Friday, September 4, 2015

பேசும் கரங்கள் - Rafeeq Friend






இந்தப் படங்களிலொன்று மட்டும் நட்பில் இருக்கும் பேராசிரியை ஒருவரால் 'காலை வணக்கம்' பதிவில் பகிரப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் அறிவதற்காக இணையத்தில் தேடியபோது மெய்சிலிர்த்தது.

அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?
அப்படி ஏன் அந்தக் கரங்களைப் பார்க்கிறார்கள்?
அந்தக் கரங்கள் அவர்களிடம் ஏதும் பேசுகிறதா?

கேளுங்கள்....

2012ல் ஆஃப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்தார் தளபதி அப்துல் ரஹீம். அப்போது, குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்துவிட்டார். உடனடியாக அமெரிக்க மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி மற்றும் சிச்கிசை அளித்தது. இருப்பினும் தனக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று பல நாட்டு மருத்துவமனைகளை அணுகியும் பயனில்லை.

இந்நிலையில் இந்தியா(கேரளா)வில் உள்ள பிரபல மருத்துவமனையில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிகிறார். ஆறேழு மாதங்களுக்கு முன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பொருத்தமான கைகளுக்குக் காத்திருக்கும் வேளையில், விபத்தில் சிக்கி சிகிச்சையில் பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஜோஸப் என்பவரின் கைகளை பொருத்த ஆலோசிக்கப்படுகிறது. ஜோஸப் குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆபரேஷனுக்கு ஆயத்தமாகிறது மருத்துவக்குழு.

பேராசிரியரும் உறுப்பு மாற்று சிகிச்சையின் நிபுணருமான டாக்டர். சுப்ரமணிய ஐயர், இருபது மருத்துவர்கள் மற்றும் எட்டு மயக்கமருந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவக்குழுவினருடன் செயல்முறைகளைத் தொடங்குகிறார். ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது. தற்போது குணமடைந்து, தமது அன்றாடப் பணிகளை தமது(!) கைகளின் மூலமே செய்துவரும் அப்துல் ரஹீமை, மேலும் சில மாதங்கள் தங்கியிருந்து பிசியோதெரபி பயிற்சி எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார் மருத்துவர்.

தமக்கு கைகளை வழங்கிய ஜோஸப் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போது எடுத்த படங்கள் தான் இவை.
ஜோஸப் அவர்களின் மனைவியும் மகளும் அந்தக் கைகளை கண்ணீரோடும் அன்போடும் பார்க்கும் பார்வையை விவரிக்க உலகில் மொழியேதும் உண்டோ?

கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு ஹிந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
மதங்கள் பிடிங்கி எறிந்து மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.
மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,
மண்ணில் நேயம் தழைக்கட்டும்!



Rafeeq Friend

No comments: