Sunday, July 19, 2015

உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.!!!

மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது பல சொந்தபந்தங்களை உள்ளடக்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டுபோவதாகும். உறவுகள் மனிதனது வாழ்வில் மிகமிக அவசியமான ஒன்றாகவும் திகழ்கிறது. ஒருகாலத்தில் குடும்ப உறவுகள் புரிந்துணர்வுடன்,சகிப்புத் தன்மையும் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து உறவுகளில் விரிசலடையாமல் பாதுகாத்து அதிகபட்சமாக ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்.


அப்படி மகிழ்வுடன் கூடிவாழ்ந்த உறவுகளின் இன்றைய நிலையை பார்ப்போமேயானால் பரிதாபமாக இருக்கிறது. உறவுகளுக்குள் புரிந்துணர்வு இல்லாமல் சின்னச்சின்ன பிரச்சனைகளெல்லாம் பெரிதாக்கப்பட்டு சின்னாபின்னமாக பிரிந்து உறவுகள் உடைந்து போய்க்கொண்டு இருக்கிறது.பாசங்களும் பந்தங்களும் மனதைவிட்டு பிரிந்து சிதறிக் கொண்டிருக்கிறது. உறவுகள் வலுப்பெற்று இருந்தால் குடும்பங்கள் மேலோங்கியிருக்கும்.இதை உணர்ந்து நடந்து கொண்டோமேயானால் வாழ்நாள் முழுதும் உறவுகளுடன் மகிழ்வோடு வாழலாம்.

எனவே உறவுகள் மேம்பட நல்லுபதேசங்களுடன் கூடிய வழிமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

1,எந்த உறவுகளானாலும் உறவுகளுக்குள் ஏற்ப்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை வரவேண்டும். [அப்படி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் அங்கு பிரச்சனைகள் முற்றுப்பெரும்.]

2,பிறர் சொல்வதை கேட்டு நம்பிக்கொண்டு அதை மனதில் வைத்து பகைமையை வளர்த்துக்கொள்ளாமல் கேள்விப்பட்டதை உடனே நேரில் கேட்டு உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.[ அப்போதுதான் மனம் நிம்மதியடைத்து பகைமை தீரும் ]

3,குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகள் வரும்போது குடும்பத் தலைவர்கள் குடும்பத்திலுள்ள பெரியோர்கள் ஈடுபட்டு பிரச்சனை என்னவென்று நன்கு தீர விசாரித்து நடுநிலையாய் இருந்து இருவரையும் சமாதானப்படுத்தி ஒற்றுமையுடன் சேர்ந்திருக்க புத்திமதிகளை எடுத்துரைக்க வேண்டும்.[அப்படியல்லாமல் குடும்பப் பெரியோர்கள் ஒருதலைப்பட்சமாக இருந்தால் பிரச்சனை மேலும் வளர வாய்ப்பாக இருக்கும்.]

4,அனாவிசயமான வார்த்தைகளை அவசரப்பட்டு உபயோகப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.[வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டால் திரும்பப்பெறமுடியாது. காலத்திற்கும் மனம் சஞ்சலப்பட்டு வேதனையடையும்.அதனால் மேலும் உறவில் விரிசலே அடையும் ]

5,வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளை எல்லாம் வெளி மனிதர்களிடமோ அண்டை வீட்டார்களிடமோ சொல்லிக் காட்டுதல் கூடாது. [என்றைக்காவது ஒருநாள் சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்கும்போது சுவற்றில் அடித்த பந்துபோல திரும்ப அந்த வார்த்தைகள் நமக்கே வந்து விழும்.]

6,குழந்தைகளுக்குள் ஏற்ப்படும் பிரச்சனைகளில் பெரியவர்கள் தலையிட்டு அதை பெரிதுபடுத்தாமல் அக்குழந்தைகளை அன்புகலந்த கண்டிப்புடன் அறிவுரை சொல்லவேண்டுமேயன்றி தகாத வார்த்தைகளால் மற்றவர்களையும் இழுத்து திட்டுவதை வசைபாடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். [அநேக குடும்பங்களில் இப்படி நடப்பதால்தான் பிரச்சனை வேறுபக்கம் திசைமாறி தேவையில்லாத புதுப்பிரச்னைகள் ஏற்ப்பட வாய்ப்பாகிவிடுகிறது.]

7,குடும்பத்தில் நடக்கும் விசேச காரியங்களுக்கும் மற்ற ஏனைய செய்திகளுக்கும் குடும்ப உறுப்பினர்களிடமும் சொந்தபந்தங்களிடமும் கலந்து ஆலோசனைகேட்டு உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.[அப்படி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொண்டால் எந்த பிரச்சனையானாலும் பெரிதுபடுத்திபேச மனம்வராமல் பொறுத்துக் கொள்ளும் மன பக்குவம் அடைந்து விடுவார்கள்.]

8,ஒருவரது சண்டைக்காக மொத்த குடும்ப நபர்களும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கக் கூடாது. மற்றவர்கள் எப்போதும்போல சகஜநிலையில் பேசிக்கொள்ளவேண்டும். [அப்போதுதான் கோபம் தணிந்தபின் கொஞ்சநாளில் சமாதானமாகிபோக மனம்வரும் ]

9,குடும்ப உறவுகளுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும்போது குழந்தைகளிடம் அந்த உறவினர்களைப் பற்றி தவறான அபிப்பிராயம், வெறுக்கும்படியான செய்திகளை சொல்லி மனதில் விஷச்செடிகளை முளைக்க வைக்க கூடாது..[ இதனால் மேலும் உறவில் விரிசல் அடைவதுடன் வருங்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு அந்த குறிப்பிட்ட உறவினர்கள்மேல் பாசமில்லாமல் அவர்களை எதிரிகளாய் நினைக்கவைக்கும்.]

10,அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் சொற்பகாலம் வாழ ஏன் நமக்குள் சண்டைவம்பு வைத்துக் கொள்ளவேண்டுமென பிற உறவினர்கள் தமக்கு அறிந்த சில உதாரணங்களை எடுத்துச் சொல்லி உணரவைத்து முடிந்தவரை ஒற்றுமையை ஏற்ப்படுத்த முயற்சித்தல் வேண்டும். [ செண்டிமெண்டல் ( Sentimental ) பேச்சு சிலசமயம் சிந்திக்கவைக்கும்.]

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பதுடன் அக்கம்பக்கத்தாருடனும் பிற மனிதர்களுடனும் அன்பும், பாசமும், இரக்கமும், மனிதநேயமும், முடிந்த உதவிகளும், மென்மையான அணுகுமுறையுடனும் நடந்து வந்தால் நாம் அனைவரது அன்பைப் பெறுவதுடன் ஊராரும்,உறவாரும் போற்றும் உயர்ந்த மனிதராக எல்லோரிடத்திலுமான உறவுகள் மேம்பட்டு மகிழ்வுடன் ஒற்றுமையாய் வாழ வழிவகுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

அதிரை மெய்சா
http://www.adiraimysha.blogspot.ae/

No comments: