Monday, September 28, 2015

முகங்கள் சொல்லும் பாடம்


அபூ பாஸிம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ - இது பழமொழி. அகம், முகம் இரண்டுமே எழுத்திலும், எண்ணத்திலும் ஒன்றிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. அகத்தின் எண்ணவோட்டங்களை முகம் மொழிபெயர்க்கிறது. எனவே தான் முகம் பார்த்து மனிதனை படம்பிடித்துக் காட்டுகிற 'FACE READING' என்கிற கலை சாத்தியமாகிறது.

உள்ளத்தை முகம் படம்பிடித்துக் காட்டுகிறபோது அதற்கு முகத்தின் ஒவ்வொரு உருப்பும் உதவுகிறது. நேசர்களைக்கண்டு உள்ளம் மகிழும்போது முகத்திலுள்ள கண்கள் மலர்கிறது. சமயத்தில் கண்களே பேசுகிறது. பேசும் விழிகள் கேள்வி பட்டதில்லையா?

வெறுப்பின் உச்சத்தில் நாசி விடைக்கிறது. மகிழ்ச்சியைக் கோடிட்டுக் காட்டும் போதும் இளக்காரமாக நினைக்கும் போதும் இதழ்கள் மிக இலேசாக விரிகிறது. இளநகை, குறுநகை என்றெல்லாம் சொல்வதில்லையா?

நாணத்தின்போது கன்னம் சிவக்கிறது. ஆப்பிள் கன்னம் என வர்ணிப்பதில்லையா? கோபப்படும்போது நரம்புகள் புடைத்து தசைகள் முடித்து முகமே கொடூரமாகி விடுகிறது. மிருகம் மாதிரி கோபத்தில் சிவந்துவிட்டான் எனச் சொல்வதில்லையா?

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது, அகத்தின் உணர்வுகளைத்தானே? ஆம்! அகத்தை அங்குலம் விடாமல் அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தன்னை வெளிக்காட்டும் மொழிபெயர்ப்புக் கருவியாகத்தான் முகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முகங்களின் முகவரியை இறைவன் தெளிவாக எடுத்தியம்பியுள்ளான்.

‘அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்"" (என்று கூறப்படும்)’. (அல்குர்ஆன் 3:106)

‘எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்’. (அல்குர்ஆன் 3:107)

கருத்த முகம் வேதனையைச் சுவைக்கும் என்றும் வெள்ளை முகம் சுகத்தை சுவைக்கும் எனவும் இவ்வசனம் சொல்கிறது. உள்ளம் கறைபடிந்து அதனால் செயல்கள் மோசமானதால் அது முகத்தில் கருமையாய் வெளிப்படுகிறது. உள்ளம் சுத்தமாகி நற்செயல்கள் உருவானால் அது முகத்தில் வெண்மையாய், பிரகாசமாய் மின்னுகிறது.

[ எச்சரிக்கை: இவ்வுலகில் வாழுகின்ற காலத்தில் பாவங்களை செய்து பாவியான மனிதன் மறுமையில் எழுப்பப்படும்போது கருத்த முகமுடையவனாகவும், நன்மைகள் புரிந்து சுவனத்திற்குத் தகுதியானவர்களாக ஆனவர்களின் முகம் வெண்மையானதாக ஜொலிக்கும் என்பதைத்தான் இவ்வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றனவே தவிர இவ்வுலகில் வாழும் கருப்பு நிறமுடையவர்களைப் பற்றியோ அல்லது வெண்மை நிறமுடையவர்களைப் பற்றியோ அல்ல.]

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘உங்களின் அணிகளை சரியாக்குங்கள். இல்லையெனில் உங்கள் உள்ளங்களில் இறைவன் வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுவான்’. (நூல்: புகாரி, முஸ்லிம்).

உள்ளங்கள் என்பதற்கு முகங்கள் எனும் அரபி வார்த்தைதான் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. முகம் என்ற சொல் இங்கே உள்ளத்தைக் குறிக்கிறது. இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகின்றவர்கள் ‘விரோதம், கோபம், கருத்து வேறுபாடு இவைகளை இறைவன் ஏற்படுத்துவான் என்பதனைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கு விளக்குகிறார்கள் என்கின்றனர்.

முகம் உள்ளத்தோடு சம்பந்தமானது என்பதற்கு இது சான்றாக அமைகிறது. எனவே முகத்தை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகின்றவர்கள் தங்கள் உள்ளங்களை ஒழுங்குபடுத்தினாலே போதும். விரோதம், கபடம், வஞ்சகம், சூது போன்ற குணங்களை உள்ளங்களில் இருந்து துடைத்தெறிந்து விட்டால் முகம் தானே பிரகாசிக்கும்.

‘உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது நன்மையில் உள்ளது’. நூல்: அஹ்மது, திரிமிதீ)

மலர்ந்த முகத்துடன் சந்தித்தல் என்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு பல ஆழமான பொருளை உள்ளடக்கியது. வேறொருமுறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிமுக்கு இலக்கணம் சொல்கிறபோது ‘தனது நாவினாலும், கரத்தாலும் பிறருக்கு நிம்மதி அளிப்பவன்’ என்று சொன்னார்கள்.

நாவையும், கரத்தையும் ஒருவன் பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் வைத்துக்கொண்டு நின்றால் எதிரில் இருப்பவன் பலவிதமான கற்பனைகளைச் செய்வான். இவனுக்கு நம்மைப் பிடிக்கவில்லையா? அல்லது விரோதத்தோடு நோக்குகிறானா? என்றெல்லாம் யோசிக்கத் தோன்றும். மலர்ந்த முகத்தோடு சந்தித்து விட்டால் இந்த வேண்டாத கற்பனைகள் தேவையில்லாமல் போவதோடு அவன் மீது மகிழ்ச்சியும், அன்பும், நட்பும் பெருக வாய்ப்பிருக்கிறது. ஒரு சிக்கலில்லாத சூழல் உருவாகிவிடுகிறது. இவ்வளவுக்கும் காரணம் மலர்ந்த முகம் தான்.

எனவே, முகம் மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, நம் முகங்களை இறைவன் சொல்வது போலவும் இறைநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்புவது போலவும் வைத்துக் கொண்டால் நமது வாழ்க்கை சுகமாக, வளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இறைவன் நம் அனைவரின் முகங்களையும் இம்மையிலும், மறுமையிலும் ஒளிரச்செய்வானாக.

நன்றி www.nidur.info

No comments: