Friday, January 3, 2014

இறைவா! என்னை மன்னிப்பாய்! (கவிதை)

ஆளோ அவளோ ஒருசிறுமி
அன்று பார்த்தேன் பயணத்தில்
நீளும் விழிகள் சிரித்திருக்கும்
நீண்ட கூந்தல் தங்கநிறம்
மாலைப் பரிதி போன்றிருக்கும்
மனதைத் தீண்டும் வண்ணமவள்
கோல மயில்போல் மகளெனக்கு
கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச

-
இறங்கிச் செல்ல எழுந்தவளும்
எடுத்தாள் செயற்கைக் கால்களையே
பறங்கிப் பூவைப் போன்றமகள்
பாவம் கால்கள் இல்லாமல்!
கிறங்கிப் போனேன் புலம்பிவிட்டேன்
கால்கள் உண்டே நான்செல்ல!
இரக்கப் பார்வை எனக்குள்ளே
இறைவா! என்னை மன்னிப்பாய்!
-
கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?
-
இனிப்பை விற்றார் ஒருமனிதர்
எழுந்து போனேன் வாங்கிடவே
இனிமை சொல்லால் வென்றவர்க்கு
இதய வாழ்த்தை சொல்லிவிட்டேன்
பணிந்து நன்றி தெரிவித்து
பார்வை தனக்கு இல்லையென்றார்
நினைத்தேன் இறைவா என்னிலையை!
நல்ல பாடம் படித்துவிட்டேன்
-
கருணை செய்தாய் காருண்யா!
கண்கள் பனித்தே கலங்குகிறேன்
இரவைப் பகலை இவ்வுலகை
இனிதாய் நானும் பார்க்கின்றேன்
இரவும் பகலும் தொழுதாலும்
இருகண் அருளுக்(கு) இணையிலையே!
அருளைப் பொழியும் என்னிறையே
அடியேன் என்னை மன்னிப்பாய்!
-
(கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?)
-
அழகுச் சிறுவன் ஒருவனையே
அன்று பார்த்தேன் வீதியிலே
பழகும் தோழர் விளையாட்டில்
பாவம் இவனோ தனிமையிலே!
சுழலும் பார்வை பார்த்தவனை
சேர்த்தே அணைத்து கேட்டுவிட்டேன்
அழகாய் நீயும் விளையாடேன்
ஆனால் அவனோ கேட்கவில்லை
-
நகர்ந்து சென்ற சிறுவனுக்கு
நிலையாய் செவியின் திறனில்லை
பகர்ந்தார் பிறரும் என்னிடத்தில்
பாவப் பார்வைப் பார்த்துவிட்டார்
தகர்ந்தேன் நானும் என்னிறைவா!
தந்தாய் எனக்குச் செவிப்புலனை
நுகர்ந்தேன் புலன்கள் நல்லின்பம்
நன்றி உரைக்க மறந்துவிட்டேன்
-
காதால் கேட்க முடிவதிலே
கருணை பெரிதும் உணர்கின்றேன்
நீதம் செய்தாய் என்னிறைவா
நினைத்து நினைத்து புகழ்கின்றேன்
போதம் தந்தாய் இன்றெனக்கு
பார்த்தேன்; கேட்டேன் படிப்பினைகள்
ஆத ரிப்பாய் என்றைக்கும்
அடியேன் என்னை மன்னிப்பாய்
-
(கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?)


- இப்னு ஹம்துன்


image source
Inspired by Islamic Nasheed “Forgive Me” (Song by Bro. Ahmed Bukhatir – without music)
நன்றி :http://www.islamkalvi.com/
 
நினைவில் இருத்த வேண்டிய இந்த என் கவிதைக்கு தன் அழகிய குரல்வளத்தால் சிறப்பு சேர்த்திருக்கிறார் நண்பர் பாடகர் Jafarullah Jafar.. இதனைப் பதிவிட்ட நண்பர் Mufti Inayathullah வுக்கும் ஒரு சிறப்பு நன்றி:

No comments: