Sunday, July 19, 2015

மிதக்கும் தீவுகள் ....!





உகாண்டாவில் இருந்து தொடங்கும் நைல்நதியின் தாயான விக்டோரியா ஏரியில் சிறிதும் பெரிதுமாக பல தீவுகள் உள்ளன.

சிறிய தீவுகள் மீனவர்களுக்கு மாற்றுத் தங்குமிடமாகவும் மரங்களை வெட்டி எரித்து கரியாக்கி காசாக்கும் கயவர்களுக்கு சொர்கபுரியாகவும் இருக்கிறது. பெரிய தீவுகளில் விவசாயம் செய்து மக்களும் வசிக்கின்றனர்.

நீர் எல்கையில் இருக்கும் தீவுகளுக்கு இரண்டு பக்கத்து நாடுகள் உரிமம் கொண்டாடி சச்சரவுகளும் அவ்வப்போது அரங்கேறும்.

விக்டோரியா ஏரியில் மிதக்கும் தீவுகளும் உள்ளன. காற்றின் திசைக்கு ஏற்ப அவை பயணிக்கவும் செய்யும். மிகப் பெரிதாதாக 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தீவு சமயங்களில் காற்றின் வீரியம் காரணமாக தாய்க்கரையை கூட அடைத்து விடுவதுண்டு. மறுபடியும் காற்று உள்நோக்கி அடிக்கும் பொது கரையை பிரிந்து ஏரியின் உட்புறம் சென்றுவிடும்.

உகாண்டா நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. ஆனால் இங்கிருக்கும் மிகக் பெரிய விக்டோரியா ஏ ரி கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் நடுவில் அமைந்திருப்பதால் இதில் கப்பல் போக்கு வரத்து நடக்கிறது.

இரு நாட்களுக்கு முன்னர் கம்பாலாவில் விக்டோரியா ஏரியில் அமைந்துள்ள துறைமுகத்திற்கு Old Port Bell சென்றபோது ஒரு மிதக்கும் தீவு துறைமுகத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக அடித்திருக்கக் கண்டேன்.

இந்த மிதக்கும் தீவுகள் எப்படி உருவாகிறது?

ஏரிக்கரையோரம் நீரில் வளரும் தாவரங்களின் வேர்கள் வலைபோல பின்னிக்கொள்ள மக்கிய தாவரங்கள் அதன் மேல் விழுந்தும் நிலத்தில் இருந்து காற்றால் அடித்து வரப்பட்ட மண்ணும் புழுதியும் அதன்மேல் விழுந்து சதுப்பு நிலப்பரப்பு போன்ற ஒரு வகைப் பரப்பு உருவாக்கி அதில் தாவரங்களும் மரங்களும் கூட வளர்ந்து தாய்க் கரையின் நிலப் பரப்பாகவே மாறிவிடுகிறது.
இருந்தாலும் மிதந்து கொண்டுதான் இருக்கும்.
மிகப்பலமான காற்று வீசும்போது நிலத்தில் இருந்து பிரித்து இழுத்து செல்லப்பட்டு தனித் தீவாக மாறிவிடுகிறது.
 
ராஜா வாவுபிள்ளை

No comments: