Tuesday, June 4, 2013

கலைஞரோடு சில மணித்துளிகள்

கலைஞரோடு சில மணித்துளிகள்
  by நாகூர் ரூமி



சில நாட்களுக்கு முன்பு கவிஞர் இளையபாரதி அலைபேசினார். கலைஞருக்கு வயது 90 ஆகிறது. அதன் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொன்னூறு கவிஞர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அந்த 90-ல் ஒருவராக நீங்கள் வரச்சம்மதமா என்று கேட்டார். என்றாகிலும் ஒருநாள் கலைஞரைச் சந்திக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டதாக நினைத்தேன். நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது  மறுநாளோ கவிஞர் வைரமுத்துவிடமிருந்து அலைபேசி வந்தது. அவர்தான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டு செய்வதாகவும், நான் வரமுடியுமா, என் உடல்நிலை ஒத்துக்கொள்ளுமா என்றும் கேட்டார்.  இதயநாள அடைப்புக்காக நான் பாரதிராஜா சிறப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (என் தம்பி காதர் மூலமாக செய்தியறிந்து) அந்த மருத்துவமனையின் எம்.டி.க்கு அலைபேசி என்னை சிறப்பாக கவனித்துக்கொள்ளச் சொன்னவர் அவர். அவரிடமும் நாம் நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.



நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். எனினும் அரசியல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பவன். கலைஞரை இலக்கியத்தொடர்பில் எனக்குப் பிடிக்கும். அவருடைய ”தொல்காப்பியப் பூங்கா” பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். நவீன இலக்கிய நடைமுறைகளுக்கும் கலைஞருக்கும் வெகுதூரம் என்றாலும், இலக்கியத்தில் அவர் ஒரு period personality-தான். ஐந்து முறை (என்று நினைக்கிறேன்) முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எங்கள் ஜாதிக்கு (பேராசிரியர்களுக்கு) நிறைய நன்மைகளைச் செய்துள்ளார்!

ஆனால் அவரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியதற்கு இவையெல்லாம் காரணமல்ல. அவரைப்பார்க்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அவரைப் பார்க்க வேண்டுமென்று நானும் விரும்பினேன். அதுதான் காரணம்.


ஜூன் 3ம் தேதி அவருக்குப் பிறந்த நாளாம். ஆனால் அன்று அவர் கவிஞர்களைப் பார்ப்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல. அதற்கான காரணங்களை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். எனவே ஜூன் 01-ம் தேதி தாஜ் கொரமாண்டல் ஹோட்டலில் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் வழக்கமாக டாக்டரிடம் ’செக்-அப்’ செல்லும் தேதியும் ஜூன் 01 –ஆக ஒத்துப்போனது.(அன்று என் அருமை மாமா சலீம் இறைவனடி சேர்வார்கள் என்பதை இறைவனைத்தவிர வேறு யாரறிவார்?)

மாலை ஆறு மணிக்கே நான் தாஜுக்குச் சென்றுவிட்டேன். அதற்குள் நான்கு முறையாவது அலைபேசியில் வருவதை வைரமுத்து அலுவலகத்திலிருந்து கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது அது.

நிறைய கவிஞர்கள் கூட்டம். பார்க்க சந்தோஷமாக இருந்தது. நண்பர் கவிஞர் பா.சத்தியமோகன் வந்திருந்தார். நிம்மதியாகப்போனது. வைரமுத்து வந்தவுடன் நான் வந்திருப்பதை உறுதிப்படுத்தச் சென்றுபார்த்தேன். “கூப்பிடுகிறேன் ரூமி” என்றார். மீண்டும்போய் அங்கிருந்த சோஃபாக்களில் அமர்ந்துகொண்டோம். கலாப்ரியா வந்திருந்தார். கூடவே அவர் சின்ன மகளும். இது யார் பாரதியா என்று கேட்டேன். பாரதி என்ற ஒரு மகளைத்தான் எனக்குத்தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பு சின்னக் குழந்தையாக அவளைப் பார்த்தது. ஆனால் இது தாரணி என்றார். பாரதி இப்போது தென்காசியில் மருத்துவராக இருக்கிறாள் என்றார். காலம்தான் எவ்வளவு விரைவாகப் பயணிக்கிறது என்று தோன்றியது.


கல்யாண்ஜி வந்திருந்தார். அருகில்போய் “நான் நாகூர்ரூமி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். “நான் கல்யாண்ஜி” என்றார். “ம்ஹும், நான்தான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். நீங்களல்ல” என்றேன். புன்னகைத்தார்.

கொஞ்ச நேரம் கழித்து யுகபாரதியும் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. ”என்னப்பா உன்னையும் கவிஞர்கள் பட்டியலில் சேர்த்துட்டாங்களா?” என்று கேட்டேன்.

“89 பேர்  கிடைச்சுட்டாங்க. கடைசி ஆள் சிக்கலை. அந்த இடத்துக்கு நான்” என்று அவரும் கலாய்த்தார்! அப்படியே ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தோம். கோவி லெனின் வந்தார்.


கொஞ்ச நேரம் கழித்து உள்ளே போனோம். உள்ளே ஒரு ஹால் மாதிரி இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நடக்க இருந்த ஹால் அதற்கும் உள்ளே இருந்தது. நாங்கள் உள்ளே போனதும் ஒரு சிப்பந்தி சிலபல கூல்ட்ரிங்க்ஸ்களை ஏந்திக்கொண்டு எங்கள் பக்கம் வந்தார். அதில் வெள்ளையாக transparent ஆக  இருந்த ஒரு குளிர்பானம் எனக்குப் பிடித்திருந்தது. அது என்ன என்று கேட்டேன்.

“மொய்த்தா” என்றார்.

அதுக்குள்ள என்ன இருக்கு என்றேன்.

என் அப்பாவித்தனத்தை ரசித்தவராக, “லெமன் ப்ளஸ் செவனப்” என்றார். அதையே நாங்கள் வாங்கிக் குடித்தோம்.

ரொம்ப நன்றாக இருந்தது.

“கோத்தா, இதான் மொய்த்தாவா?” என்று ஒரு முணுமுணுப்பு கேட்டது. அது யுகபாரதியிடமிருந்து வந்திருக்கலாம்!

உள்ளே சென்றோம். வட்டவட்டமாக மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒன்றில் பத்துபேர் அதிகபட்சமாக அமரலாம். நாங்கள் ஹால் நடுவில் வலதுபக்கமாக இருந்த ஒரு மேஜையில் அமர்ந்து வட்டமேஜை மாநாடு போட்டுக்கொண்டிருந்தோம்.


சினிமாக்கவிஞர்கள் பலர் வந்திருந்தார்கள். பா.விஜய், விவேகா, பழனிபாரதி என. கவிக்கோ முன்னால் அமர்ந்திருந்தார். கொஞ்சநேரம்கழித்து வாலி வந்தார். மனுஷ்யபுத்திரன் ஏற்கனவே வந்திருந்தார். பல பெண்கவிஞர்கள் வந்திருந்தனர். தமிழச்சியை எதிர்பார்த்தேன். ஆனால் அவர்  அமெரிக்கா சென்றிருப்பதாக யுகபாரதி சொன்னார். ஒரு பெண்  கவிஞர் என்னைப் பார்த்து, “சார், நான் உங்க புஸ்தங்களைப் படிச்சிருக்கேன். நாங்க உங்க ரசிகைங்க” என்றார். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது. நமக்குக்கூட ரசிகைகளா!

கல்யாண்ஜி பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெண்மணி வந்தார். எல்லாரும் மரியாதையாக எழுந்துசென்று அவரைப் பார்த்தனர். எனக்கு சட்டென்று யாரென்று விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. சல்மா. என்னைப்  பார்த்த சல்மா, நான் சற்றும் எதிர்பாராதவகையில், “நல்லாருக்கீங்களா?” என்றார். பதில் சொன்னேன்.

7.20க்கு  நாற்காலி நகர கலைஞர் வந்து சேர்ந்தார். கட்சிக்காரர்கள் இல்லாமல் கவிஞர்கள் மட்டுமே இருந்த அந்தக் கூட்டம் பார்க்க வித்தியாசமாகவும், அற்புதமாகவும் இருந்தது. கலைஞரின் குடும்பத்திலிருந்து கனிமொழி வந்திருந்தார். தளபதி வந்ததாகச் சொன்னார்கள். நான் பார்க்கவில்லை.


ஒரு பெண்மணி சுருக்கமாக ஒரு முன்னுரை வழங்கினார். பின் வைரமுத்து அவர் பாணியில் கொஞ்சநேரம் பேசினார். பின்னர் ஒவ்வொரு கவிஞரையும் தனித்தனியாகப் பெயர் சொல்லி அழைத்தார்கள். என் பெயர் வந்தது. நான்  என்னுடைய ஒரு கவிதை நூலையும் (சொல்லாத சொல்), ”இந்த விநாடி” நூலையும் ‘பேக்’ பண்ணி எடுத்துச் சென்றிருந்தேன்.

கலைஞர் அருகில் சென்றதும் அருகில் நின்றிருந்த வைரமுத்து, “இவர் ஒரு நல்ல கவிஞர்” என்று சொன்னார். (என்னுடைய கவிதைகள் எதையும் அவர் படித்திருக்காதது இதற்குக் காரணமாக இருக்கலாம்). கலைஞர் புன்னகத்தார். நூல்களைக் கொடுத்தேன். “நீங்க ரொம்பகாலம் வாழணும் ஐயா” என்று சொன்னேன். அதற்கும் புன்னகை. அவ்வளவுதான். கலைஞருக்குப் பக்கத்தில் நிற்கச்சொல்லி ஃபோட்டோவுக்குப் ’போஸ்’ கொடுக்கச் சொன்னார்கள். செய்தேன். அவ்வளவுதான். இறங்கி வந்துவிட்டேன்.

முன்னால் கவிக்கோவும் பக்கத்தில் வாலியும் அமர்ந்திருந்தனர். வாலியிடம் சென்று “நாகூர் ரூமி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். ரூமி என்பது என்ன பெயர் என்று கேட்டார். அருகில் இருந்த கவிக்கோ, “பாரசீக கவிஞர் ஜலாலுத்தீன் ரூமி, பெரியவரின் பெயரை வைத்திருக்கிறார்” என்றார். “ஓ, அந்தக் குடும்பமா, அங்கிருந்தா வருகிறீர்கள்?” என்றுசொல்லி என்தோள்மீது கைபோட்டுக்கொண்டார். தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று அப்போது எனக்கு சொல்லத்தோன்றவில்லை. கவிக்கோ புண்ணியத்தால் துருக்கியின் கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் பாரசீக பரம்பரைக் கொழுந்தாகிவிட்டேன் நான்! வாழ்க ஜலாலுத்தீன் ரூமி! வாழ்க கவிக்கோ!


சலீம் மாமா வஃபாத்தானது பற்றி கவிக்கோவிடம் சொன்னேன். அவர் உங்களுக்கு மாமாவா என்று கேட்டார். ஆமாம் தாய் மாமா என்று சொன்னேன். அங்கிருந்த கவிஞர் ஜலாலுத்தீன் அருமையாக நிழல்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். சலீம் மாமாவுக்காக ஒரு இரங்கல் கூட்டம் வைக்கப்போவதாகவும் நான் வந்து பேசவேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டார். நிச்சயம் வருவேன் என்று கூறினேன். அவர்தான் நான் கலைஞரோடு  இருந்ததை அருமையாக நிழல்படமெடுத்து அனுப்பினார். அவருக்கு நன்றிகள்.

யுகபாரதி தனது மூன்று நூல்களை அட்டையெதுவும் போடாமல் ’நிர்வாண’மாகவே கொடுத்தார்.  கலைஞர் அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தார். அடடா, நாமும் அப்படிச் செய்திருக்கலாமே என்று தோன்றியது.
Source :  http://nagoorumi.wordpress.com

1 comment:

கவிதை வானம் said...

நிகழ்வை படம் பிடித்தது போல் நன்றாகவே பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்