Friday, January 10, 2014

வர்க்கித்தூள்


அம்மாவை இழந்த நாட்கள்
பள்ளி இறுதிப் படிப்பு
காலையில் டிஃபன் செய்ய வாய்ப்பிருக்காது

ஏழரைமணி சிறப்பு வகுப்புக்கு
பஸ் பிடிக்க ஓடுகையில்
கத்தோ கத்தென்று கத்தும் வயிறு

ஆறு ரூபாய் பாக்கெட்மணி
மத்தியான
சோத்துக்கும் சேர்த்து

பசிக்கு
வர்க்கித்தூள் வாங்கிச் சாப்பிடுவேன் பஸ்ஸில்
ஒரு ரூபாய்க்கு கைநிறையக் கிடைக்கும்

பிரித்துவிட்ட ஸ்டேப்ளர் பின்னுடன்
சிலசமயம்
வழுக்கி விழுந்த நிலவுபோல்
முழு வர்க்கியும் வந்து விழும்

இறங்கினதும் ஓட்டமாய் ஓடி
ஒரு
சிங்கிள் டீ

சமாதானமான வயிறு
ஒருவித
வாசனையாய் ஏப்பமிட்டு குதூகலிக்கும்,

எங்கெங்கோ போனது காலம்
அடிபட்டு
அடிபட்டு மரத்துப்போன மனசு
எல்லாம் மாறிடுச்சு இப்போ
அம்மா மாதிரி பாட்டி
அரவணைத்து அன்போடசைந்த மனசு
சந்தோசமோ சாப்பாடோ
கொஞ்சம் தொந்தியும் போட்டு விட்டேன்

இன்று
நண்பன் வீட்டு உபசரிப்பில்
வர்க்கித்தூள்.
"நீயெல்லாம் சாப்பிடுவாயாடா"
கேள்வியுடன் பரிமாறல்
திரும்புகையில்
அப்போது போலவே ஏப்பம்....
வர்க்கி ஏப்பத்திற்கு
எப்பவுமே தனி வாசனை...!!

Nisha Mansur  -நிஷா மன்சூர்

No comments: