Monday, July 20, 2015

உனக்குப் பிடிக்காத என் நட்பு வட்டம் ‪/ நிஷாமன்சூர்‬

என் நண்பர்களை உனக்குப் பிடிப்பதில்லை
ஏனெனில் அவர்கள் அழுக்கன்களாக இருக்கிறார்கள்
நீ அறிந்திருக்க நியாயமில்லை,
நானும் அந்த அழுக்கன்களில் ஒருவனாக இருந்தேன் என்பதை.

என் நண்பர்களின் குடும்பத்தினரை உனக்குப் பிடிப்பதில்லை
ஏனெனில் அவர்கள் என்மீது அதிக உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்
நீ அறிந்திருக்க நியாயமில்லை,
நான் படுமோசமாகத் தோற்று நின்றசமயம்
தம் கழுத்தில் கிடந்த சொற்ப நகைகளையும் கழற்றிக் கொடுத்தவர்கள் அவர்களென்பதை.


என் நண்பர்களின் தங்கைகளை உனக்குப் பிடிப்பதில்லை
ஏனெனில் அவர்கள் என்னைக் கண்டதும் அதீதமாய் மலர்கிறார்கள்
நீ அறிந்திருக்க நியாயமில்லை,
என் டிஃபன் பாக்ஸிலிருக்கும் பழைய சோற்றை எடுத்துத் தின்றுவிட்டு
தக்காளி சோற்றை முட்டையுடன் வைத்துத்தந்த தேவதைகள் அவர்களென்பதை.

என் நண்பர்களின் தந்தைமார்களை உனக்குப் பிடிப்பதில்லை
ஏனெனில் அவர்கள் என்னை "டா"போட்டு அழைக்கிறார்கள்
நீ அறிந்திருக்க நியாயமில்லை,
வெறுங்கையோடு அநாதைபோல் வீட்டைவிட்டு வெளியேறியவனை
ஏன் எதற்கென்று கேட்காமல் நாட்கணக்கில் ஆதரித்தவர்கள் அவர்களென்பதை.

ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் உன்னை மிகவும் பிடிக்கிறது
ஏனெனில் நீ என் மனம் கவர்ந்த காதலி
ஏனெனில் நீ என் குழந்தைகளின் தாய்
ஏனெனில் நீ என்னில் சரிபாதி
எனெனில் நீ என் முகமலர்ச்சியை நிர்ணயிக்கும் கண்குளிர்ச்சி என்றறிந்தவர்கள் அவர்கள்.

நீ அறிந்திருக்க நியாயமில்லை,
நீ என்னை நேசிக்கும்போதெல்லாம் அவர்களையும் சேர்த்துதான் நேசிக்கிறாய்
நீ என்னை மகிழ்விக்கும்போதெல்லாம் அவர்களையும் சேர்த்துதான் மகிழ்விக்கிறாய்

இன்னொன்றையும் நீ அறிந்திருக்க நியாயமில்லை,
நீ அவர்களை புறக்கணிக்கும்போதெல்லாம் என்னையும் சேர்த்துதான் புறக்கணிக்கிறாய்..!
Nisha Mansur

No comments: