Tuesday, September 8, 2015

புத்தரும் மொழியின் போதாமையும்...!! -நிஷா மன்சூர்



புத்தர் உரையாற்றிக் கொண்டிருந்தார்......
மிகுந்த அதிருப்தி கொண்ட ஒருவன் முனகிக்கொண்டே உட்கார்ந்திருந்தான்..
புத்தரின் போதனைகள் அவனை மிகுந்த பதட்டம் கொள்ள வைத்தன,
இறுதியாக,அதிருப்தியுடன் புத்தரை நோக்கி முன்னேறிய அவன் கடுமையாக வைதுகொண்டே காரி உமிழ்ந்தான்...

தலைமை சீடன் ஆனந்தன் உள்ளிட்ட சீடர்கள் கோபம்கொண்டு
அவனைத் தாக்கப் பாய்ந்தார்கள்,
அவர்களைத் தடுத்து நிறுத்திய புத்தர்,தன் மீது காரிஉமிழ்ந்த அந்த அதிருப்தியாளனைப் பார்த்துக் கேட்டார்...
"நீ இன்னும் எதாவது சொல்லணுமா...??"

சீடர்கள் கேட்டனர்,
"அவன் உங்களை நோக்கி காரி உமிழ்ந்து அவமானப்படுத்தியிருக்கிறான்.நீங்களோ அவனைப் பார்த்து இன்னும் ஏதும் சொல்லணுமான்னு கேக்கறீங்களே...."
புத்தர் பதில் அளித்தார்,
"அவன் ஏதோ சொல்ல முயற்சிக்கிறான்,மொழியின் போதாமை.
சொல்ல நினைத்ததை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை..ஆகவே இப்படிச் செய்து மொழியின் இயலாமையைச் சரிக்கட்ட முயற்சிக்கிறான்...விட்டு விடுங்கள் அவனை"
என்றார்.

அடுத்தநாள்....
சரயு நதிக்கரையில் குளித்து முடித்து வெளியே வந்த புத்தரை அடைந்த அந்த அதிருப்தியாளன்,
யாரும் எதிர்பாராத வகையில் தடாலென புத்தரின் காலைப் பிடித்துக்கொண்டு கதறினான்,தன்னை மன்னித்துவிடுமாறு புலம்பினான்....
புத்தர் அவனை எழுப்பி அணைத்துக் கூறினார்,
"மொழியின் போதாமை....."
இவன் என்னென்னவோ சொல்ல நினைக்கிறான்,ஆனால் சொல்லமுடியாமல் தவிக்கிறான்,அதனால்தான் தன் உடல்மொழியால் மொழியின்போதாமையைச் சரிக்கட்ட முயற்சிக்கிறான்...

மேலும் புத்தர் கூறினார்,
உன் நேற்றைய செயலுக்காக மன்னிப்புக் கேட்கிறாய்...
யார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது...???
நேற்றிருந்த நீ உணர்ச்சிவசப்பட்ட, மிகுந்த பதட்டமடைந்திருந்த
கோபமும் குரோதமும் நிறைந்த மனிதன்..
இன்றிருக்கும் நீயோ நெகிழ்ந்த இதயத்துடனும் நேசமும் அன்பும் நிறைந்திருக்கும் மனிதன்.
நேற்றைக்கு அவன் செய்த குற்றத்திற்கு நீ எப்படி மன்னிப்புக் கேட்க முடியும்...??
மேலும் நேற்றிருந்த நானும் இன்று இல்லை....
நேற்றிருந்த உணர்வுகளும் இன்று எனக்கு இல்லை
எனில் நெற்று யாரோ யாரையோ என்னவோ செய்ததற்கு
இன்று நீயும் நானும் எதற்கு பொறுப்பாக முடியும்...???
இந்த நதிகூட நேற்றைய நதி அல்ல..
இந்த காற்றும் வானமும் சூழலும் எதுவும் நேற்றையவை அல்ல..

என்று அணைத்துத் தேற்றி அனுப்பினார்..
பாடம் கற்றுக் கொள்பவன் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்


-நிஷா மன்சூர்

No comments: