Thursday, September 17, 2015

முஸ்லிம் மாணவன் தயாரித்த வாட்சை வெடிகுண்டு என தவறாகக் கருதி கைது: ஒபாமா, ஹிலாரி கண்டனம்

 சொந்தமாக கண்டுபிடித்த கெடிகாரத்தை வெடிகுண்டு என்று தவறாக பள்ளி ஆசிரியர் நினைக்க கைது செய்யப்பட்ட முஸ்லிம் சிறுவன் செய்தியாளர்கள் சந்திப்பில்...| ஏ.எஃப்.பி.


வீட்டில் செய்யப்பட்ட வாட்ச் ஒன்றை வெடிகுண்டு என்று தவறாக நினைத்து 14 வயது முஸ்லிம் மாணவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அஹமட் மொகமட் என்ற இந்த 14 வயது மாணவன் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவர். இவர் தானே வீட்டில் தயாரித்த கெடிகாரம் ஒன்றை பள்ளியில் சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் காண்பிக்க எடுத்து வந்தார். இவர் டெக்சாஸில் உள்ள இர்விங்கில் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

இதனையடுத்த சில மணிநேரங்களில் இந்த மாணவர் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது ஆசிரியர் மாணவனின் திறமையை கண்டுக் கொள்ளாமல் கடும் அச்சத்துடன் அது வெடிகுண்டுதான் என்று முடிவு கட்டியதால் வந்த வினை இது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் ஆகியோர் அந்த மாணவனுக்கு தங்களது தீவிர ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒபாமா தனது ட்வீட்டில், “அமைதி அஹ்மட், வெள்ளை மாளிகைக்கு வாட்சை கொண்டு வர்ர விருப்பமா? மேலும் மாணவர்கள் அறிவியிலில் ஆர்வம் செலுத்த இதனை ஒரு சந்தர்பமாக பயன்படுத்திக் கொள்வோம். இதுதான் அமெரிக்காவை மிகப்பெரிய நாடாக்கியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலர் ஜோஷ் எர்னஸ்ட் கூறும்போது, “அகமதுவின் ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொண்டது வெட்கக் கேடானது. ஆனால், இந்த ஒரு சம்பவம் போதும், நாம் நமது மனசாட்சியை தட்டி எழுப்பிக்கொள்ள, நமது பாரபட்சங்கள் எந்த வகையில் வெளிப்பட்டாலும் அதனை கேள்விக்குட்படுத்திக்கொள்ள இந்த சம்பவம் ஒரு பாடம்.

இன்னொரு சமுதாயத்தினரை பற்றிய நாசம் விளைவிக்கும் நிலைத்த எண்ணம், படிமம் எப்படி நல்ல இதயம் படைத்த மனிதர்கள் நல்ல பணியாற்றுவதை தடுக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்” என்றார்.

இந்தச் சிறுவனின் திறமையை மதித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அகமதுவை அடுத்த மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறும் ‘வானியல் இரவு’ நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிசயச் சிறுவன் அகமதுவுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா வானவியல் ஆய்வாளர்களை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹிலாரி கிளிண்டன் தெரிவிக்கும் போது, “முன் அனுமானங்களும், பயமும் நம்மை எப்போதும் பாதுகாப்பாக வைக்காது. அகமட், உன் ஆர்வத்தை தொடரு. தொடர்ந்து ஆக்கபூர்வமாகச் செயல்படு” என்று ட்வீட் செய்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். “சிறுவன் அகமதுவின் இத்தகைய கண்டுபிடிப்பு கரகோஷத்தை கோருவது, கைது செய்யப்படுவதை அல்ல. அகமட் போன்றவர்களின் கையில் எதிர்காலம் உள்ளது. பேஸ்புக் மூலம் உன்னைச் சந்திக்க விரும்புகிறேன்.

கூகுள் நிறுவனமும், அகமதுவை அறிவியல் கண்காட்சிக்கு அழைப்பு விடுத்து, “உன் கெடிகாரத்தைக் கொண்டு வா” என்று விதந்தோதியுள்ளது.

அந்த சிறுவன் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
நன்றி Source : http://tamil.thehindu.com

No comments: