Friday, August 12, 2011

தாறுமாறாக தாவுகிறது தங்கம்


தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது. தங்கத்தைப் பற்றிய சில கட்டுரைகளை அவ்வபோது பதிவிட்டுள்ளேன்.

கடந்த வருடம் அக்டோபரில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா? என்ற தலைப்பில் தங்கத்தின் ஏற்றத்தைப் பற்றியும், தேவை உள்ளவர்கள், சேமிப்பவர்கள், யோசிக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்களின் ஆலோசனையும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி யாராவது வாங்கி வைத்திருந்தால் இன்று அவர்களுக்கு 30% லாபத்தை தங்கம் தந்திருக்கும்.

இந்த ஒரு வாரக்காலத்தில் தங்கத்தின் போக்கு வரலாறு காணத அளவில் தாறுமாறாக விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி தாறுமாறாக விலை ஏறுவதின் காரணம் என்ன? என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம்.


எஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தகுதிக்கான ஏஏஏ குறியீட்டை ஏஏ+ ஆக குறைத்தது. அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் மீது பாய்ந்துள்ளது.

டாலரை நம்பிக்கொண்டிருந்த நாடுகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கத்தை நம்புகிறார்கள். இதில் சீனா தங்கம் சேமிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிரம் காட்டிவருகிறது, தற்போது சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு 1051.10 டன்னாக இருக்கிறது.

எத்தனை இடருகள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதைப் பற்றி அது கவலைப்பட போவதில்லை; காரணம் உலகில் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பதே காரணம். இறுதி ஆயுதமாக அமெரிக்கா நாட்டை காப்பாற்ற தங்கத்தில் கை வைக்கலாம் அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன்.

இரண்டாவது இடத்தில் ஜெர்மனியும் 3406.8 டன், மூன்றாவது இடத்தில் இத்தாலி 3005.3 டன், நான்காவது இடத்தில் பிரான்ஸ் 2435.4 டன் தங்கம் வைத்திருக்கிறது.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கத்தை நம் பாரத இந்தியா வாங்கியது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாக உயர்ந்து நம்இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை தனது அன்னிய பரிமாற்ற இருப்பை, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

முதலாவதாக தனது அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் அளவை கூட்டுதல், டாலர் தவிர யுரோ, ஏன் போன்ற பிற நாடு செலாவணிகளையும் தேவையான அளவிற்கு பரந்துபட்ட அளவில் வைத்திருத்தல் போன்றவைகளை
செய்து தனது அந்நிய செலாவணியின் மதிப்பை பாதுகாத்து கொள்கிறது

அமெரிக்கா டாலரை உலக கரன்சியாக அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது. முதல்முறையாக அமரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் குறைந்ததால் டாலரின் மதிப்பும் குறைந்து விட்டது வெகுவிரைவில் உலக கரன்சியிலிருந்து டாலர் நீக்கப்படலாம் அதன் முதல் குரலை சீனாவும் அதற்கு ஆதரவாக பிலிப்பைனும் கொடுத்திருக்கிறது.

இந்த இறுக்கமான சூழலில் கரன்சியிலிருந்து தங்கத்திற்கு நாடுகள் மட்டுமல்ல நாட்டின் கடைநிலை மக்களும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பனது தங்கமே எனக் கருதி தங்கத்தின் மீது செலுத்த தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக தங்கம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒருநாளில் 50 டாலரிலிருந்து 80 டாலர் வரை விலை ஏறிக்கொண்டிருக்கிறது.

உலக பங்குசந்தைகள் சரிந்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கம் மட்டும் ராக்கெட் வேகத்தில் மேலே சென்றுக் கொண்டிருக்கிறது. இது 2013 வரையில் செல்லும் என்பது பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்திய பங்குசந்தையில் கோல்டு ஈடிஎப் என்ற பெயரில் ஆன்லைன் தங்கம் வர்த்தகமாகிறது. டிமேட் அக்கோண்ட் வைத்திருப்பவர்கள் தங்கத்தை தங்கமாக அல்ல அதன் ஒருகிராம் விலையில் வாங்கி டிமேட் அக்கவுண்டில் வைத்துக்கொள்ளலாம்.

அவ்வபோது தங்கத்தின் விலையில் சிறு சிறு வீழ்ச்சியும் நிகழும் அந்த தருணங்களில் முதலீடு செய்ய எண்ணக்கூடியவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்…நம் நாட்டில் தங்கத்திற்கானதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அவுண்ஸ் (31.10 கிராம்) 2000 டாலரை கடக்கும் என்பது மட்டும் உறுதி.!

Source : http://kismath.blogspot.com/

No comments: