Saturday, September 26, 2015

‎காடிழந்த‬ யானைகளின் துயரம் - ‪‎நிஷாமன்சூர்‬



எனது "நிழலில் படரும் இருள்" கவிதை நூலில் வெளியான "காடிழந்த யானைகளின் துயரம்" கவிதை தமிழின் சிறந்த கவிதைகளில் ஒன்றாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அக்டோபர் 18-ம் தேதி நுலாக வெளியிடப்படுவதாக நண்பர் அகன் தெரிவித்தார்.
முழு விபரங்கள் தெரிந்தபிறகு மீண்டும் பதிவேன்..!

‎காடிழந்த‬ யானைகளின் துயரம் -
‪‎நிஷாமன்சூர்‬

மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள்

விரும்பி வருவதில்லை அவை
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால்

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை

அவை மிரண்டு போகின்றன
தம் மேகங்கள் தொலைந்தது குறித்து
அவை திகைத்துத் தேடுகின்றன
தாம் பறிகொடுத்த சுகவாழ்வை

நம் சொத்துக்களைச் சீரழிக்கும்
எவ்வித திட்டமும் இல்லை
அவைகளிடம்

நாம் பறித்துக்கொண்டோம்
அவற்றின் நீரை
அவற்றின் உணவை
அவற்றின் வாழ்வாதாரத்தை

அவற்றின் பிளிறல்களில் தென்படும்
உணர்வுகளை அறிந்த கானகநேசன்
மனநிலை பிறழ்ந்தவன் போல
கூச்சலிட்டு ஓடுகிறான்

கலக்கம் மிகுந்து போனதை
கலவி மறந்து போனதை
கானகம் அழிந்து போனதை
காற்று கசந்து போனதை
சோகத்துடன் சொல்கின்றன அவை

அந்த சிறிய கண்களில் கசியும் கண்ணீர்
உலுக்கி எடுக்கிறது நம்
அயோக்கியத்தனத்தின் மனசாட்சியை

நம் பேராசையில் விரியும்
மாடி வீடுளில் நசுங்கிச் சிதைகின்றன
அவற்றின் எளிய இருப்பிட நியாயங்கள்

உங்கள் வீட்டை நசுக்கிச் சென்ற யானை
ரயில் தண்டவாளத்தில் நசுங்கிச்செத்த
குட்டி யானையின் தாயாக இருக்கலாம்

உங்கள் பயிர்களை அழித்து ஒழித்த யானை
நீங்கள் மின்வேலியில் சாகடித்த
யானையின் தந்தையாக இருக்கலாம்

உங்கள் வாழைகளை சேதமாக்கியது
நீங்கள் வரவேற்பறையில் அழகுபார்க்கும்
தந்தத்தை அளித்த யானையின் உறவாயிருக்கலாம்

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை

அடுத்த முறை யானைகள் நகரத்திற்குள் புகுந்த
செய்தி படிக்க நேர்கையில்
உணர முயற்சியுங்கள்
கலவி நிராகரிக்கப்பட்ட
யானைகளின் துயரத்தை

கானகநேசன் இப்போது
உடைகளைக் களைந்துவிட்டு
காட்டுக்குள் உலவிக்கொண்டிருப்பதாய்த் தகவல்.



Nisha Mansur

No comments: