Sunday, July 19, 2015

தமிழருக்கு எதிரான கூட்டங்கள் தலைதெறிக்க ஓடியே விடட்டும் !

பிரிந்திருக்கும் எதிர்கட்சிகளின் இணைந்த கைகள் உறுதியாய் உயரமாய் எழுந்த நேரங்களில் எல்லாம், யாருடனோ ஒட்டிக் கொண்டிருந்த வெற்றி மகள் ஓடித் தேடி வந்து அடைக்கலமானதே இந்திய வரலாறுகளாக இருந்து கொண்டிருக்கிறது. அலையென மக்கள் தலைகளும், போகவும் வரவும் முடியாத போக்குவரத்து ஸ்தம்பித்தலும் ஏழு கிலோ மீட்டர்கள் நடந்துதான் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, நடப்பில் இருக்கும் தமிழக அரசியலை அடியோடு மாற்றிப் போட்ட ஒரு நிகழ்ச்சி என்றோ, ஒவ்வொரு தமிழனையும் தன்னிலை அறிய வைத்த உன்னத மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டதென்றோ சொல்லி வைக்க முடியாத நிலைதான்.
காரணம், மக்களின் பாதிப்புக்களை சொல்லிய போது கையாண்ட வார்த்தைகள் உணர்ச்சியை தட்டி எழுப்பவில்லை, கட்சியின் நிலைப்பாடு கடந்து மக்களின் அடியுணர்வுகள் அவர்களின் பாஷையில் அங்கலாய்க்கப்படவில்லை, அடச்சீ... இப்படியும் ஒரு அரசா என்று கூட்டத்திலிருந்து திரும்பி வரும் கட்சியை சாராத ஒரு பொது மனிதன் சொல்லாத வரை, நிகழும் அரசியல் நிலையில் தாக்கம் எதுவும் ஏற்பட்டு விடவில்லைதான்.

இனி எல்லா தரப்பு மக்களும் முழுமையாக இணைந்து கொள்ளும், சகோதர கட்சிகளும் ஒருசேர குரல் கொடுத்து, நடந்து போகிறவர் காதுகளில் அது எதிரொலித்து, நாடு மொத்தமும் மெத்தவே உணர்ச்சி கொள்ளும் ஒரு அதிச்சியை ஏற்படுத்திட வேண்டும், அந்த அதிர்ச்சியே நிலை தடுமாறி இருப்பவர்களுக்கு அடியோடு சாயும் வீழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும், கூட்டங்கள் இனியும் தொடரட்டும், தமிழருக்கு எதிரான கூட்டங்கள் தலைதெறிக்க ஓடியே விடட்டும் !
 
Raheemullah Mohamed Vavar

No comments: