Sunday, July 19, 2015

சொல்லத் தோணுது 40 - மாயமான்!

 ...தங்கர் பச்சான்


 விளம்பரபற்ற மனிதர்களை கவனிக்க எப்படி ஆட்கள் இல்லையோ, அப்படித்தான் விளம்பரமற்றப் பொருட்களும். ஆனால், தகுதி இல்லாத ஒன்றை கூவிக் கூவி விளம்பரப்படுத்தினால், ஒன்றுக்கும் உதவாத உயிரைக் கொல்கிற பொருட்களையும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வைத்துவிட முடிவும். பணம் இருந்தால் யாரையும், எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். எந்தப் பொருளையும் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வாங்கும் அளவுக்கு பித்து பிடிக்க வைத்துவிடலாம். பணம் இருந்தால் எந்த விளையாட்டையும் விளம்பரப்படுத்தி அனைவரையும் ஈர்த்துவிடலாம் என்பதெல்லாம் நடைமுறையில் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகள்.

உணவும், நீரும் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறு முக்கியமானதுதான் விளையாட்டும். ஆனால், இளரும் தலைமுறைகள் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

கிரிக்கெட் எனும் மட்டைப் பந்து விளையாட்டு எனக்கு அறிமுகமானபோது என்னை அது ஈர்க்கவே இல்லை. அதற்கு தரப்படுகிற முக்கியத்துவத்துக்குரிய தகுதி அந்த விளையாட்டுக்கு இல்லை என்பதும், அதற்கான அதிரடி விளம்பரங்களும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை கண்ணி வைத்துப் பிடிக்கும் அதன் மாய வலையில் ஒளிந்திருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டதாலும், இன்று வரை அந்த மட்டையை நான் தொட்டதுகூட இல்லை. என் மகன்களுக்கும் இதில் ஈடுபாடு இல்லாமல் போனதும் எனக்கு வியப்புதான்.

இந்திய சாலைகளில் நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் எல்லா இடங்களிலும் காணக்கூடியது, திறந்த வெளிகளில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், ரியல் எஸ்டேட் எனும் பெயரில் விளைநிலங்களை முடக்கி, நிலங்களில் வேலியமைத்து, பல வண்ணங்களைத் தீட்டி வைத்திருப்பதையும் காணலாம்.

ஆங்கில மொழியையும், அவனது கலாச்சாரத்தையும், அவனது விளையாட்டையும் நம்மேல் திணித்து, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக நம் தேசிய இனங்கள் பேசி வந்த மொழியையும், நமது உணவு மற்றும் கலாச்சாரத்தையும், நமது அடையாளத்தையும் இன்று மதிப்பிழக்கச் செய்துவருவது குறித்த சிந்தனையோ, கவலையோ எவருக்கும் இல்லை.

தொடக்கத்தில் வானொலி மூலமும், பின்னர் தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தக் கிரிக்கெட், நான்காயிரம் ஆண்டுகளுகு முன்பிருந்தே விளையாடி வந்த நம் விளையாட்டுகளை நாற்பதே ஆண்டுகாலத்தில் நம்மிடம் இருந்து விரட்டியடித்துவிட்டது.

கிரிக்கெட் என்பது எல்லாவற்றையும் போல் அதுவும் ஒரு விளையாட்டு, அதனை விளையாடுபவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை மறக்கடித்து, 'அதுதான் சிறந்த விளையாட்டு' என்பதுபோலவும், அவர்கள்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் எனவும், தெய்வங்களுக்கு இணையாக போற்றும்படியான மனநிலையை விதைத்துவிட்டனர். இந்த விளையாட்டின் மூலம் பணம் குவிக்கும் அந்த வீரர்களுக்கோ, அவர்களை இயக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கோ மட்டுமில்லை; இந்த ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

எல்லா நாடுகளிலும் ஏன் கிரிக்கெட் இல்லை? எல்லா நாடுகளிலும் ஏன் இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தவில்லை. ஏனெனில், சில பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் முதலாளிகளும், தரகர்களும் தங்களின் பொருட்களை மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில்தான் விற்க முயற்சிப்பார்கள். அந்த வகையில் அனைத்து பன்னாட்டு முதலாளிகளின் பார்வையில் இந்தியா முதல் வரிசையில் நிற்கிறது. அவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு கிரிக்கெட் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்.

கிரிக்கெட் முதலில் அந்த வீரர்களுக்கு விளம்பரம் தேடித் தரும். அதன்பின், அவர்கள் பலபொருட்களுக்கு விளம்பரம் தேடித் தருவார்கள். இது இரண்டையும் இணைத்து முதலாளிகள் தங்களின் தொழிலுக்கு மூலதனமாக்கி நம்மை முட்டாளாக மாற்றுவார்கள்.

கிரிக்கெட் இந்திய மக்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விளையாட்டாகவே இன்று மாறிவிட்டது. இந்திய அணியின் தோல்வியினால் பாதிக்கப்படாதவன் நாட்டுப்பற்று இல்லாதவனாக கருதப்படுகிறான்.

கிரிக்கெட் வீரர்களாகும் கனவில் காட்டிலும் மேட்டிலும் சாலைகளிலும் விளையாடி வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வஞ்சிக்கப்பட்டு, படிப்பு கெட்டு வாழ்க்கையை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கிரிக்கெட் மாயை, மற்றவர்களை ஏமாற்ற நடத்தப்படும் கண்ணாமூச்சி என எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இது ஒரு நவீன சூதாட்டம். பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வியாபாரச் சந்தை. அவர்களுக்கு மட்டுமே பயன்படும் விளம்பரக் கொண்டாட்டம். ஆரவாரத்துடனேயே அதனைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் போடப்படும் விளம்பர விஷ ஊசி என்பதெல்லாம் இன்னும் புரியாமல் இருப்பதுதான் கொடுமை.

கிரிக்கெட் வீரர்கள் குடிக்கிற குளிர்பானத்தை எல்லாம் ரசிகர்களும் பொதுமக்களும் ஏன் விழுந்து விழுந்து குடிக்கிறார்கள். அதில் பூச்சிக் கொல்லி இருந்தால் என்ன? பாம்பு விஷம் இருந்தால் என்ன? அதனைக் குடிப்பதைப் பெருமையாக நினைப்பதையும், கிரிக்கெட்தான் உயர்ந்த விளையாட்டு என நினைப்பதையும் எப்போது மாற்றிக் கொள்வார்கள்?

'விளையாட்டு என்பது உடலுக்கு உறுதி; உள்ளத்துக்கு பலம்' என்பதை மாற்றி, விளையாட வேண்டியவர்களை எல்லாம் விளையாடுபவர்களைப் பார்த்தால் போதும் என்று மாற்றியிருக்கிறார்களே, இதுவொன்று போதாதா கிரிக்கெட்டின் தரத்தை உணர்ந்து கொள்ள.

வெற்றி, தோல்விகளை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு விளையாடும் விளையாட்டு இதைத் தவிர உலகத்தில் வேறெதுவும் இல்லை. 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு' என்பது நாடகம், சினிமாக்களில் மட்டும்தான் நிகழும். அதை முதன்முறையாக விளையாட்டில் நுழைத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஐந்து நாட்கள் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்களுக்குப் பொறுமையில்லை. எப்போதாவது விழும் விக்கெட்டுகளையும்; ஒன்றிரண்டு முறை மட்டுமே விழும் சிக்ஸர்களையும் பார்த்து ரசிகர்கள் சோர்ந்து போனார்கள். இதன் காரணமாக - கிரிக்கெட்டின் புகழ் சரிவதை மீட்க, உடனே அதை ஒருநாள் போட்டியாக மாற்றி புத்துயிருட்டினார்கள். ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித் தனி வண்ண ஆடைகள், நிமிடந்தோறும் பரபரப்பு என திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அதனாலலேயே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து, ஒரு வியாபாரமாக பரிணாமம் அடைந்துள்ளது.

பணம் கொழிக்கும் எந்தத் துறையிலும் அரசியலும், ஊழலும், முறைகேடுகளும் நுழைவததைப் போல் கிரிக்கெட் வாரியமும் விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாத அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும் கூட்டணி அமைத்து வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.

ஒரு முக்கியப் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் போதும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் அந்த வீரர்களிடத்தில் பாசமழை பொழிந்து மக்களின் வரிப் பணித்தில் இருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சொகுசு பங்களாக்களையும், உயர்ந்த விருதுகளையும் பரிசளிக்கிறார்கள். இப்படியான புகழைக் கொண்டு கோடி கோடியாக பணத்தை அந்த வீரர்கள் சேர்த்துவிடுவதைக் காணும் ரசிகர்கள், தாங்களும் அவர்களைப் போல மாறும் கனவின் மாயவலையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

எப்போதுமே உடல் உழைப்பு செய்து வாசிக்கும் தவில், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை விட்டுவிட்டு வெறும் விரல்களால் இயக்கும் இசைக் கருவிகளை மட்டுமே இசைப்பவர்களும், ஒரு சில இசுலாமியர்களையும் தவிர்த்து வேறு எவரும் இந்த அணியில் எளிதில் இடம்பெற்றுவிட முடியாது. இது புரியாத இந்த இளைஞர் கூட்டம் இன்னும் ஏமாந்து கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒருநாள் போட்டியும் சலித்துப் போய், இப்போது 20:20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்த 20 ஓவர் போட்டிகள் இன்னும் மிகப்பெரிய சூதாட்டத்தின் ஆடுகளமாக உருவெடுத்துள்ளது. ஊழல் புரையோடிப் போன இந்த கிரிக்கெட்டுக்கு இந்த அரசாங்கங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கின்றன?

40 ஆண்டுகளுக்கு முன் நாம் விளையாடிக்கொண்டு இருந்த விளையாட்டுக்கள் எல்லாம் விளையாட்டுக்கள் இலையா? இப்படியேத்தான் அடுத்தடுத்து தலைமுறைகளும் இதனைத் தொடரப்போகிறதா?

ஒரு குற்றத்தை தனியாகச் செய்தால் அது தவறு; அதையே கூட்டமாக முறைப்படுத்தி செய்தால் அது வியாபாரம். விளையாட்டு எனும் போர்வையில் வியாபாரம் நடத்தி, நம் மக்களையும் சோம்பேறிகளாக மாற்றும் இந்த 'சூதாட்ட' விளையாட்டு ஒரு 'மாயமான்' என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?

- சொல்லத் தோணுது...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

    Thankar Bachan ...தங்கர் பச்சான்
நன்றி Source :http://tamil.thehindu.com/

No comments: