Sunday, January 19, 2014

படைத்தவன் பற்றிய சிந்தனை..!


"படைப்பினங்களைப் பாருங்கள். அவைகளைப் பற்றி சிந்தியுங்கள்
படைத்தவனைப் பற்றி சிந்திக்காதீர்கள் " என்பது நபிகள் வாக்கு.

படைக்கப்பெற்ற பொருட்களைப் பற்றி சிந்திக்கும்படி அருள் மறையே வேண்டுகிறது.

"அவர்கள் பார்க்கவில்லையா
ஒட்டகம் - அது எவ்வாறு படைக்கப் பட்டிருக்கிறது
வானம் - அது - எவ்வாறு உயர்த்தப் பட்டிருக்கிறது
மலைகள் - அவை எவ்வாறு நடப்பட்டிருக்கின்றன
பூமி - அது எவ்வாறு விரிக்கப் பட்டிருக்கிறது...?"

இப்படிப் பல வசனங்கள்.

மனிதன் சிந்தனை வளர வேண்டும் என்பதும் அதன் வழி அவன் இறைவனை அடைய வேண்டும் என்பதும் அருள் மறை - நபி மொழிகள் வழி அறிய வரும் உண்மை. உண்மையிலேயே இதனை மனம் கொள்பவர்களுக்கு நேர்வழி நிச்சயம்.

விஞ்ஞான உயர்வுகளி ன் உச்சங்கள் எல்லாம் இஸ்லாத்தை மெய்ப் பித்திருக்கின்றன . யாரும் மறுக்க முடியாது. அவற்றை விளக்கப் புகுந்தால் தனி கட்டுரை அளவு விரியும்.

அப்படி தாங்கள் கண்ட ஆய்வு களின்படி இஸ்லாத்தை ஏற்ற பிற சமய அன்பர்கள் ஏராளம். ஒன்றும் அறியாதவர்கள் அல்லர் அவர்கள். மெத்தப் படித்த மேதாவிகள், அறிவியல் துறையில் ஆழம் கண்டவர்கள்.

ஏன் இன்றும் கூட ஒரு நிலைக்கு மேல் உள்ள நிலையை விளக்கப் புகும் விஞ்ஞானிகள் 'மாபெரும் சக்தி' ஒன்றின் மகத்துவம் கண்டு வியக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த மாபெரும் சக்தியைத்தான் நாம் இறைவன் என்கிறோம்.

சராசரி மனிதனுக்கு இவை போதும்.

இறைவனைப் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்லி தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவது விரும்பத் தக்கதல்ல..!

ஏனெனில் மனிதன் இரத்தம் ஓடும் இடமெல்லாம் சைத்தான் ஓடுகிறான் என்பதும் நபிகள் வாக்குத்தான்.

அறிவின் உச்சம் எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் . சரி, அப்படியானால் அந்த இறைவனைப் படைத்தவன் யார் என்பதில் முடியுமாம்.
அப்படிப்பட்ட காலம்தான் இது.

மெய்ஞான ரகசியங்கள் அறிந்தவர்கள் தவிர மற்றவர்க்கு அவை எளிதில் புரிவதில்லை.
அவர்கள் எல்லோருக்கும் புரியச் சொல்லல் வேண்டும். அப்படி நடை முறையில் இல்லை.

மெய்ஞானம் பேசுகிறேன் என்று மக்களைக் குழப்பி விடுவது மிகப் பெரும் விபரீதம்.அந்த விபரீதங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று எண்ணுபவர்கள் இப்படிப் பட்ட விவாதங்களை தவிர்ந்து கொள்ளுதல் - அல்லது மவுனித்தல் நலம்...!

Athavullah Athavullahah

No comments: