்கள். எனவே, அடுத்த காட்சிக்காக காத்திருப்பார்கள்.அதையே பின்தொடர்வார்கள். இதனால் சிந்திக்கும் திறனுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்படுகிறதாம்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேகமாகப் போய் தூங்கிக்கொண்டிருந்த மகனின் கையில் பிடித்திருந்த 'தூக்க மாத்திரை'யை, அதாங்க Tablet ஐ மெதுவாக உருவினார். "இனிமேல் என் மகனுக்குநானே கதை சொல்வேன்" என்று உறுதியாய் சொன்னார்.

அவர் உறுதியில் உண்மையிருந்தது.

(இம்மாத 'புதுவரவு' மாத இதழில் வெளிவந்துள்ளது)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails